
இளைஞர்களே முதலில் வாழ்வில் உங்களுக்கென்று ஒரு இலக்கு ஒரு லட்சியம் நிச்சயமாக வைத்துக் கொள்ளுங்கள். அது இல்லாமல் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எல்லோரும் செய்வதை நாமும் ஆட்டு மந்தைபோல் பின்பற்றுவது வாழ்விற்கு நிச்சயம் உதவப்போவதில்லை. லட்சியம் உத்வேகம் எதிர்காலத்தைப் பற்றிய கனவு இவையெல்லாம் இல்லாத இளமைப் பருவம் உப்பு இல்லாத உணவு போல். அது யாருக்கும் பிரயோஜனம் இல்லை. குப்பைத் தொட்டியில்தான் போய் விழும். அந்த மாதிரி உப்பு சப்பில்லாத வாழ்க்கை தேவையா இளைஞர்களே நன்றாக யோசியுங்கள்.
''மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழவேண்டும்.'' என்ற இந்த வரிகளைக் கேளுங்கள் இளைஞர்களே! உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்தக் கனவுகள்தான் நாளைக்கு "நீங்கள் யார்" என்பதை இந்த உலகிற்கு அடையாளம் காட்டப் போகின்றன என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள்.
ஒவ்வொரு இனைஞனின் லட்சியமும் பல்லாயிரம் கோடியில் தானும் ஒருவனாக முகம் தெரியாமல் இருந்துவிட்டு போவதாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒரு தாகம் "பல கோடியில் நானும் ஒருவனல்ல. நான் கோடியில் ஒருவனாக வேண்டும். அந்தத் தீ உள்ளுக்குள் அணையாமல் எரிந்து கொண்டிருந்தால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும்.
முக்கியமாக சாதிக்க மட்டுமே நீங்கள் பிறந்திருப்பதாக முதலில் நீங்கள் நம்ப வேண்டும். நம்பிக்கைதான் வாழ்கையின் ஆணி வேர். அது ஆடாமல் இருந்தால்தான் எப்பவுமே வாழ்க்கை வண்டி குடை சாயாமல் தெளிவாகத் தத்தளிக்காமல் சீராக ஓடும்.
'ஐயோ... இது எவ்வளவு பெரிய விஷயம். இது என்னால் முடியுமா" என்று நினைப்பதை முதலில் நிறுத்துங்கள். இளைஞர்கள் மனத்தில் எப்போதும் சந்தேகம் வரவே கூடாது. அது வந்து விட்டதென்றாலே அவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை குறைந்துவிட்டதென்றுதான் அர்த்தம். வேட்கை குறைந்த பிறகு எதையும் உங்களால் துரத்திப் பிடிக்க முடியாது. துரத்திப் பிடிக்காத வாழ்வில் என்ன சுவையிருக்க முடியும்?
எனவே இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே! நிறைய சிந்தியுங்கள். உங்களுக்கு வழிகாட்ட பெற்றோர் ஆசிரியரைத் தவிர இருபத்தியோராம் நூற்றாண்டின் வரப்பிரசாதமான 'இண்டெர்நெட்' போன்றவையும் இருக்கிறது. சிந்தித்து யோசித்து உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானித்து அந்த இலக்கை நோக்கி பீடு நடைபோடுங்கள். வெற்றி நிச்சயம்.