உங்களுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பா? எல்லா தவறுக்கும் தண்டனைதான் தீர்வு என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால், மன்னிப்பின் மகத்துவத்தை புரிந்துக் கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு மன்னிக்கும் குணம் என்பது சிறிதும் கிடையாது. அவர் பத்து காட்டு நாய்களை வளர்த்து வந்தார். யாராவது ஏதேனும் சிறிய தவறு செய்தால் கூட அவர்களை அந்த காட்டு நாய்கள் இருக்கும் கூண்டில் போடச் சொல்லி தண்டனை கொடுத்து விடுவார்.
ஒருநாள் அந்த ராஜாவுடைய வேலைக்காரர் தெரியாமல் அரசரை எதிர்த்து பேசிவிடுகிறான். அரசருக்கு வந்த கோபத்தில், ‘இவனை கொண்டு போய் அந்த பத்து காட்டு நாய்கள் இருக்கும் கூண்டில் போடுங்கள்’ என்று தண்டனை கொடுத்து விடுகிறார்.
அந்த வேலைக்காரர் எவ்வளவுதான் கெஞ்சி பார்த்தும் அரசர் அவரை மன்னிப்பதுபோல தெரியவில்லை. அரசரே, நான் உங்களிடம் பத்து வருடம் வேலை பார்த்திருக்கிறேன். அதனால், எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய முடியுமா? என்று அந்த வேலைக்காரர் கேட்கிறார். அதற்கு அரசரும் என்னவென்று கேட்கிறார்.
‘எனக்கு ஒரு பத்து நாட்கள் அவகாசம் கொடுங்கள். அதற்கு பிறகு நானே அந்த நாய்கள் இருக்கும் கூண்டிற்குள் சென்றுவிடுகிறேன்’ என்று கூறியிருக்கிறார். அரசரும் அந்த நிபந்தனைக்கு சம்மதிக்கிறார்.
பத்து நாட்கள் கழித்து, அந்த வேலைக்காரரை காட்டு நாய்கள் இருக்கும் கூண்டில் தூக்கி போடுகிறார்கள். ஆனால் அந்த பத்து காட்டு நாய்களும் இவரை சுற்றி வாலாட்டிக் கொண்டு பணிவாக நடந்துக் கொள்கின்றது. இதை பார்த்த ராஜாவிற்கு ஆச்சர்யம். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
அதற்கு அந்த வேலைக்காரர் சொல்கிறார். கடந்த பத்து நாட்களாக நான்தான் இந்த நாய்களுக்கு சாப்பாடு போடுகிறேன், வெளியிலே கூட்டிச் செல்கிறேன். இந்த நாய்களுக்கு எல்லா சேவைகளையும் செய்கிறேன். வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை பார்த்து இந்த நாய்கள் என்னிடம் பாசமாக நடந்து கொள்கிறது. ஆனால் நான் உங்களிடம் பத்து வருடமாக வேலை செய்கிறேன். என்னுடைய முதல் தவறை மன்னிக்கக்கூட உங்களுக்கு மனமில்லை என்று சொன்னாராம். அப்போதுதான் அரசருக்கு தான் செய்தது தவறு என்பது புரிந்தது.
இதுபோலத்தான் நமக்கு இந்தக்காலத்தில் மன்னிக்கும் குணம் என்பது இல்லாமல் போய்விட்டது. ‘மன்னிப்பு’ என்பது நாம் மற்றவர்களை பெருந்தன்மையுடன் மன்னிக்கும் செயல் மட்டுமில்லை. அது நமக்காக நாம் கொடுத்துக் கொள்வதும்தான். இல்லையெனில் குரோதம், வஞ்சம், கோபம், வெறுப்பு போன்ற எண்ணங்கள் நம் மனதில் தேங்கிவிடும். எனவே, அடுத்தவர்கள் தவறு செய்துவிட்டால் பரவாயில்லை. மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். என்ன நான் சொல்றது? முயற்சித்துப் பார்க்கலாமே!