
ஒரு சதுரத்துக்கு நான்கு முனைகள் உண்டு. முக்கோணத்துக்கு மூன்று முனைகள் உண்டு. ஒரு நட்சத்திரத்துக்கு ஐந்து முனைகள் உண்டு. ஒரு கோட்டுக்கு இரண்டு முனைகள் உண்டு. ஆனால் ஒரு வட்டத்துக்கு முனைகளோ, முடிவோ கிடையாது அதனால்தான் 'உறவு வட்டம் 'என்று சொல்கிறோம்.
உறவுகளை மறந்த மனிதன் வேர்களை இழந்த மரம் போன்றவன். ஆதாரங்களை இழந்த நீரோடை போன்றவன் ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவரின் உறவுகள் தீர்மானிக்கப்பட்டு, முகம், நிறம் குணம் மொழி, பழக்க வழக்கங்கள், பண்பாடு என எல்லாவற்றையும் தருவது உறவுகள்தான். உறவுகள் எல்லாமே முக்கியமானவை ஒவ்வொருவருக்கும் நேரத்தையும், மதிப்பையும் அளிக்க தயங்க கூடாது உறவுகளை மதிக்கிறோம் என்பதே எப்படி உணர்த்தலாம்? பார்க்கலாமா?
அலட்சியம் செய்யாதீர்கள்
உங்கள் மீது அக்கறை காட்டும் உறவுகளை அலட்சியம் செய்யாதீர்கள். இந்த காலத்தில் நான் உங்கள் மீது அன்பு காட்டுகிறேன் என்பதை உணர்த்துவதற்காக நேரில் சந்திக்கவோ போனில் பேசவோ, பலருக்கு நேரம் இருப்பதில்லை.
நீங்கள் அப்படி எத்தனை பேருடன் நலம் விசாரிக்கிறீர்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள் இப்படிப்பட்ட சூழலில் தங்கள் மதிப்பு மிக்க நேரத்தை ஒதுக்கி உங்கள் மீது அக்கறை காட்டும் உறவுகளை நீங்கள் பெரிதும் மதிக்க வேண்டும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தி அலட்சியம் செய்யாதீர்கள்.
பணிவாக இருங்கள்
நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பணிவோடு இருங்கள். குடும்ப உறவுகளில் மட்டுமின்றி அலுவலக உறவுகளிலும் இது மிக அவசியம். கருணையோடு இருப்பது யாராவது பிரச்னைகளோடு வந்தால் அவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள் யாருக்காவது உதவி தேவைப்படும் நேரத்தில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். நீங்கள் பணிவாக இருப்பதால் அடுத்தவர்கள் உங்கள் மீது அதிகாரம் செலுத்துவார்கள் என நினைக்க வேண்டாம் மற்றவர்களும் பணிவாகவே நடந்துகொள்வார்கள்.
நட்பாக பழகுங்கள்
எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு நட்பு தேவைப் படுகிறது. உங்கள் வாழ்க்கை துணையோடு நட்பாக இருப்பதைவிட வேறு சந்தோசம் என்ன இருக்க முடியும்? அதுபோலவே உங்கள் நெருங்கிய உறவுகளுடன் நட்பாக பழகினால் உறவு இன்னும் நெருக்கமாகும் . நட்பை விட மிகச்சிறந்த உறவு எதுவும் இல்லை. உறவுகளோடு நட்பாக இருப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.
மரியாதை கொடுங்கள்
ஒரு ஆரோக்கியமான உறவில் உங்களுக்கு மரியாதை கொடுக்கும் எவருக்கும் அதே அளவுக்கு மரியாதையை நீங்களும் கொடுக்க வேண்டும். உறவுகளை மதித்து மரியாதை கொடுக்கும்போதுதான் உங்கள் வாழ்க்கை பயணம் தெளிவாக இருக்கும் மரியாதை தராவிட்டால் எவ்வளவு முக்கியமான உறவிலும் விரிசல் விழுவதை தவிர்க்க முடியாது. மரியாதையே ஒரு உறவின் அஸ்திவாரம்.
வாய்ப்பு கொடுங்கள்
ஒருவரை வெறுத்து விலகுவதற்கு 100 காரணங்கள் உங்களுக்கு இருக்கக்கூடும். ஆனால் நேசித்து இணைந்திருப்பதற்கு ஒரே ஒரு காரணம் இருந்தாலும் அதையே உங்கள் வாய்ப்பாக கருதுங்கள். நூறு பெரிதா? ஒன்று பெரிதா? என்ற விவாதத்தில் இறங்காதீர்கள்.
கனவு காட்டுங்கள்
பெரிதாக ஒரு பிரச்னை வரும்போது அருகில் இருந்து தோள் கொடுப்பது மட்டுமே உறவுகளின் தேவை அல்ல. சின்ன சின்ன விஷயங்களில் கூட காட்டும் அக்கறைதான் கனிவு என அடையாளம் காணப்படுகிறது. இப்படி இருப்பவர்களால் அறிமுகம் இல்லாதவர்களை கூட உறவாகபெற முடியும் யாரிடமும் நட்பு கொள்ளாத பக்கத்து வீட்டுக்குக்காரர், சிடுமூஞ்சி, முரட்டுத்தனமான நபர்கள் என எவரும் அன்பாக நடந்து கொள்வார்கள்.
நேரம் ஒதுக்குங்கள்
நீங்கள் ரொம்ப பிசியான மனிதராக இருக்கலாம். அதற்காக உங்களின் எல்லா நேரமும் பணத்தால் அளவிடப்பட வேண்டியது அல்ல. வீட்டில் இருக்கும் உறவுகள் அல்லது வெளியில் இருக்கும் உறவுகள் ஏதோ உறவு கதை பேசி பொழுதுபோக வேண்டியிருக்கும் அப்பொழுது சும்மா வெட்டி பேச்சு எதற்கு? எனக்கு வேறு முக்கியமான வேலை இருக்கிறது, என கத்தரித்துக் கொள்ளாதீர்கள். உறவுகளுடன் நீங்கள் செலவழிக்கும் நேரத்தில்தான் இந்த சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். அதனால் உறவுகளிடம் பேசி உறவுகளை மதித்து போற்றுவோம்.!
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்போம்!