உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை எனில் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை' - சுவாமி விவேகானந்தர்.
பெரிய பெரிய கோவில்களுக்கு செல்லும்போது அங்கு நிச்சயம் ஒரு யானையை பார்ப்போம். அந்த யானை ஒரு காலில் மட்டும் சங்கிலி கட்டி இருக்கும். அருகில் பாகன் உட்கார்ந்திருப்பார். அந்த பாகன் கை காட்டும் போதெல்லாம் அந்த யானை தன் துதிக்கையால் எதிரில் வருபவரின் தலையில் ஆசிகள் தந்து அவர்கள் தரும் பணத்தை வாங்கிக் கொள்ளும். இதுதான் அதன் வேலை.
இப்போது யோசியுங்கள் பயமின்றி அதன் அருகில் சென்று நம் தலையை அதன் முன்னால் தருகிறோம். யானையின் பலம் எவ்வளவு நம்முடைய பலம் எவ்வளவு? யானை நினைத்தால் ஒரே அடியில் நம்மை தூக்கி எறிந்து விட்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் யானை அப்படி செய்வதில்லை. காரணம்? அந்த யானைக்கு தன் பலம் தெரியவில்லை. தெரியாதது போல் மனிதன் அதை கட்டி வைத்திருக்கிறான். சிறு சங்கிலி தன்னைக் கட்டி போட்டுவிட்டது என்று நினைத்து யானை மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது.
இப்படித்தான் மனிதரில் பலரும் தேவையற்ற மனச்சங்கிலியால் தங்கள் எண்ணங்களை கட்டி வைத்துவிட்டு தாங்கள் பலம் அற்றவர்கள் என்று எண்ணி தோல்வியை தழுவுபவர்களாக இருக்கிறார்கள். வெற்றிக்கு அடிப்படைத் தேவை நம்முடைய பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை தெரிந்து கொண்டு செயலில் இறங்குவது.
ஆறறிவு கொண்ட எந்த உயிரினமும் பலவீனங்கள் இருந்தாலும் அதன் பலத்தை வைத்துதான் உயிர் வாழ்கின்றது. இதற்குச் சான்றாக சிலவற்றை இங்கு பார்ப்போம்.
கழுகு பருந்து போன்றவைகளுக்கு பல அடி உயரத்தில் பறந்தாலும் கீழே தரையில் இருக்கக்கூடிய தனக்குத் தேவையான இரையைக் கூர்ந்து கவனித்துவிடும் பலமுண்டு. கண்ணே தெரியாத வவ்வால் தன் பலவீனம் மறைத்து இரவு நேரங்களில் பறக்கிறது. உலகின் மிகப் பெரிய பறவையான ஆஸ்ட்ரிச் எனும் நெருப்புக் கோழிக்கு இறக்கை இருந்தும் பறக்கத் தெரியாத பறவை. ஆனால் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் அதனால் ஓட முடியும் என்பதே அதன் பலம்.
விநாடிக்கு சுமார் 75 முறை சிறகடித்து அதிர்வொலி எழுப்பும் சின்னஞ் சிறிய பறவையான ஹம்மிங் பறவை மலர் மீது அமராமலேயே தன் சிறகடிப்பால் காற்றில் நிலை நிறுத்திக் கொண்டு பூவிலிருந்து தேன் எடுக்க தன் ஆற்றலை பயன்படுத்துகிறது. இதே போல்தான் நாய்க்கும் தேனீக்கும் உள்ள மோப்ப சக்தியும்.
ஆறறிவு விலங்குகள் கூட தன் வலிமையை வைத்து வாழும்போது ஏழறிவு உள்ள நம்மால் நம் வலிமையை பகுத்துணர முடியாதா? ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நம் வலிமை மீது நம்பிக்கை வைக்காமல் நம் பலவீனங்களையே நினைத்து வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லை எனில் நம்மிடம் இருக்கும் வலிமையை நம்பாமல் மற்றவர்களின் வலிமையை பார்த்து பொறாமை கொண்டு புலம்புவோம்.
உண்மையில் நம் பலம் என்ன என்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய மிகப்பெரிய பலவீனம். அந்த பலவீனத்தை வென்று வெற்றிக்கு முதல் வழியாக மாறும் நமது பலத்தை அறிந்து சாதனையாளராக மாறுவோம்.