
நம்மை சுற்றி கற்றுக்கொள்ள எவ்வளவோ உள்ளன. அதில் ஒன்று மொழிகள். ஆர்வமும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதமும் இருந்தால் கற்றுக்கொள்வது முடியும்.
இன்றைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் வேறு இடங்கள், நாடுகளில் போய் படிக்கவும், வேலை செய்யவும், தொழிலில் ஈடுப்படவும் பலருக்கு அத்தியாவசியமாகிவிட்டது. சொல்லப்போனால் பெரும் பலானாருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது.
இத்தகையை சூழ்நிலையில் தாய் மொழி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரிந்து வைத்துக்கொள்வதால் எத்தகைய இழப்பும் ஏற்படாது. மாறாக பயன்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
நம் நாட்டைப் பொறுத்த வரையில் பல மொழிகள் இருப்பதால் இது ஒரு பெரிய வாய்ப்பாக கருதலாம். பலருக்கும் அவர்களுக்கு தெரிந்த மொழியில் பேசுவது பிடிக்கும், இயற்கையாகவே பெரும்பாலானோர் சிந்திக்கவும், யோசிக்கவும் பயன்படுத்துவது அவர்கள் மொழியிலேயேதான்.
பிற மொழிகளில் பேச பழகிக்கொண்டால் நாளடைவில் பேசுவது சுலபமாவதுடன், உங்களுடைய நம்பிக்கை நிலை அதிகரிக்கும். ஆரம்ப கால கட்டங்களில் புதிய மொழி பேச கற்றுக்கொள்ளும் பொழுது தவறுகள் ஏற்படுவது இயல்பு. தயக்கம் காட்டுவதை தவிர்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். தப்பு, தவறு ஏற்பட்டால் திருத்திக்கொள்ள உண்மையான முயற்சி எடுக்கவேண்டும். சித்திரமும் கை பழக்கம்போல், பேசி பேசிதான் பிற மொழி கற்றுக்கொள்ள முடியும்.
கற்றுக்கொள்வது தங்கள் கையில்தான் இருக்கின்றது என்பதை மறவாமல் உடன் மறுக்காமல் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் கற்றுக்கொள்ள முற்படும் மொழி தெரிந்தவர் களிடம் அந்த மொழியில் பேசி வருவதை வழக்கப் படுத்திக் கொண்டால் கற்றுக் கொள்வது சுலபமாகும்.
நீங்கள் தங்கி இருக்கும் கட்டிடத்தில் , பகுதியில், செல்லும் இடங்களில் அந்த குறிப்பிட்ட மொழி பேசுவவர்கள் எப்படி உரையாடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து வந்தால் உங்களுக்கு அந்த மொழி கற்க மேலும் வழிகிட்டும்.
மொழி கற்பிப்பதில் சிறு வயது குழந்தைகள் பெரிய பங்கு வகிக்கிறார்கள். இது அனுபவ பூர்வமாக கற்று அறிந்த உண்மை.
சிறிய குழந்தைகள் நீங்கள் மொழி பேசும் பொழுது செய்யும் தவறுகளை உடனுக்கு உடன் திருத்தி நீங்கள் எப்படி பேசவேண்டும் என்பதை எந்த வகை எதிர்பார்ப்பும் இல்லாமலும், தயக்கமின்றியும் திருத்தி கூறுவார்கள். இது அவர்களுக்கு இயற்கை அளித்த வரம். இயல்பாகவே வரும். (nature's gift) (spontaneous response)
இத்தகைய நிகழ்வு மொழி கற்றுக்கொள்பவர்களுக்கு பெரிய வரப்பிரசாதம். உடனுக்கு உடன் கிட்டும் சந்தர்ப்பம். அதுவும் இலவசமாக. பயன் படுத்திக் கொண்டு மொழி கற்றுக் கொள்வதை வலுவாக்கிக் கொள்ளலாம்.
அதேபோல் வேலை செய்ய வருபவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுபவர்கள் இவர்களிடம் பேசியும், அவர்கள் பேசுவதை கவனித்தும் மொழி பேச கற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட மொழியின் டிவி ப்ரொக்ராம்கள், சினிமாக்கள் போன்றவையும் மொழி கற்க உதவும்.
முக்கியமானது பிற மொழி கற்க முயலும் தனி நபரின் தன்பம்பிக்கை, முழு ஈடுப்பாடு, திருத்திக் கொள்ளும் செயல்பாடு ஆகியவை நிச்சயமாக அவைகளின் பங்களிப்பை கொடுக்கும்.
மொழி கற்றுக்கொள்பவர் தொடர்ந்து கற்கும் மொழியை பயன் படுத்தி வருவது அவர் கடமை மட்டும் அல்லாமல் கற்றுக்கொண்ட புதிய மொழிக்கு காட்டும் நன்றி கடனும் ஆகும். முயன்றால் முடியும் என்பது புதிய மொழி கற்கவும் உதவும் என்பதும் உண்மை.