

வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குப் போகவேண்டும் என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பே வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்துவிடும்.
எந்த உடை உடுத்துக்கொள்ளலாம்? எப்படி உட்கார வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று மனத்தில் பலமுறை ஒத்திகை பார்க்கப்படும்.
எப்படி எல்லாம் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதைவிட, தவறான நடத்தைகளைத் தவிர்ப்பது வெற்றிக்கு மிகவும் அவசியம். அவற்றில் முக்கியமானது...
1. குறிப்பிட்ட நேரத்துக்கு முந்தியே ஆஜராவது:
எதற்கும், எப்பொழுதும் லேட்டாகப் போவது அனேகம் பேருக்குப் பழக்கமானது என்றாலும், இன்டர்வியூ என்னும்பொழுது பயந்துகொண்டு, ரொம்ப சீக்கிரமாகப் போய்ச் சேருபவர்களும் உண்டு. உங்களுக்காகக் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பத்துநிமிடம் முன்னதாகப் போனால் போதுமானது. அதற்கும் முன்னால் போகக்கூடாது. தேர்வாளர் உங்கள் தேர்வு நடத்தத் தேவையான முன்னேற்பாடுகள் செய்துகொள்ள நேரமில்லாமல், நெருக்கடி நிலையில், உங்களைச் சந்திக்க வைப்பது உங்களுக்கு நல்லதல்ல.
2. அதிகம் பேசுவது:
இப்பொழுதெல்லாம் எல்லா நிறுவனங்களிலும் தேர்வாளர்கள், இளையவராகவும், கலகலப்பாக, சுமுகமாகப் பேசுபவராகவும் இருக்கிறார்கள். அதற்காக நீங்களும் ரொம்ப நெருங்கி, ஃப்ரீயாகப் பேச ஆரம்பித்துவிடாதீர்கள். கேட்ட கேள்விக்கு முழுமையாகப் பதில் சொன்னால் மட்டும் போதும்.
3. அனாவசிய பொருள்களை உடன் எடுத்துச் செல்லுதல்:
நீங்கள் வரும்பொழுது குடை, ரெயின்கோட்டு போன்றவைகளும், வழியில் வாங்கிய பொருட்கள், பார்சல்களும், பைகளும், புத்தகங்களும் கையில் கொண்டு வந்திருந்தால், வெளி ஆபீஸிலேயே வைத்துவிட்டு வரவும். தேவையான பேப்பர்கள் உள்ள ஃபைலும், ஒரு சின்ன கைப்பையும் தவிர வேறு எதுவும் கையில் இருக்க வேண்டாம். இந்த இன்டர்வியூவுக்கு வருவது மட்டுமே முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்தவும்.
4. அதிக அலங்காரம்:
ரொம்ப ப்ரைட் கலரில் அல்லது கவர்ச்சியாக உடை, ஏக மேக்அப், நகைகளுடன் நிச்சயமாக இன்டர்வியூவுக்குப் போகக்கூடாது. ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட் வேலை என்றாலும் இப்படி இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.
ஊதா நிறம் போன்ற அடிக்க வருவது போன்ற நிறங்களைத் தவிர்க்க வேண்டும். இளம், வெளிர் நிற ஆடைகளே தகுந்தது.
5. உரிமை எடுத்துக்கொள்ளல்:
தேர்வாளரின் அறைக்குள் போனபின் அவர் உட்காரச் சொன்னால் அன்றி, தானாக உட்காரக்கூடாது. நிச்சயமாக அவரைப் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது.
6. எதிர் இன்டர்வியூ செய்தல்:
கேள்வி கேட்க முந்திக்கொள்ளாதீர்கள். தேர்வின் முதலிலேயே சம்பளம், லீவு, பிரமோஷன் பற்றி எல்லாம் கேட்பது, உங்களைப்பற்றி மட்டமான அபிப்பிராயம் ஏற்படச் செய்யும். உங்களுக்கு வேலை கிடைப்பது முதலில் நிச்சயமாகட்டும்.
7. குற்றம் சொல்லும் குணம்:
யாரைப் பற்றியும் குற்றம் சொல்லாதீர்கள். நீங்கள் முன்பு வேலை பார்த்த அல்லது இப்பொழுது வேலை பார்க்கும் கம்பெனியைப் பற்றி, தவறான, குறையாக, கெட்டதாக, அந்தக் கம்பெனியின் ரகசிய உள் விவகாரத்தைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்லாதீர்கள். இது புது வேலைத் தேர்வாளரை எச்சரிக்கையடையச் செய்யும். நீங்கள் நம்பத் தகுந்தவரல்ல, விசுவாசமுள்ளவரல்ல, என்பதை வெளிப்படுத்தும்.
8. கேள்வியே கேட்காமல் இருத்தல்:
இன்டர்வியூவின் முடிவில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள், சந்தேகங்கள் இருக்கிறதா என்று கேட்பார்கள். பயந்துகொண்டு கூச்சப்பட்டுக்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்து விடாதீர்கள். ஆனால், எந்த மாதிரி கேள்வி கேட்க வேண்டும் என்பதை முன்பே தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கம்பெனியைப் பற்றித் தெரிந்து வைத்துக்கொண்டு, மேலும் அதுபற்றித் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் கேள்வி கேட்பது, உங்கள் அக்கறையைக் காட்டும்.
9. திறமையை மிகைப்படுத்தல்:
இன்டர்வியூவின்பொழுது, அதிமேதை, எதையும் சாதித்து விடுவேன், என்ற எண்ணத்தை உண்டாக்காதீர்கள். நீங்கள் சொல்லும் குணாதிசயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். கூடிய சீக்கிரம் குட்டு வெளிப்பட்டுவிடும். நேர்மையே மதிக்கப்படும்.
10. சுயநலக் கொள்கை:
உங்களால் எனக்கு என்ன லாபம் என்ற நடத்தை அல்லது பேச்சு கூடாது. இந்த வேலை எனக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும். புதிய அனுபவமாக இருக்கும். முன்னேற வாய்ப்பளிக்கும் என்றெல்லாம் சொல்வது, உங்களுக்குக் கம்பெனியின் முன்னேற்றத்தைவிடச் சொந்த முன்னேற்றம்தான் முக்கியம் என்ற எண்ணத்தை உண்டு பண்ணும்.
- ஜெயா.வி. ராமன்
(மம செப்டம்பர் 1988)