
அபூர்வமான இந்த மானிடப் பிறவியை மகிழ்வாய்க் கழித்தலே முறை! அதற்காகத்தான் “இளமையிற் கல்” என்றார்கள். இளம் வயதிலேயே நன்கு கற்று, திறமைகளை வளர்த்துக்கொண்டால் அது ஆயுள் முழுமைக்கும் அட்சயப் பாத்திரமாக விளங்கி, நமக்கு அருமையான வாழ்க்கையைக் கொடுக்கும்.
“உன் வாழ்க்கை உன் கையில்” என்பதே நாலடியாரின் நனிசிறந்த அறிவுரை. மனிதர்களின் முகங்கள் எப்படி ஒரே மாதிரியாக இருப்பதில்லையோ அதேபோலத்தான் அவர்களின் திறமைகளும், பழக்க வழங்களும்,குணமும்!ஒவ்வொருவரும்
வெவ்வேறு விதம்!
“விளையும் பயிர் முளையிலே தெரியும்!”என்பது முதுமொழி. சிறந்த பெற்றோர்களால், தங்கள் குழந்தைகளிடம் ஒளிந்து கிடக்கும் உன்னதத் திறமைகளை நன்கு அறிய முடியும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களேகூட அவர்களின் எதிர்காலத்தில் எத்
துறையில் கால் வைத்தால் முத்திரை பதிப்பார்கள் என்பதை முழுமையாகக் கணிக்க
முடியும். என்ன? இவற்றுக்கெல்லாம் பொறுமையும், நிதானமும், குழந்தைகளை அருகிலிருந்து கவனிக்கும் பொறுப்பும் வேண்டும்.
தற்கால அவசர உலகில் இவையெல்லாம் முழுதாய் நடப்பதில்லை என்பதே முற்றிய சோகம்! இப்பொழுதுள்ள பெற்றோர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.”நானும் எனது மனைவியும் அக்காலத்தில் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டோம். கிடைக்கவில்லை. இப்பொழுது எங்கள் மகனையோ, மகளையோ நிச்சயம் மருத்துவம் படிக்க வைப்போம்!”என்று சபதமே எடுத்துக் கொண்டு விடுகிறார்கள்-தங்கள் குழந்தைகளின் விருப்பம் என்னவென்பதை அறியாமலே!
பெற்றோர்களுக்கு ஒன்று! நமது குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு தனி், சுதந்திரப் படைப்பு. அவர்கள் இவ்வுலகில் தோன்ற நாம் காரணமாக இருந்தோம். விபரம் புரியும்வரை, அவர்களை வளர்த்து, நல்லது, கெட்டதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக, நம் நிறைவேறாத ஆசைகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது எந்தவிதத்திலும் நியாயமாகாது. நம் விருப்பங்களை அவர்கள் மீது திணிப்பதும் கூடாது. அழகிய ஓவியங்கள் வரைந்து ரவி வர்மா போன்று புகழ்பெற விரும்புபவனை, டாக்டராக்கி அழகு பார்க்கப் பெற்றோர் விரும்பினால் என்னவாகும்? ப்ரஷ் பிடிக்க விரும்பும் கைகளால் கத்தியைப்பிடிக்கச் சொல்வது நியாயமாகாதே!
ஓர் ஆணோ, பெண்ணோ எத்துறைக்குப் பொருத்தமானவர் என்பதைத் தீர்மானிக்கும் வயது 13 என்று கொள்ளலாம். அதாவது எட்டாம் வகுப்புப் படிக்கும்போது இதனைக் கருத்தில் கொண்டே 5ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி என்றும், 6லிருந்து 8 வரை மிடில் ஸ்கூல் என்றும், அதற்குமேல் ஹைஸ்கூல் என்றும்
பிறகு கல்லூரி என்றும் வைத்தார்கள். இப்பொழுது சில மாற்றங்கள் வந்துவிட்டன.
எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே ஒருவரின் விருப்பம் என்னவென்பதை அறிந்து, அதற்கேற்ற முறையில் அவரின் பயிற்சிகள் அமையுமாறு பார்த்துக் கொண்டோமானால், பிற்காலத்தில் அவர் விரும்பிய துறையில் அவர் நிச்சயமாகப் பிரகாசிப்பார். டாக்டர், வக்கீல், எஞ்சீனியர், ஐ.ஏ.எஸ்., பதவிகள் மட்டுமே பதவிகளல்ல. அதற்கான படிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துவதும் புத்திசாலித்தனமாகாது.
இன்றைய உலகில் ஆயிரக்கணக்கான பணிகளும், அவற்றுக்கான படிப்புகளும் பல்கலைக் கழகங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவரவர் விருப்பப்படும் துறைகளைத் தேர்ந்தெடுத்து முன்னேறலாம்.
இளவயதிலேயே நான் இதுவாகத்தான் ஆகப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டால், கண்கவர் (blinkers) கட்டப்பட்ட குதிரைதன் பாதையில் செல்வதைப்போல, இளைஞர்களும் தங்கள் இலக்கு நோக்கிப் போய்க்கொண்டே இருக்கலாம்.
இலக்கை நிர்ணயம் செய்த பிறகு அதனை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்குத்தான் உழைப்பு என்று பெயர் சூட்டி வைத்திருக்கிறோம். அந்த உழைப்பு நேர்மையையும், உண்மையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தடைகளைத் தகர்க்கும் உறுதியையும், தோல்விகளில் துவண்டு போகாத நிலையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்புறமென்ன?
எல்லாம் நம் வசமாகும். வசமானால் வாழ்க்கை வளமாகும்.
வாழ்வின் குதூகலமென்பது, நம்மை உயர்த்திக் கொள்வதோ நம் குடும்பத்தைச் செழுமைப் படுத்திக்கொள்வதோ மட்டுமல்ல! அவற்றையும் தாண்டி, நம் சமுதாயத்திற்காக, அதன் வளர்ச்சிக்காக,நாம் கற்றதை, சம்பாதித்ததைப் பயனுள்ள விதத்தில், நலிவுற்ற மக்களை உயர வைக்க, கொடுப்பதும் உழைப்பதுமாகும். அதனைச் செய்தால்தான் சரித்திரம் நம்மைப் பதிவு செய்து கொள்ளும். அப்பதிவே நம் பல தலைமுறைகளின் நல்வாழ்வுக்கான விசா ஆகும்.