
பொதுவாக வாழ்க்கையில் நமக்குள் பிரதானமாக கடைபிடிக்க வேண்டிய பல விஷயங்களில் ஒற்றுமையும் உண்டு. அநேகமாக குடும்பத்தில், உள்ளவர்களிடம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம், அலுவலகத்தில் உடன் பணிபுாியும் ஊழியர்களிடம், அதைத்தொடர்ந்து உறவினா்களிடத்தில், அன்பு, பாசம் காட்டுவதைப்போலவே அனைவரிடமும் ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஒற்றுமை என்பது பொிய பாலத்தின் அஸ்திவாரம் போன்றது. நாம் வளா்க்கும் பிராணிகளிடமோ அல்லது , பறவைகளிடமோ ஒற்றுமைக்குறைவு என்பதே இருக்காது.
காகத்திற்கு நீங்கள் அன்னம் வைத்தால், அதற்கு எவ்வளவு பசியாக இருந்தாலும், தான் மட்டும் சாப்பிடாது. ஒரு காகம் வந்து கரைந்து கரைந்து தன் சகாக்களை வரவழைத்து ஒற்றுமையாய் சாப்பிடும். அதேபோல எறும்புகள் சாரை சாரையாய், கூட்டமாக வந்து உணவுப்பதாா்த்தம், மற்றும் தங்களுக்கு தேவையானதை எடுத்துச்சென்று சேமிக்கும்.
ஆடுகள் கூட்டமாக போகும் போது ஒற்றுமையாய் வரும், போகும். ஒரு ஆடு எந்தப் பக்கம் எந்த வழியில் தொடர்ச்சியாக வரிசையாகப் போகிறதோ ஏனைய ஆடுகளும் அதேபாதையில் பயணிக்கும். அந்த அளவிற்கு ஐந்தறிவு ஜீவன்கள் நமக்குள் ஒற்றுமையின் தன்மையை உணர்த்துகின்றன.
அதேபோல மனிதர்களிடம் ஒற்றுமைத்தன்மை இருப்பது அவசியம். ஒரு குடும்பத்தில் நான்கு போ்கள் சகோதரர்களாய் இருக்கும் நிலையில், ஒருவரை ஒருவர் அனுசரித்து சொல் பேச்சைக்கேட்டு, பொியவர்களை சிறியவர்கள் மதித்துவாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் நல்ல குடும்பத்திற்கு அழகு. பொதுவாக அண்ணன், தம்பிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல், ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தாலே அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும்.
மேலும், நம்மைக் கெடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பயமும் வர வாய்ப்புகள் அதிகமே. 'அவர்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருப்பாா்கள். அவர்களிடத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது' என்ற மரியாதை கலந்த பயம் வருவது இயற்கை! அதுபோன்ற குடும்பங்கள் கிடைப்பதும் பாா்ப்பதும் அரிதாகி விட்டது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த நமக்குள் பேதம் எதற்கு?
இது போன்றே கணவன் மனைவிக்குள் ஆரம்பத்தில் இருந்தே ஒற்றுமை குறையவே கூடாது. 'ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமைய வளா்ப்பதனாலே விளையும் தீமையே' என்ற பாடலுக்கேற்ப கணவன் மனைவி ஒற்றுமை என்பது மிகப்பொிய விஷயம். ஒருபோதும் எந்த தருணத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதோ, அல்லது மற்றவரிடம் குறை சொல்வதோ தவறான முன் உதாரணமாகும். நமது ஒற்றுமை பலம், நமது பலவீனம், ஒற்றுமையின்மை, அந்த பலவீனத்தைப் பயன்படுத்தி மூன்றாம் நபர் எளிதில் வருவதற்கு இடம்கொடுக்கக்கூடாது! அது கொள்ளிக்கட்டையால் நமது தலையை நாமே சொாிந்து கொள்வதற்கு ஈடானது.
பொதுவாக நட்பில், நண்பர்கள் வட்டத்தில், கணவன் மனைவிக்குள், தாய் தகப்பனாா் மகன்கள் மத்தியில், மாமியாா் மருமகள் உறவில், சகோதர சகோதரி பாசப்பிணைப்பில், அக்கம் பக்கத்தில் கருத்துப்பரிமாற்றம், மனமாச்சர்யம் ஏற்படும் நிலையில் உடனடியாக ஈகோ பாா்க்காமல், பேசித்தீா்வு காண்பதே நல்லது. தன்மானத்தை அடகு வைக்காமல் விட்டுக்கொடுத்துப் போகலாம்.
ஒற்றுமைக்கு ஒரு உதாரணமாக... நமது எதிா் வீட்டு மரத்தில் உள்ள தேன் கூட்டின்மீது கல்லை எறிந்து பாருங்களேன். அவ்வளவுதான் அனைத்து பூச்சிகளும் ஒரு சேர பறந்து வந்து நம்மை ஒரு பதம் பாா்த்துவிடாதா? அதுபோலத்தான் ஒற்றுமை என்பது தேன் கூடுபோல!
ஆகவே அனைவரும் ஒற்றுமையாய் வாழ்வோம், சாதிக்க இயலாததை சாதிப்போம், ஒற்றுமையில் வேற்றுமை தவிா்ப்போம்.