சோம்பேறி குணம்தான் நம் முதல் எதிரி!
சோம்பேறித்தனம் இது வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் குணம். சிலர் எதற்கெடுத்தாலும் எப்பொழுது எடுத்தாலும் எனக்கு நேரமில்லை எனக்கு வேலை இருக்கு என்று சொல்வார்கள் இப்படி சொல்பவர்களை கவனித்து பாருங்கள் அவர்கள் கண்டிப்பாக சோம்பேறிகளாகத்தான் இருப்பார்கள்.
உற்சாகத்தோடு காணப்படும் மனிதர்களை பாருங்களேன் அவர்கள் எப்பொழுதும் வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், சோம்பேறித்தனமாக இருக்கும் மனிதர்களை பாருங்கள் நமக்கு கொட்டாவிதான் வரும். சோம்பேறித்தனத்தால் எதுவும் கிடைக்காது என்பதை உணர்த்தும் ஒரு குட்டி கதைதான் இது.
ஒரு காலை நேரம் பனிப்பொழிவாக இருந்தது. ஒரு கொக்கும். குருவியும் தங்களுக்குள்ளாக இவ்வாறு பேசிக்கொண்டன. கொக்கு சொன்னது "நான் இன்று குளத்துக்குச் செல்லமாட்டேன், மீன் என்னைத் தேடிவரும்" என்று. குருவி சொன்னது 'நானும் இன்று தோப்புக்குச் செல்ல மாட்டேன், பழம் என்னைத் தேடிவரும்' என்று. இருவரும் காத்திருந்தார்கள். நேரம் போனது மீனும் வரவில்லை, பழமும் கிடைக்கவில்லை.
கொக்குக்கும், குருவிக்கும் பசிக்க ஆரம்பித்தது. பசி தாங்க முடியாமல் கொக்கு குளத்தை நோக்கியும், குருவி தோப்பை நோக்கியும் சென்றன. அப்போது அங்கே மரத்தில் பழத்தைக் கொறித்துக் கொண்டிருந்த அணில் பாட்டுப் பாடியது. 'கொக்கைத் தேடி குளம் வராது, குருவியைத் தேடிப் பழம் வராது' என்று 'உழைத்தால் மட்டுமே உணவு வரும்' என்பது பறவைகளுக்குப் புரிந்தது.
கொக்கையும், குருவியையும் போலக் காத்திருக்கும் மனிதர்கள் நம்மிடையே உள்ளார்கள். ஒரு கட்டத்தில் துணிவோடு உணவைத் தேடிச் சென்ற கொக்கும், குருவியும் பசியோடு தினம் தினம் காத்திருக்கும் சோம்பேறி மனிதர்களுக்குப் பாடமும் தருகின்றன.
இனியாவது ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் உற்சாகத்துடன் இருந்து சோம்பேறி என்ற அரக்கனை விரட்டி அடியுங்கள் பிறகு பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும். வெளிநாட்டு அறிஞர்கள் கூட சோம்பேறித்தனத்தை பற்றி அழகாக கூறியிருக்கிறார்கள் இதோ ஒரு ரஷ்ய பழமொழி இது
"கடவுளிடம் பிரார்த்தனை செய்தாலும் கரையை அடைவதற்குத் தொடர்ந்து துடுப்பைப் போடுங்கள்".