

சிலர் அடிக்கடி மற்றவர்களை மட்டம் தட்டிப் பேசும் குணத்தைக் கொண்டிருப்பார்கள். அது எதனால் தெரியுமா? அதைத் தெரிந்துகொள்ள இந்தத் குட்டிக் கதையைக் கேளுங்கள் (Mind Strength Lesson).
ஒரு ஊரில் ராஜா ஒருவர் இருந்தார். அவர் மிகவும் புத்திசாலியானவர். அவர் எல்லோரிடமும் சண்டைக்குப் போக மாட்டார். எதிரி தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விடப் பலம் குறைவாகவோ இருந்தால் மட்டுமே சண்டைக்குச் செல்வார்; இல்லையென்றால், கோட்டையை முற்றுகைக்குத் தயார்படுத்துவார். எதிரிகள் வருவார்கள், கோட்டைச் சுவரை உடைக்க முயற்சிப்பார்கள், ஆனால் முயற்சியில் தோல்வியடைந்து சென்றுவிடுவார்கள். இப்படி இருக்கையில், ஒருநாள் அந்த ராஜாவை விடப் பத்து மடங்கு பலம்பொருந்திய எதிரி ஒருவன் அவரைப் போருக்கு அழைத்தான்.
இவரோ வழக்கம் போலத் தன்னுடைய கோட்டையைப் பலப்படுத்திவிட்டு, மக்களைக் கோட்டைக்குள் அழைத்துக் கொண்டு கோட்டைக் கதவுகளை மூடினார். கோட்டை எதிரி அரசனால் முற்றுகையிடப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்களாக முற்றுகை நீடித்தது. ஆனால், இந்த முறை ஒரு வித்தியாசம்! கோட்டைக்கு வெளியேயிருந்து அடிக்கடி கற்கள் உடையும் சத்தமும், விரிசல் ஏற்படுவது போன்ற சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது.
இதைக் கேட்ட கோட்டையிலிருந்த வீரர்களுக்குப் பயம் ஏற்பட்டது. 'கற்கள் உடையும் சத்தம் கேட்கிறது என்றால், கோட்டைச் சுவர் உடைகிறது என்றுதானே அர்த்தம்?' என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அந்த அரசனுக்கோ எந்தப் பயமும் இல்லை. இதைக் கவனித்த வீரன் ஒருவன் அவரிடம் கேட்டான், "அரசரே! சுவர் உடையும் சத்தம் கேட்கிறதே, உங்களுக்கு எந்தப் பயமும் இல்லையா?" என்று. அதற்கு அரசர், சில வீரர்களைக் கோட்டைச் சுவர் மேல் ஏறி, வெளியே என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னார்.
வீரர்கள் மேலே சென்று பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது! எதிரி நாட்டு வீரர்கள் கோட்டைச் சுவரை உடைக்கவில்லை; மாறாக, வெளியிலிருந்த பெரிய பெரிய கற்களைத் தாங்களாகவே போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சத்தத்தைக் கேட்டுத்தான், கோட்டையிலிருந்த வீரர்கள் சுவர் உடைவதாக எண்ணிக்கொண்டனர்.
இப்போது ராஜா கூறினார், "அந்த எதிரி நாட்டினருக்கு இந்தக்கோட்டையின் பலமும் தெரிகிறது, உங்களுடைய பலமும் தெரிகிறது. அதனால்தான், வெளியில் கற்களை உடைத்து உங்கள் மனபலத்தைச் சோதித்துப் பார்க்கிறார்கள். ஆனால், எனக்கு என் பலமும் தெரியும், என் கோட்டைச் சுவர் உடைந்தால் எப்படிச் சத்தம் வரும் என்பதும் எனக்குத் தெரியும்" என்று கூறினார்.
கதை உணர்த்தும் நீதி: எப்படி வெறும் கற்களை உடைத்து, கோட்டைக்குள் இருந்த வீரர்களின் தைரியத்தைக் குலைக்க எதிரிகள் சதி செய்தார்களோ... அதேபோலத்தான் நிஜ வாழ்க்கையிலும் பலர் அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலமாக, அவர்களின் மனபலத்தைக் குலைக்க முடியும் என்று நம்புகிறார்கள். நீங்கள் அந்த மாயப் பிம்பத்தில் விழாமல், உங்கள் பலத்தை நீங்கள் எப்போதும் அறிந்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.