
உங்கள் நண்பர் யாராவது எதையாவது சிந்தித்துக் கொண்டு இருந்தால் நீங்கள் சாதாரணமாக, "என்னடா பகல் கனவு காண்கிறாயா? என்று கிண்டலாக கேட்பது வழக்கம். இப்படி இருப்பவர்கள் பெரும்பாலும் செயலில் இறங்க மாட்டார்கள். ஏதோ மலையை பெயர்த்து கடலில் எறிவதற்காக கற்பனை செய்கிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள் இது சோம்பேறிகளின் பகல் கனவு!
கனவு காணுதல் அல்லது கற்பனையில் வாழுதல் என்பது இருவகைப்படும். சோம்பேறிகளின் கனவு. அடுத்தது இலட்சியவாதிகளின் கனவு. சோம்பேறிகளின் கனவைத்தான் ஏற்கெனவே பார்த்தோம். இவர்கள் கட்டும் கற்பனைக்கோட்டை சிறு காற்றுக்குக் கூட நிலைத்து நிற்காது. எந்தவித ஆதாரமும் இல்லாதது இதைப் பற்றி பேசுவது வீண்வேலை.
இப்பொழுது இலட்சியவாதிகளின் கனவு பற்றிப் பார்ப்போம். ஒரு சாதனையாளருக்கு, ஒரு விஞ்ஞானிக்கு, ஒரு இலட்சியவாதிக்கு ஆக்கப்பூர்வமான கனவு காணத் தெரிந்திருக்க வேண்டும். இந்தக் கனவு என்பதை 'ஆழ்ந்த விருப்பம் அல்லது பிரார்த்தனை தியானம் என்றும் கூறலாம். அதாவது எந்நேரமும் உங்கள் எண்ணம் முழுவதும் அந்த இலட்சியக்கனவிலேயே இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு டாக்டராக வேண்டுமானால், நீங்கள் ஒரு கோடீஸ்வரனாக வேண்டும் என்றால் அல்லது நீங்கள் ஒரு அரசியல்வாதியாக வேண்டும் என்றால், அதில் இப்பொழுதே நீங்கள் வாழ்ந்துகொண்டு இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
இந்தக் கற்பனையில் நீங்கள் ஏனோ தானோ என்று வாழக்கூடாது. நீங்கள் அதுவாகவே ஆகிவிட்டதாக முழுமையாக நினைக்க வேண்டும். இந்த நினைப்பு உங்களிடம் எப்பொழுதும் ஆழமாக இருக்க வேண்டும். உங்கள் கற்பனையின் வலிமை அல்லது திண்மையைப் பொருத்து, அது அடி மனத்தை ஆழமாக அடையும். மேலோட்டமான கற்பனை மேலேயே நின்றுவிடும்.
இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மக்களில் பெரும்பாலோர் இப்படிக் கனவு காண்பவர்களே இதைத்தான் சோம்பேறிகளின் கனவு என்று கூறுவார்கள் அதாவது இதுதான் சாதாரண பகல் கனவாகும். இது உங்களை மிகவும் சோம்பேறியாக்கி, ஒன்றுக்கும் உதவாத நிலைக்கு உங்களைத் தள்ளி விடும் .இப்படிக்கனவு காண்பதைவிட நீங்கள் கனவே காணாமல் இருக்கலாம்.
அப்துல்கலாம் சொன்ன "கனவு" ஆக்கப்பூர்வமான கனவு அல்லது கற்பனைகளைக் காணவேண்டும் இந்தக் கனவுகளால், நீங்கள் எதிர்காலத்தில் வாழப்போவதை இப்பொழுதே வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் இது விரைவிலேயே நனவாகும். ஏனென்றால், உங்கள் ஆழ்மனம் அவ்வளவு சக்தி உடையது.