நாம் யாருடன் பழகினாலும் அவர்கள் இப்படிதான் என்று உடனுக்குடன் முடிவெடுக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள, புரிந்துக்கொள்ள நேரமே தராமல் அவருடைய குணத்தை நாமே முடிவு செய்வது சரியா? எதுவாக இருந்தாலும் காலஅவகாசம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒருவருடன் நன்றாக பழகும் போதுதான் அவருடைய உண்மையான குணத்தை புரிந்துக்கொள்ள முடியும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் ஒரு பெரிய மரம் இருந்தது. ஆனால், அந்த மரத்தைப் பற்றி விசாரித்தபோது நான்கு பேர் நான்கு விதமாக சொன்னார்கள். முதல் நபர் சொன்னார், அந்த மரம் நன்றாக நிழல் தரும் என்று. இரண்டாவது நபர் சொன்னார், அந்த மரத்திலிருந்து இலை விழுந்துக் கொண்டேயிருக்கும் என்று. மூன்றாம் நபர் சொன்னார், அந்த மரத்திலே எப்போதுமே நிறைய பூக்கள் பூத்திருக்கும் என்று. நான்காவது நபர் சொன்னார், அந்த மரம் எப்போதுமே மொட்டையாக இருக்கும் என்று.
இதில் யார் சொல்வது உண்மை என்று நினைக்கிறீர்கள்? நால்வர் சொல்வதுமே உண்மைதான். ஏனெனில், அந்த நான்கு பேரும் அந்த மரத்தை நான்கு காலநிலைகளில் (Seasons) பார்த்திருக்கிறார்கள்.
வெயில்காலத்தில் பார்த்தவருக்கு அந்த மரம் நிழலை தந்திருக்கிறது. இலையுதிர்க் காலத்தில் பார்த்தவருக்கு அந்த மரத்திலிருந்து இலையுதிர்வது தெரிந்திருக்கிறது. வசந்த காலத்தில் பார்த்தவருக்கு அந்த மரத்தில் பூத்துக்குலுங்கும் பூக்கள் தெரிந்திருக்கிறது. குளிர்க்காலத்தில் அந்த மரத்தை பார்த்தவருக்கு மொட்டையாக தெரிந்திருக்கிறது. ஒரு மரத்திற்கே நான்கு காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. அப்போது மனிதனுக்குள் எத்தனை மாற்றங்கள் ஏற்படும்.
இதே மாதிரிதான் மனிதர்களும் இருக்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறும், நாம் பழகுவதற்கு ஏற்றவாறும் அவர்கள் நம்முடன் பழகும் விதமும் மாறும். எனவே, ஒருமுறை பார்த்ததை வைத்து இவர்கள் இப்படித்தான் என்று யாரைப் பற்றியும் முடிவை எடுக்காதீங்க. எல்லாவற்றிற்குமே காலஅவகாசம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இதை புரிந்துக் கொண்டு வாழ்ந்தால் உறவு நீடிக்கும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.