
தோல்வியை பார்க்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. வெற்றி மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்ட பல அரசர்களும், மேதைகளும் தோல்வியை கண்டிப்பாக ருசித்திருப்பார்கள். வெற்றிக்கு முதல்படியே தோல்விதான் என்பதை அனைத்து அறிஞர்களும் அறிவார்கள்.
தற்போது புதிய புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும் மறுபுறம் சில நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணியாக யாரைச் சொல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக நிர்வாகத்தைத்தான்.
நிர்வாகத்துறையின் குறைபாடுதான் வேறுவேறு பெயர்களில், வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டு ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது. பொதுவாக ஒரு நிறுவனம் வீழ்ச்சியடைய எப்படிப்பட்ட நிர்வாகம் காரணமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
இது குறித்து பல தொழில் வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூடி ஐந்து விதமான காரணங்களைப் பட்டியலிட்டனர். இந்த ஐந்தில் ஏதாவது ஒரு குறை இருந்தாலும் கண்டிப்பாக நிறுவனம் வீழ்ச்சி அடையும் என்பதே உண்மை. வெற்றிக்கான காரணிகளை தேடுவதைவிட, தோல்விக்கான காரணிகளை அறிந்துகொண்டு எச்சரிக்கையாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.
எந்த சூழலையும் எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக அதிக கட்டுப் பாட்டுடனும் நிறுவனங்கள் தங்கள் வேலைகளை நடத்துகின்றன. கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியாளர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு வேலை மந்தமாக நடக்கும். இதனால் அந்த நிறுவனத்தில் புதுமை, புதிய முயற்சிகள் ஆகியவற்றை நிறுவனம் ஏற்காது. இதனால் சராசரி செயல்திறன் குறைந்துகொண்டே போய் இறுதியில் வீழ்ச்சி ஏற்படும்.
அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் மட்டுமே மையப்படுத்தி நடத்தும் நிறுவனங்களில் கருத்துச் சுதந்திரமே இருக்காது. நன்றாக வேலை பார்க்கும் சிறந்த ஊழியரைக் கூட அவர் செய்யும் சின்ன தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள். இது போன்ற காரணங்களால் ஓர் எல்லையைத் தாண்டி எட்டியும் பார்க்காத நிலையிலேயே நின்றுவிடுகின்ற அந்த நிறுவனம் மெல்ல மெல்லத் தேயத் தொடங்கி வீழ்ச்சியடைந்து விடுகிறது.
சொந்த காரணங்களாலோ அல்லது இயல்பாக ஏற்படும் சறுக்கல்களாலோ, விரக்தி, மனப்பான்மையில் நடந்தால் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் ஆமை வேகத்தில் இருக்கும். ஏதோ காலத்தை ஓட்ட வேண்டும் என்று நிறுவன ஊழியர்கள் நினைத்து விட்டால் அங்கே புதிய முயற்சிகளுக்கு இடமிருக்காது. ஒரே தொழிலை கண்ணும் கருத்துமாக நிர்வகிப்பவர் களும் உண்டு. பல தொழில்களில் காலை வைத்துவிட்டு எதையும் நிர்வகிக்க நேரமில்லாமல் சிலர் தடுமாறுவது உண்டு. சில தொழில்கள் தானாகவே நடந்துவிடும் என்று அவர்களாகவே முடிவெடுத்து விடுவார்கள். இந்த அலட்சிய மனோபாவத்தால் எந்த வளர்ச்சியையும் அடைய முடியாது. அலுவலகத்துக்குள் சிதறிக்கிடக்கும் திறமைகளை ஒருங்கிணைப்பதற்கோ அல்லது அவர்களை ஊக்கப்படுத்துவதற்கோ ஒரு முயற்சியையும் எடுக்காமல் தங்கள் போக்கிலேயே போகக்கூடிய தலைமை அந்த நிறுவனத்தை செயலிழக்கச் செய்துவிடும்.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் தவறு செய்யும்போது நிர்வாகமே கண்டுபிடித்து சொல்லும். இல்லாவிட்டால், சகஊழியர்கள் மூலமாகத் தெரியவரும். ஆனால் நிர்வாகமே தவறு செய்யும்போது அதை எடுத்துச் சொல்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். இதனால் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகிவிடும். மாற்றங்கள் நிகழும் சூழ்நிலையைக் கையாள்வதில் யார் ஜெயிக்கிறார்கள், யார் தோற்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒரே பதில் இதுதான். பக்குவமான நிர்வாகம் வெற்றியைப் பெறும். பதட்டமான நிர்வாகம் தோல்வியைத் தழுவும்.
ஒரு நிறுவனத்தில் ஏற்படும் வெற்றியில் சின்னது, பெரியது என இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒரு நிர்வாகம் ஏற்படுத்தும் உள்நிலை வலிமையைப் பொறுத்தே மாற்றங்களை எதிர்கொள்கிற சக்தி வளரும். மாற்றங்கள் ஏற்படும் சூழலில் நிர்வாகிகள், சில சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும். சவால்களை சந்திக்கக் கூடிய சூழல் இல்லையென்றால் அங்கே வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்காது. அசட்டுத்தமான முடிவுகளை ஊக்குவிக்க வேண்டியதில்லை. ஆனால் முக்கியமான விஷயங்களில் முன்னேற்பாட்டுடன் சில சவால்களை சந்திப்பதில் தவறு இல்லை.