எல்லாராலும் பிசினஸிலும் குடும்பத்திலும் ஜெயிக்க முடியாது! இவங்க மட்டும்தான் சாதிப்பாங்க!

வியாபாரமும் குடும்பமும் செழிக்க, உறுப்பினர்களை நம்பிக்கையுடன் அரவணைத்து வழிநடத்தும் தலைவரின் மனப்பாங்கே வெற்றியின் அடித்தளம் என்பதை விளக்கும் கட்டுரை
Leadership skills
Leadership skillsImage credit: AI
Updated on

வியாபாரத்திலும் குடும்பத்திலும் சிலரால் சாதிக்க முடிகின்றது. பல காரணங்கள் இருந்தாலும், உறுப்பினர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது; அது உண்மை.

அந்த நபர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்? அவர்களை நேர்மறையாகச் சிந்தித்து, தொடர்ந்து செயல்பட வைப்பது அல்லது அவர்கள் உற்சாகமாகப் பங்கு பெறத் தூண்டுவது யாராக இருக்கக்கூடும்? இவைகள் பற்றி இங்கு காண்போம்.

வியாபாரத்தில் ஸ்தாபகர், குடும்பத்தில் குடும்பத் தலைவர் தங்கள் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை வைப்பது மிக முக்கியம். எப்படி ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லையோ, அப்படித்தான் வியாபாரத்திலோ அல்லது குடும்பத்திலோ இருக்கும் உறுப்பினர்கள் வேறுபட்டுத்தான் இருப்பார்கள். அவர்கள் குணங்கள், யோசிக்கும் அல்லது சிந்திக்கும் திறமைகள், புரிந்துகொள்ளும் மற்றும் கிரகித்துக்கொள்ளும் தன்மைகள், செயல்திறன்கள் மாறுபடும், வேறுபடும். ஒரே மாதிரி இருந்தால் அதிகமாகப்பயன் தராது.

இன்றைய அதிவேக நடவடிக்கைகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் ஈடுகொடுக்கவும், தாக்குப்பிடித்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து தொடர்ந்து முன்னேறவும் கலவையான திறன்கள் (Mixed Skills) சேர்ந்து இருப்பது அத்தியாவசியமாகின்றது.

வியாபாரத்தின் ஸ்தாபகர் மற்றும் குடும்பத் தலைவர், அவர்களது உறுப்பினர்கள் நலன் மற்றும் முன்னேற்றத்தில் தனிப்பட்ட உண்மையான கவனம் செலுத்த வேண்டும். உறுப்பினர்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

தனிநபரின் விருப்பு, வெறுப்பு, ஆர்வம், வலிமை, இயலாமை, வேறு துறையில் ஈடுபாடு போன்ற பல்வேறு குணநலன்கள் பற்றி விரிவாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்பொழுது இத்தகைய குணநலன்கள் பற்றி மேம்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.

குறிப்பிட்ட தனிநபர்களிடம் மனம் விட்டு அளாவுவது, அந்தத் தனிநபருக்குத் தன்னம்பிக்கை மற்றும் மனோதைரியம் வளரவும் மேம்படவும் வழிவகுக்கும். மேலும், நேர்மறை எண்ணங்கள் மற்றும் புதிய கோணங்களில் சிந்திக்கவும் ஆர்வம் பிறக்கும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது ஸ்தாபகர் அல்லது குடும்பத் தலைவரின் தலையாய கடமை.

அப்படிப்பட்ட தனிநபர்கள் முயற்சிகள், எடுத்துச் செய்யும் பணிகள் அல்லது வேலைகளில் தவறுகள் அல்லது இழப்புகள் ஏற்பட்டால், அவர்களுடன் அமர்ந்து, ஆராய்ந்து, டிஸ்கஸ் செய்து, எப்படிச் சரி செய்யலாம் என்று அறிந்து, மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தோல்வி பயம் உங்களை வாட்டுகிறதா? சச்சினின் டெண்டுல்கரின் இந்த 'மாஸ்டர் பிளான்' உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்!
Leadership skills

கடிந்துகொள்வதாலோ அல்லது கோபத்தை வெளிப்படுத்துவதன் மூலம் சாதிப்பதை விட, தன்னம்பிக்கை அளித்து, உடன் நின்று, "உங்களால் முடியும்" என்று கூறி, உற்சாகப்படுத்தி, அனுசரணையாக அரவணைத்துச் சென்றால் தனிப்பட்ட நபர்களின் முன்னேற்றம் தடைபெறாமலும், தொய்வில்லாமலும் சீராகத் தொடரும்.

அரவணைத்துச் செல்வது ஒரு கலை; வளர்த்துக்கொண்டால் கூடுதலான பலன்களைப் பெறலாம்.

"அரவணைத்து, ஆறுதல் கூறி வழிநடத்த, நம்பிக்கை ஊட்டி கை கொடுக்க நம் ஸ்தாபகர் அல்லது குடும்பத் தலைவர் நம்முடன் இருக்கிறார்" என்ற எண்ணமே தனிப்பட்ட உறுப்பினர்களுக்குச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தானாகவே அமைத்துக் கொடுக்கும். அதை அவர்கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் தெரிவிப்பார்கள்.

logo
Kalki Online
kalkionline.com