
நீங்கள் உங்களை வயதானவராக உணர்வது எப்போது? உங்கள் கடந்த காலத்தைக் திரும்பிப் பார்க்கும் போதுதானே. நீங்கள் கடந்து வந்த பாதையில் உங்கள் மனதில் யார் யாரோ வீசிவிட்டுப்போன குப்பைகளை சேகரித்து வைத்திருக்கிறீர்கள். அவற்றை அவ்வப்போது குறைக்காமல் இருந்தால் அந்த பாரம் உங்களை அழுத்தத்தான் செய்யும். காலத்தால் பயன்படுத்தப்பட்ட உங்கள் உடல் வேண்டுமானால் சில வரம்புகள் தாண்டி இயங்க முடியாமல் போகலாம். மனசு அப்படி இல்லை. அதன் வயதை நிர்ணயிப்பது காலம் அல்ல. உள்ளே என்ன மூட்டை கட்டி வைத்திருக்கிறீர்கள் என்ற சுமைதான் வயதைத் தீர்மானிக்கும்.
பழையதை சுமந்து கொண்டு இராமல் கணத்துக்கு கணம் இறக்கி வைத்துக்கொண்டே இருங்கள். அடுத்த கணம் நீங்கள் புதிதாக உணர்வீர்கள்.
ஒருவர் டாக்டரிடம் சென்றார் எங்கே வலிக்கிறது என்று டாக்டர் கேட்க அவர் தன் விரலை நீட்டி முழங்காலைத் தொட்டார். வலியில் அலறினார். பிறகு தன்தோளைத் தொடடு அலறினார். பிறகு வெவ்வேறு பகுதிகளைத்தானே தொட்டு வலி வலி என்று கூறினார்.
டாக்டர் தலையில் அடித்துக்கொண்டார். "கஷ்ட காலம். வலி உங்கள் உடலில் இல்லை. ஒவ்வொரு இடமாக தொட்டுக் காட்டினீர்களே, அந்த விரலில்தான் இருக்கிறது" என்றார். வலிக்கும் விரலால் எதைத் தொட்டாலும் வலிப்பதுபோல் தோன்றும். வயதாகிவிட்டதாக நினைத்துக்கொண்டு எதைச் செய்தாலும் களைப்புதான் வரும். தன்னை எப்போதும் சுமையற்றவனாக வைத்துக் கொள்பவர்களுக்கு வயதே ஏறாது.
சுமைகள் ஏன் ஏறுகின்றன. ஒன்றைக் கொடுத்து அதைவிடச் சிறப்பாக ஒன்றை வாங்குவது எப்படி என்று மனம் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கிறது. கணக்கு போட்டு போட்டு நீங்கள் சாத்தானின் சீடர்களாகி விட்டீர்கள். வாழ்க்கையையே பேரம்பேசும் வியாபாரமாக ஆக்கிவிட்டீர்கள்.
நீங்கள் விரும்பியபடியெல்லாம் நடந்தால் நாகரீகமாக நடந்து கொள்வீர்கள். உங்கள் கணக்கு தப்பாக்கி விட்டாலோ உள்ளே இருக்கும் மிருகம் விழித்துக்கொள்ளும். ஒரு சிறுமி தன் நோட்டுப் புத்தகத்தில் ஏதோ கிறுக்கினாள். என் டீச்சர் அவளை நெருங்கி என்ன செய்கிறாய் என்று கேட்க "கடவுளை வரைகிறேன்" என்றாள். கடவுளை யாரும் பார்த்ததில்லையே என்றார் டீச்சர். கொஞ்சம் பொறுங்கள் நான் வரைந்ததும் பார்க்கலாம் என்றாள் சிறுமி.
உங்கள் தாத்தாவுக்குத் தாத்தா காலத்திலிருந்தே கடவுள் அதே வயதில் இருக்கிறாரே, எப்படி? அவர் வாழ்க்கையை வியாபாரமாக்கவில்லை. யாரையும் நண்பனாக்கிக் கொள்ளவில்லை. பகைவனாக்கவுமில்லை. மழை பொழிந்தால் அது ஆத்திகனின் தோட்டத்தை மட்டுமல்ல நாத்திகன் தோட்டத்தையும் ஈரமாக்குகிறது. விருப்பு, வெறுப்பு வேண்டாதவர், வேண்டியவர் என எந்த சுமையும் சுமக்காததால் கடவுளுக்கு வயது ஏறவில்லை.
வாழ்க்கையை வெளியிலிருந்து வேதனையோடு வேடிக்கை பார்ப்பதை நிறுத்துங்கள். சுமைகளை களைந்துவிட்டு ருசித்து வாழ்ந்து பாருங்கள். அப்புறம் வாழ்க்கை அதுவாகவே உங்களை இளமையோடு வைத்திருக்கும்.