
மனித மனம் லாவகமாக கையாளப்பட வேண்டிய கருவி. சரியான எண்ணங்களை அதில் புகுத்தினாலே தவிர அதனை தேவையான முறையில் இயக்க இயலாது. இன்று பலரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டிய விஷயங்களையே சிந்தித்து ஒரு பட்டியல் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். என்னென்ன வேண்டாம் என்பதைவிட என்ன வேண்டும் என்பதை புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை. நம் வீட்டில் இருக்கிற சில மின் சாதனங்களைப்போல் தேவைப்பட்டால் இயக்குவதும் தேவையில்லாவிட்டால் நிறுத்துவதும் மனித மனத்திற்கும் சாத்தியம்.
கனவுகள் நல்லவை. நமக்கு உந்துசக்தி தருபவை. ஆனால் கனவு நிலைக்கு அடுத்த கட்டமாகிய செயலுக்கு வந்தால்தான் வாழ்க்கை நகரும். கனவுகள் நிற்காமல் தொடர்ந்து கொண்டேயிருந்தால் மனிதன் பைத்தியமாகி விடுவான்.
இன்று நிறையபேர் கனவு நிலையிலேயே நின்று கொண்டு வாழ்க்கைக்குள் இறங்க அஞ்சுகிறார்கள். நிறைய இளைஞர்கள் கூட நாளைக்கு என்ன நடக்குமோ என்று ஜாதகக் கட்டுக்களோடு நடமாடுகிறார்கள்.
ஒரு பிச்சைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு அதில் என்ன விழப்போகிறது என்று எதிர்பார்ப்போடு இருக்கக்கூடாது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைக்கிற விதத்தில்தான் உங்களைச் சுற்றியுள்ளவர் களின் வாழ்க்கை, இந்த சமூகம் மற்றும் தேசத்தின் வாழ்க்கை அடங்கி இருக்கிறது. மனிதன் தன்னிடம் என்ன இல்லை என்பதை எண்ணி ஏங்காமல் இருப்பதை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை நோக்கி நடைபோட வேண்டும்.
உங்களிடம் வாகனம் இருந்தால் அதை நீங்கள் நன்கு ஓட்டுபவராக மட்டும் இருந்தால் போதாது. உங்களிடம் இருக்கும் ஆற்றலை நல்லமுறையில் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி அடைய முடியும். அதிர்ஷ்டங்களை நம்பி வாழத்தொடங்கினால் பதட்டம்தான் மிஞ்சும்.
வாள் வித்தையில் தலைசிறந்த மனிதர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு இளைஞன் போய் "நான் உலகில் சிறந்த வாள் வீச்சுக்காரராக விரும்புகிறேன். அதற்கு எத்தனை காலம் பயிற்சி எடுக்க வேண்டும " என்றார். "பத்தாண்டு காலம் போதும்" என்றார் அவர். அதற்கு அவர்.
"அவ்வளவு காலம் என்னால் காக்க முடியாது. இரவும் பகலும் ஆக பயிற்சி எடுத்துக் கொண்டால் எத்தனை ஆண்டுகளில் முடியும்" என்றான். அதற்கு வாள் வீச்சு வல்லுனர் "நாற்பது வருடங்கள் ஆகும்" என்றார். இளைஞருக்கு அதிர்ச்சி. அவர் சொன்னார் "ஒன்றை அடைய வேண்டும் என்ற ஏதாவது ஒரு பதற்றத்தோடு இடையறாமல் செய்து கொண்டே இருந்தால் உன்னுடைய ஆற்றல் குறைந்து செயல் திறன் மங்கும். ஆகவே அதிக நாட்கள் ஆகும்" என்றார்.
அதிர்ஷ்டத்தால் வெறி என்று சிலர் நம்புகிறார்கள். சிலர் வீட்டைவிட்டு வெளியே வரக்கூட ஜோதிடம் பார்க்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்கள் சக்தியை, ஆற்றலை அறிந்து கொள்ளாததுதான். தனது தனிப்பட்ட ஆற்றலைப் பற்றி மனிதர்களுக்குத் தெரியாததால் அற்புதங்களை எதிர்பார்த்து அலைமோதுகிறார்கள்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப்பெரிய அற்புதம் என்ன தெரியுமா?. வாழ்க்கையோடு நாம் விளையாடுவது. ஆனால் வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.