
வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு அறிவு வளமே அடிதளம். அறிவின் எல்லை விரியும்போது உங்களுடைய வாழ்வின் எல்லையும் விரிகின்றது. அதைத்தான் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றோம்.
ஆக்கப்பூர்வமாக சிந்ததிப்பதன் விளைவுதான் முயற்சியும் அதனால் கிடைக்கும் வளர்ச்சியும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணி முன்னேற்றம், பதவி உயர்வு போன்றவைகளைப் பெறுவதற்கு எவ்வளவு தூரம் விரைவாகவும், கூடுதலாகவும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சற்று எண்ணிப்பாருங்கள். அறிவு வளர்ச்சியின் அவசியம் புரியும். ஆகவே புதிய அறிவை வளர்த்துக் கொள்ள மனதை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.
சுய இயக்கம் தேவை
வாய்ப்பு வரும்போது கற்றுக்கொள்ளலாம் என்ற சராசரி மனநிலையிலிருந்து சற்று மாறி, மனதை சுயமாக இயக்கி புதியனவற்றைக் கற்று அறிவு வளத்தைப் பெருகிக்கொள்ளும் சுயமுன்னேற்ற மனிதராக நீங்கள் மாறவேண்டும். ஏனென்றால் வளர்ச்சி என்பது வாழ்வின் தத்துவம்.
முயற்சியே வளர்ச்சிக்கான வழியாகும். தொடர்ந்து முயல்பவர்கள் மென்மேலும் வளர்ந்து வளம் பெறுகின்றார்கள். சூழ்நிலையைக் குறை கூறிக்கொண்டு, முடங்கிக் கிடப்பவர்கள் விரக்தியின் மடியில் சோகக் கனவுகளாகின்றார்கள். தொடர்ந்து முயல்பவர்களே வெற்றி வானில் மகிழ்ச்சிச் சிறகுகளை விரிக்கின்றார்கள்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டு, அதை முதலீடு செய்து தொடர்ந்து முன்னேறுபவர்களே ஒரு நிறுவனத்தின் நிலையான பலமாக அமைகின்றார்கள். மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள பதவியையும், அந்தஸ்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், தொடர்ந்து முயற்சி செய்யாதவருக்கு வெற்றியும், தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு ஏற்பட்ட தோல்வியும் நிலையானது அல்ல.
ஆகவே, தொடர்ந்து முயலும் இயல்புடைய மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தொழிற்போட்டிகளை வென்று உங்கள் நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடியும். நிறுவனம் நிலைத்தால்தான் அதில் பணிபுரியும் உங்களுடைய பணியும் அதனைச்சார்ந்த உங்களுடைய வாழ்வும் நிலைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
ஒவ்வொரு நாளும் வளருங்கள்
வெற்றியை நோக்கி தினமும் ஒரு சிறு அடியையாவது எடுத்து வையுங்கள். அத்துடன் உங்களுடைய அறிவு வளர்ச்சிக்காக சிறு முயற்சியையாவது மேற் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் செய்யும் பணி சம்மந்தமாக ஏதாவது ஒரு புதிய கருத்தை அல்லது நுட்பத்தை ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் சுயமுன்னேற்றம் சம்பந்தமான கட்டுரைகள் அல்லது நூலின் ஒரு பக்கத்தையாவது படியுங்கள். உலகம் வேகமாக மாறிக்கொண்டே இருக்கின்றது. அதன் காரணமாக நீங்கள் செய்யும் பணியின் தன்மையும், வேலைமுறைகளும் மாறக்கூடும். ஆகவே, அவற்றிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் புதிய திறமைகளையும், நுட்பங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால்தான் உங்களுடைய பணியை சிறபாகவும், வாடிகைக்யாளர்களுக்கு திருப்தியளிக்கும் விதத்திலும் செய்யமுடியும்.
வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிதான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி! நிறுவனத்தின் வளர்ச்சியே அதில் பணிபுரிவோரின் மகிழ்ச்சி. ஆகவே செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்தால் நமது வாழ்வு சிறக்கும் என்பதைப் புரிந்துகொண்டு பணியாற்றுங்கள். "முன்னேற்றமும் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும்’’.