சிறுகதை – யதார்த்தம்!

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

-கார்த்திகேயன்

டுத்த படுக்கையாகக் கிடந்த அந்தக் கிழவர் கோவிந்தசாமி அன்று எதையோ எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்.  படுக்கையில் இருந்தபடியே அவர் அப்படி என்ன எதிர்பார்க்கிறார்? ஏன் இப்படி தலையைத் தூக்கி தூக்கி வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்? சண்டைகள் சமாதானமாகி ரொம்ப நாள் கழித்து குடும்பத்தோடு வந்து இருக்கும் அவருடைய கடைசி மகள் மாரியம்மாள் அப்பாவையே பார்த்துக் கிடந்தாள்.

அவரிடம் சென்று கேட்டே விட்டாள். ஒரு கட்டத்தில், "என்னப்பா அப்படி தலையைத் தூக்கி தூக்கி தெருவையே பார்த்துகிட்டு இருக்க? என்ன விஷயம்? நாங்க எப்ப வீட்டைவிட்டு வெளியில் போவோம்னு தெருவையே பார்த்துட்டு இருக்கியா அப்பா" என்றாள் மாரியம்மாள். 

கோவிந்தசாமி பெரியவர் இதையெல்லாம் கேட்டுவிட்டு தன் இளைய மகள் மாரியை அருகே அழைத்தார். “இப்படி உக்காரு தாயி" வாய் குழறிக் குழறி பேச ஆரம்பித்தார். “நான் மாறிட்டேன் தாயி. நீ எல்லாத்தையும் மறந்துபோயிட்ட.  இனி வரமாட்ட என்று நினைச்சேன். நீ எல்லாம் சமாதானமாகி இப்போ குடும்பத்தோட வந்து இருக்க.  இப்போ உனக்கு கொடுக்க என்கிட்ட ஒண்ணுமே இல்ல தாயி. படுத்த படுக்கையாய் மனசு கெடந்து துடிக்குது. உனக்கு ஏதாவது செய்யணும்னு, ஆனா இப்ப காலம் போச்சு.  என்னால ஒண்ணும் முடியாது. எல்லாத்தையும் பசங்க எடுத்துக்கிட்டாங்க. என்னால் அவங்ககிட்ட எதுவும் இப்போ கேக்க முடியல," என்று அந்தக் கிழவர் சொல்ல சொல்ல மாரியம்மா கண்கள்  கலங்கின.

"அப்பா, எனக்கு எதுவும் வேணாம்பா. கடவுள் புண்ணியத்துல இப்ப நாங்க நல்லா இருக்கோம். உங்க பேத்தி ஒண்ணாவது படிக்கிறா. சுட்டியா இருக்கா. நாங்க நல்லா வசதியாத்தான் வாழறோம். எந்த அப்பனுக்குத்தான் கோபம் வராது. யாரோ ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போயிட்டா? உங்க கோபம் நியாயமான கோபம் அப்பா. எவ்வளவு பெரிய உழைப்பாளி நீங்க” என்று மாரியம்மாள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு அந்த கோவிந்தசாமி பெரியவர் “அதான் இன்னைக்கு தபால்காரரை எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். எனக்கு முதியவர்களுக்கு பென்ஷன் ஆயிரம் ரூபாய் வரும். நம்ம ஏரியா தபால்காரர் மாசம் மாசம் வீட்டுக்கே வந்து தந்துவிட்டு போவாரு. இன்னைக்கு வரணும். வந்தா ஒரு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். என் பேத்திக்கு கொடுக்கணும்னு ஆசையாயிருக்கும். இப்பத்திக்கு அதை பேத்திகிட்ட கொடுத்துட்டா கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கும் மாரியம்மா" என்று இரும்பியபடியே விவரித்தார்.

“பார்த்து பார்த்துப்பா... உங்களால பேசவே முடியல. நீங்க ஒன்னும் பேச வேண்டாம். அப்படியே படுங்க. என் மகளுக்கு நீங்க ஒன்னும் தர வேண்டாம்” என்று அவரை ஆசுவாசப்படுத்தி, படுக்க வைத்து, போர்வையைப் போர்த்திவிட்டு மாரியம்மா அந்த கீற்றுக் கொட்டகையில் இருந்து விடுபட்டு பின்னால் இருந்த கல் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

ஒரு வயதுக்கப்புறமா படுத்த படுக்கையாகிவிட்டால் முதியவர்களுக்கு வீட்டில்கூட இடம் கிடைப்பதில்லை. ஒரு மாட்டுக் கொட்டகைபோல் அந்த வீட்டின் முன்னால் கீற்றுக் கொட்டகை கட்டி கோவிந்தசாமியை கீழே கிடத்தி இருந்தார்கள். எல்லாமே அவருக்கு அங்கேயேதான்.

நேரம் ஒடிக்கொண்டிருந்தது. ஆனாலும் கோவிந்தசாமி கிழவருக்கு எப்படியாவது பேத்திக்கு ஏதாவது கொடுத்துவிட வேண்டும் என்று அளப்பரிய ஆசையில் மீண்டும் மீண்டும் தன் தலையை தூக்கி தபால்காரரை எதிர்பார்த்திருந்தார். அந்நேரமே தபால்காரர் வந்தார் கையில் தபால் பை சகிதமாக.

