
அஞ்சாமை என்றால் பயம் இல்லாமை, தைரியம், துணிச்சல், துணிவு என்று பொருள் கொள்ளலாம். ஒன்றை பயமில்லாமல் சந்திக்கும் பண்பிற்கு அஞ்சாமை என்று பெயர். ஆனால் அஞ்ச வேண்டியதைக் கண்டு அஞ்சாமல் இருப்பது அறியாமை ஆகும். பயப்பட வேண்டியதற்கு பயப்படாமல் இருப்பது மூடத்தனம். பயப்படுவதே அறிவுடையவர்களின் செயலாகும். பழி பாவங்களுக்கு அஞ்சி அவற்றை தரக்கூடிய செயல்களை விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது.
அஞ்ச வேண்டிய செயல்கள் என்று சில உண்டு. அவற்றிக்கு நாம் அஞ்சித்தான் ஆகவேண்டும். தவறான செயல்களில் ஈடுபட பயப்பட வேண்டும். தவறான செயல்களில் ஈடுபட்டால் தண்டனைகள் உண்டு. யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து செய்தால் இறைவன் தகுந்த நேரத்தில் அதற்கான தண்டனையை கொடுத்து விடுவான். பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கிய காரணமே தண்டனைக்கு பயந்துதான். அந்த பயம் மட்டும் இல்லையென்றால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும்.
அதேபோல் உண்மைக்கு புறம்பாக பொய் சொல்லி திரிவதும் தவறு. எனவே பொய் பேச பயப்பட வேண்டும். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதுபோல் தீயவர்களைக் கண்டால் ஒதுங்கி விடுவது தேவையற்ற பாதிப்புகளை உண்டாக்காமல் இருக்கும். அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சலாம். இதனால் நாம் கோழை என்றோ, பயந்தாங்கொள்ளி என்றோ பொருளல்ல.
அறிவுடையவர்கள் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சுவதுதான் நல்லது. இதைத்தான் திருவள்ளுவர் 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்' என்கிறார்.
பயப்பட வேண்டியவற்றிற்கு பயந்துதான் ஆகவேண்டும். எந்த செயல்களையும் செய்வதற்கு முன்பு சிறிது நேரம் சிந்தித்து, திட்டமிட்டு வரப்போகும் தடைகளையும் இடையூறுகளையும் எப்படி நீக்குவது என்ற கவனத்துடன் கூடிய பயத்தில் அணுகுவதுதான் தோல்வியற்ற வெற்றி நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
பயம் என்பது ஒரு எச்சரிக்கை மணி. அது நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவும். மனிதனுக்கு ஆபத்தான தருணங்களில் எச்சரிக்கை என்னும் ஒரு உணர்வையும் தகவலையும் தரும் இந்த பயம். அந்த எச்சரிக்கையையும் தகவலையும் அலட்சியப்படுத்தும் போது மனமானது அடுத்தகட்ட உணர்வான பயத்தை உணரும். பயம் வருவது நல்லதுதான்.
ஆனால் பயமே வாழ்க்கையாகி விடக்கூடாது. எதற்கு பயப்பட வேண்டுமோ எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதற்கு பயந்துதான் ஆகவேண்டும். சில விஷயங்களில் பயப்படுவது நல்ல விஷயம் தான். பயம்தான் நம்மை இதை பண்ண வேண்டும், இதை பண்ணக்கூடாது என்று தடுக்கும்.
பயம் நம்மை செயல்பட தூண்டவும், சில நேரங்களில் ஒரு நல்ல முடிவை எடுக்கவும் உதவுகிறது. பயம் என்பது நம்மை பாதுகாக்கும் ஒரு கருவி. அது நம்மை முடக்கி வைக்கக்கூடாது. பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயந்து அதை ஒரு கருவியாக பயன்படுத்தி, பயம் நம்மை கட்டுப்படுத்தாமல் மேலும் பலப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
கெட்ட விஷயங்கள் பண்ண துணியும் பொழுது வருகின்ற பயம் ரொம்பவும் நல்லது. அதேபோல் பொய் பேசவோ, புறம் பேசவோ பயப்பட வேண்டும். துஷ்பிரயோகம் செய்ய பயப்பட வேண்டும். துரோகம் செய்ய பயப்பட வேண்டும். இப்படி பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படுவதுதான் அறிவுடைமை. மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் வரும் என்பது முதுமொழி. எனவே இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ கற்றுக்கொள்வதே நல்லது.