

அன்றைய காலகட்டத்தில் இயந்திர வண்டிகளை நினைத்த நேரத்தில் நினைத்தபடி செயல்பட வைக்க முடியவில்லை. வண்டி புறப்பட்டு விட்டால் இடையிலேயே நம் விருப்பம் போல நிறுத்தி விட முடியாது. ஏனென்றால், இன்று உள்ளது போல வண்டியை நிறுத்த அன்று பிரேக் வசதி இல்லை.
வண்டியை நிறுத்த இயந்திரத்தின் இயக்கத்தையே நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்திய வண்டியை மறுபடியும் எளிதில் கிளப்ப முடியாது. மேலும் வண்டியின் வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ வண்டியை ஓட்டுபவரால் முடியாது. அது நிர்ணயித்த வேகத்திலேயே அதன் போக்கில் செல்லும்.
இந்தக் குறைகளை எல்லாம் நீக்கி மிகவும் வசதியுடைய ஒரு வண்டியை கண்டுபிடித்தால் அது காலத்தின் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கும் என கார்ல்பென்ஸ் என்ற ஜெர்மானிய மேதை கருதினார். இத்தகைய வசதியான வண்டியை தயாரிக்க முயற்சிக்கப் போவதாக நண்பர்களிடம் காரல் பென்ஸ் கூறியபோது, அவர்கள் சிரித்தனர்.
"உயிர் இல்லாத இயந்திரம் தன் போக்கிலேயே இயங்குவதை மனித விருப்பப்படி கட்டுப்படுத்தி செயல்பட வைக்க முடியாது" என நண்பர்கள் கருதினர். இந்தக் கூற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பென்ஸ் முழுமையான தன்னம்பிக்கையுடன் தன் முயற்சியில் பிடிவாதத்துடன் வேலையைத் தொடங்கினார்.
காரல் பென்ஸ் தனது முயற்சியில் வெற்றி அடைந்து மிகவும் திருத்தமாக ஒரு மோட்டார் வண்டியை செய்ததோடு அதற்கான உரிமையையும் பதிவு செய்தார். இந்த மோட்டார் வண்டியில் ஒரு நாள் கார்ல் பென்ஸ் தனது மனைவியை அமர வைத்து தெருத்தெருவாக பவனி வந்தபோது, அந்த வண்டியைக் காண செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் கூட்டம் கூடியது.
ஜெர்மனிய பத்திரிகைகள் இவரின் சாதனையை பெரிதும் பாராட்டினாலும் அரசாங்கம் பென்சின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க தயங்கியது. பென்சின் வண்டிக்கு நகருக்குள் 6 கிலோமீட்டர், நகருக்கு வெளியே 12 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும் என சட்டம் போட்டனர்.
அரசாங்கத்திடம் சற்று அதிகமான வேகத்துடன் வண்டியை ஓட்ட அனுமதி கேட்டும் கிடைக்காததால், பென்ஸ் ஒரு தந்திரம் செய்தார். ஒரு நாள் ரயில் நிலையத்தில் இறங்கிய முதலமைச்சரை தமது வண்டியில் ஏற்றிக்கொண்டு மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருந்தார்.
குதிரை வண்டி கூட இவரது வண்டியை முந்திக்கொண்டு சென்றதை பார்த்த முதலமைச்சர் எரிச்சல் அடைந்தார். "நாம் சென்று சேர இரண்டு நாட்கள் ஆகும்" என முதலமைச்சர் சலிப்புடன் கூற, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார்ல் பென்ஸ், "சற்று வேகமாக செலுத்தினால் விரைவில் சென்று சேரலாம். ஆனால் அரசாங்கக் கட்டுப்பாடு இருக்கிறதே..!" என முறையிட்டார். முதலமைச்சருக்கு கார்ல்பென்ஸ் கூறிய காரணம், சரி என படவே வேகக் கட்டுப்பாட்டு சட்டம் தளர்த்தப்பட்டது.
இன்று நாம் பயணம் செய்யும் பஸ் அல்லது கார் பல சிறப்பான அம்சங்களை கொண்டு திகழ்கிறது என்றால் அது கார்ல் பென்சின் கண்டுபிடிப்பை ஒட்டி தான் அமைக்கப்படுகின்றன.
ஆகவே நாம் தான் காலத்தை கனிய வைத்து இன்பம் காண வேண்டும்.