
சோகத்திற்கு இளமையைக்கூட அழிக்கவல்ல ஆற்றல் நிறையவே இருக்கிறது. முதுமையைக் கண்டு கலங்காதீர்கள். நரை கூட அழகான தோற்றத்தைக் கொடுக்கவல்லதுதான்.
இன்றைக்கு அமெரிக்கப் பெருநாட்டில் மன உளைச்சலைப் போக்குவதற்கு புற்றீசல்போல மருத்துவமனைகள் துவக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்துவதற்குப் பதிலாக போதனைகள் வைக்கின்றார்களாம்.
இதுபோன்ற மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் தங்களுக்கு வயிற்றுவலி, புற்றுநோய், தீராத தலைவலி, இரத்தக் கொதிப்பு, அழுத்தம், மூட்டுவலி போன்று பல நோய்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறிகொண்டு வந்து சேர்கின்றார்கள். இவர்களை அந்தந்த நோயைக் கண்டறிய மருத்துவ சோதனைகள் செய்து பார்த்தால் நோய்களுக்குரிய எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் துன்பப்படுகின்றார்கள். காரணம் மனஉளைச்சலே.
இவர்களது மனஉளைச்சலைப் போக்குவது எவ்வாறு? இவர்களது மனத்துயருக்குரிய 'கரு'வான காரணம் என்ன?
எந்தச் சூழலில் யாரால் எந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டார்கள் என விரிவான ஆய்வை முதலில் மேற்கொண்டு சோகப்புயல் எத் திசையிலேயிருந்து மையம் கொண்டு கிளம்பியது என கண்டறிகின்றார்கள். மனைவியால், பெற்றெடுத்த மக்களால், நண்பர்களால் தொழிலின் தோல்வி, இழப்பு இவையே மூல காரணங்கள் என்ற முடிவுக்கு வருகின்றனர்.
பெரும்பாலோர் தங்களது தாழ்வு மனப்பான்மையாலும் கற்பனையாக வளர்த்துக்கொண்ட எண்ணங்களாலும் புரிந்து கொள்ளுகின்ற நிதானமில்லாத அவசர நடவடிக்கைகளாலுமே கற்பனையாக, வராத நோயை வந்ததாகக் கருதிக்கொண்டு தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்கின்றனர்.
"The class in Applied Psychology" என்ற பயிற்சி நிலையம் உலகம் தழுவி துவங்கப்பட்டுள்ளன. இத்தகைய மருத்துவம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவமுறை.
இத்தனை நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ளது. நோய் அல்ல மன அதிர்வால் அதிர்ச்சியால் ஏற்பட்ட குழப்பமே தமது சோர்வுக்குரிய காரணம் என்பதை அவர்கள் உரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
நோயாளிகளையும் உட்கார வைக்கின்றார்கள். ஒவ்வொருவராக வந்து மேடை மீது நின்று தனது சுமைகளை வாய்விட்டுக்கூற வேண்டும். எல்லோரும் இவ்வாறு கூறி முடித்த பின்னர், ஒருவர் மற்றொருவருடன் தனது சோகத்தைக் கலந்துரையாடல் வழி பகிர்ந்து கொள்கின்றார்கள். மெல்ல மெல்ல சுமைகள் இறக்கி வைக்கப்படுகின்றன. மனஇறுக்கம், உளைச்சல், உறுத்தல் உப்பாய் கரைந்துகொண்டே வருகின்றது.
தங்களது சுமையையும் பகிர்ந்துகொள்ள பலர் தயாராக நின்று வெள்ளைக்கொடி அசைத்ததும் அவர்களது அச்சம் வெண்பனிபோல கலையத் தொடங்குகிறது. உள்ளுணர்வு தெம்பாக நிமிரத் தொடங்குகிறது. முடங்கி போனவர்கள் உற்றாரும் உறவினரும் ஒதுக்கி வைத்தவர்கள், இனி தேறமாட்டார்கள் என தள்ளப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு சோகத்திலேயிருந்து மீண்டு வந்து புகழ் பூத்த வாழ்வுக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றார்.
ஆகவே, அஞ்சாது செயல்பட்டு ஆரோக்கிய வாழ்வை பெறுங்கள்.