கோபத்தில் ஏன் கத்துகிறோம்? - ஒரு வாழ்வியல் பார்வை!

எப்போது மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்கள் அருகருகே இருந்தாலும் கூட, அவர்களின் மனம் வெகு தொலைவுக்குச் சென்று விடுகிறது.
Angry Couple
Angry Couple
Updated on

இரண்டு பேர் சண்டை போடும்போது கவனித்திருக்கிறீர்களா? எதிரெதிரே, அருகருகே தான் இருப்பார்கள். ஆனால் சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு வீட்டில் சண்டை நடந்தால் அடுத்த போர்ஷன்காரர் முகம் சுளித்து, 'என்ன இது?' என்று எட்டிப் பார்க்கும்படியாக இருக்கும்.

அதே போல நாம் பல சமயங்களில் நம்மையறியாமலேயே தனியாக நம் மனதுடன் உறவாடிக்கொண்டிருப்போம். நம் மனம் இருக்கிறதே ஓயாமல் அலையடித்து ஆர்ப்பரிக்கும் கடலைப் போன்றதாயிற்றே அது! எப்போதும் எதையோ தேடி அலையும் இவ்வுலக வாழ்க்கையில் மனமும் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கிறது. மனம் புறத்தே தாவி ஓடும் தன்மையுடையது. நாம் நம்மையே கவனித்துப் பார்த்தோமானால் நாம் ஏதோ வேலையில் ஈடுபட்டிருப்போம் அல்லது தெருவில் நடந்து போய்க் கொண்டிருப்போம்.

கைகள் தான் அந்த வேலையை செய்து கொண்டிருக்கும், கால்கள் தான் நடந்து கொண்டிருக்குமே தவிர, மனம் பத்து வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட ஒரு சோக நிகழ்வு அல்லது நாளைக்கு நடக்க வேண்டிய ஒன்றைப் பற்றிய கவலை என்று கால வித்தியாசங்களைக் கடந்து தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே? நம் மனதின் வீராவேசப் பயணத்திற்கேற்ப அப்போது ஏற்படும் கோபதாபத்திற்கேற்ப நம் முகமும் உணர்ச்சிக் கலவையைப் பூசிக்கொள்ளும்.

இப்போது ரெண்டு மனிதர்கள் சண்டை போடும் விஷயத்திற்கு வருவோம். இது இரண்டு பேரின் மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே? கோபத்தில் மனம் அமைதியை இழப்பதால் இருவரும் சத்தம் போடுவார்கள். சிலசமயம் கைகலப்பு கூட ஏற்படுமே?

இதை ஒரு துறவி தன் சீடர்களுக்குக் கூறுமுகமாக அனைவருக்கும் அழகாக விளக்குகிறார்.

"எப்போது மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்கள் அருகருகே இருந்தாலும் கூட, அவர்களின் மனம் வெகு தொலைவுக்குச் சென்று விடுகிறது. எனவே தூரத்தில் இருக்கும் மற்றவரின் மனதிற்கு கேட்க வேண்டுமென்பதற்காகவே சத்தம் போட்டு கத்துகிறார்கள். எதிராளியின் மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் தங்கள் ஆற்றலை உபயோகித்து இவர்கள் சத்தம் போட வேண்டியிருக்கிறது. அப்பொழுது தானே இவர்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் இன்னொரு மனதைச் சென்றடைய முடியும்?"

இப்போது புரிகிறதா நாம் சண்டை போடும்போது ஏன் தொண்டை கிழிய கத்துகிறோம் என்று.

இதையும் படியுங்கள்:
சண்டை இல்லாத சம்சார வாழ்க்கை வேண்டுமா? இந்தச் சிறு மாற்றங்களைச் செய்து பாருங்கள்!
Angry Couple

கோபம் அல்லது பகைமை உணர்ச்சியில் எதிராளியின் மனது வெகு தூரம் விலகி இருப்பதால், அப்படி சத்தம் போட்டுக் கத்தினால்தானே அவர் மனதை நம் வார்த்தைகள் சென்றடையும்? எதிராளியின் காது வெகு அருகில் தான் இருக்கிறது, ஆனால் மனது வெகு தொலைவு விலகிப் போய்விட்டதே?

"ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபாடாக மனிதர்கள் ஒருவர் மீது மற்றொருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் சத்தம் போடுவதில்லை. அமைதியாகவும் அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்தில் இருக்கின்றன. மனதிற்கு இடையேயான தூரம் மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தேயிருக்கும். ஆச்சரியப்படும் விதமாக அதே மனங்கள் தான் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டும்போது மௌனம் காக்கிறது. அங்கே வார்த்தைகளோ சத்தமோ தேவையில்லை. மௌனமே ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளப் போதுமானது.

வாழ்வியல் போதிக்கும் அந்தத் துறவி தன் சீடர்களைப் பார்த்துக் கூறுகிறார், "நீங்கள் ஒருவருக்கொருவர் வாதிடும்போது உங்கள் மனங்கள் இரண்டும் தொலைவாகப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்! அப்படிச் செய்யாமல் போனால் உங்கள் மனங்களுக்கிடையே உள்ள தூரம் அதிகமாகி, கடைசியில் அவை ஒன்று சேரும் பாதையே அடைக்கப்பட்டு விடும் நிலை வந்து விடும்! அப்படியொரு நிலைமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com