"என்ன கோவிந்தசாமி தாத்தா?" என்று கேட்டுக்கொண்டே அந்த கொட்டகையினுள் வந்தார் அந்த தபால்காரர். ஏதோ கடவுளாய் தெரிந்தார் தபால்காரர் அன்று அந்த கோவிந்தசாமி தாத்தாவுக்கு. "தாத்தா முதியோர் பென்சன் வந்திருக்கு, எழுந்திருக்க முடியுமா? இல்லன்னா அப்படியே உன் கையை கொடு. நானே விரல் ரேகை எடுத்துக்கிறேன்" என்று தபால்காரர் சொல்லச் சொல்ல தாயைக் கண்ட கன்றுபோல் உள்ளம் மகிழ தன் இடது கையை வெட்டிகூட எடுத்துக்கொள் என்பது மாதிரி நம்பிக்கையாய் கையை நீட்டினார் அந்தக் கிழவர்.

அப்போது தபால்காரர் கருணையே வடிவாய் அவர் இடது கை பெருவிரல் ரேகையை எடுத்துக்கொண்டு தன் பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் எடுத்து அந்த பெரியவரிடம் கொடுத்தார். அப்போது அந்த பெரியவரின் மனசு அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தன் வலது கையை தூக்கி வாழ்த்துவதுபோல கையை தூக்கினார். அந்த தபால்காரர் ஒரு மெல்லிய புன்னகையோடு அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.

அங்கு திடீரென்று அந்த கோவிந்தசாமி பெரியவரின் பெரிய குடிகார மகன் அங்கு வந்து அந்த பெரியவரின் கையிலிருந்த ஆயிரம் ரூபாயை விருட்டென்று பிடுங்கிக்கொண்டான்.

இதையும் படியுங்கள்:
அழகு சாதனப் பொருட்களைப் பாதுகாக்கும் வழிகளும் நம்மை அழகுபடுத்தும் வழிகளும்!
ஓவியம்: தமிழ்

"ஐயோ ஐயோ எனக்கு வேணும் அந்த பணம்" என்று அந்தப் பெரியவர் கத்திக்கொண்டே கட்டிலில் இருந்து முடியாமல் எழ முற்பட்டார்... கண்களில் கண்ணீருமாக ஏக்கமாய் ஏதோ பேச முடியாமல் கத்த முயன்று கத்தாவும் முடியாமல் சைகை காட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது தபால்காரர், "ஏங்க இப்பதான் பென்ஷன் பணம் வந்து பெரியவர்கிட்ட கொடுத்தேன். அதை பிடுங்கி விட்டீங்க. பாவம் சார் ஒரு நாளாவது அவர்கிட்ட இருக்கட்டும் சார். நாளைக்காவது கேட்டு வாங்கி இருக்கலாம் இல்ல, நீங்க அவர் பையன்தானே. உங்களுக்குத்தானே சார் தரப் போகிறார்" என்றார்.

"ஹலோ தபால்காரர்! வந்தோமா பென்ஷன் பணத்தைக் கொடுத்தமானு போயிட்டே இரு. எங்க குடும்ப விஷயத்தில் தலையிடாத. அவருக்கு கொள்ளி வைக்கப் போறவன் நான்தான். அந்த ஆளுக்கு எவ்வளவோ செஞ்சுட்டேன். அறிவுரை எல்லாம் எனக்கு வேண்டாம். போயிட்டே இரு” என்று கத்தினான்.

தபால்காரர் செய்வது ஒன்றும் அறியாமல் அமைதியாய் தன் பையை எடுத்துக்கொண்டு சைக்கிளில் ஏறிப் போனார். எதிர்பார்த்து கிடைத்தும் பேத்திக்கு கொடுக்க முடியாத ஏமாற்றம். இறுதியில் அந்த கோவிந்தசாமி கிழவர் அப்படியே படுக்கையில் இருந்து தபால்காரர் போவதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

றுநாள் மீண்டும் அந்த தபால்காரர் யாருக்கோ தபால் கொடுக்க அந்தத் தெருவிற்கு வந்தார். கோவிந்தசாமி கிழவர் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். சாமியானா பந்தல் போட்டு ஒரு பக்கம் சங்கு ஊதிக்கொண்டு இருந்தார்கள். அந்த கோவிந்தசாமி தாத்தா இறந்து போய்விட்டார். தபால்காரர் மனசு கனத்தது. 'இப்படி எத்தனை துயரங்களைக் கடக்கிறோம். பல சமயங்களில் உதவ மனம் துடித்தாலும் முடியாமல் போகிறதே’ என்று மனதில் நினைத்துக்கொண்டே ஏதோ ஒரு வீட்டில் நின்று, ‘சார் போஸ்ட்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சைக்கிளில் ஏறி அடுத்த தெருவுக்குப் போனார்.

இப்படி எத்தனையோ சொல்ல முடியாத, செய்ய முடியாத வலிகளோடுதான் பலபேரின் வாழ்க்கை முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com