மனிதனுக்கு மன வலிமை மிகவும் முக்கியம். வாழ்க்கை எப்போதும் ஏற்றத்தாழ்வுகளும் இன்ப துன்ப துன்பங்களும் நிறைந்தது. மன வலிமை உள்ள ஒருவரால் மட்டுமே வாழ்க்கையை பேலன்ஸ்டாக நடத்த முடியும். மன வலிமையை அதிகரிக்கும் நான்கு விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
சுய விழிப்புணர்வை பின்பற்றுதல்;
ஒருவர் சுய விழிப்புணர்வோடு இருந்தால் தன்னுடைய எண்ணங்கள் உணர்வுகள் நடத்தைகள் இவற்றை நன்றாக அறிந்து கொள்ளவும் முறைப்படுத்தவும் முடியும். கடுமையான சூழலின் போது நம்மால் அதை சமாளிக்க முடியுமா? என்கிற தெளிவான அறிவை அது தரும். பரபரப்பான வாழ்க்கை முறையில் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி தியானம் செய்து நமது சுய விழிப்புணர்வை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
சுய விழிப்புணர்வு அதிகரிக்கும்போது ஒருவரால் நிகழ்காலத்தில் நடக்கும் விஷயங்களை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். லட்சியங்களை செயலாற்றும் போது தேவையில்லாத கவனச் சிதறல்களை குறைக்க முடியும். வேலையில் நன்றாக கவனம் செலுத்த முடியும்.
எதிர்மறை எண்ணங்களை மாற்றுவது;
எதிர்மறை எண்ணங்கள் ஒருவரின் ஆற்றலை குலைத்து விடும். தோல்விகள் ஏற்பட்டு விடுமோ, துயரங்கள் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டே இருப்பது தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும். தனக்குத்தானே ஊக்கமூட்டிக் கொண்டு சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு நேர்மறையான வாக்கியங்களை தனக்குள்ளே சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலம் ஒருவர் சிறப்பாக வெற்றி காண முடியும்.
சௌகரியமான சூழலை விட்டு வெளியேறுதல்;
கம்ஃபோர்ட் சோன் எனப்படும் தனக்கு மிகவும் பழக்கமான சூழலிலேயே உழன்று கொண்டு இருப்பது எப்போதும் பெரிய வெற்றிகளையோ மாற்றங்களையோ வாழ்வில் தராது. புதிய சூழ்நிலை புதிய வேலை போன்றவற்ரில் ஈடுபடும் போது அது தன்னம்பிக்கையின் அளவை உயர்த்தும். வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். பொது மேடைகளில் பேசுதல், தனியாக பயணம் செய்தல், புதிய மொழியை கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். இதுபோல புதிய விஷயங்களை சற்று சிரமப்பட்டு கற்றுக் கொள்வதன் மூலம் மனவலிமை நன்றாக அதிகரிக்கும். சிரமமான காலகட்டங்களில் எளிதாக மீண்டு வர அவை உதவும்.
உடல் மன நலனில் அக்கறை;
உடல் மற்றும் மன நலனில் அக்கறை காட்டி அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவது ஒருவரின் மன வலிமையை அதிகரிக்கும். சத்தான உணவு, போதுமான அளவு தூக்கம், உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை முதலியவை மனவலிமையின் தூண்கள். இயற்கை சூழலில் காலாற நடப்பது, நல்ல நண்பர்களிடம் பேசுவது தேவைப்படும் நேரத்தில் தனிமையில் இருப்பது போன்றவையும் மனதிற்கு உற்சாகம் தரும். தன்னை எப்படி முன்னேற்றிக் கொள்ளலாம் என்று சற்றே யோசித்து அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டால் மனவலிமை அதிகரிப்பதோடு வாழ்வும் வளமாகும்.