உலகம் எப்போதும் புதிதாகவே இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. நம்மைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் யாருக்கும் இல்லை. மக்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கே ஓடுகிறார்கள். நாம் பெரும்பாலும் அடுத்தவர் களுக்காகவே வாழ்கிறோம். திருமணத்திற்குப் செல்லும் போதுகூட நமக்காக உடுத்துவதைவிட மற்றவர்களுக்காக உடுத்துகிறோம்.
நமக்குத் தெரிந்தவர்களை சமூகமாக பாவித்துக் கொண்டு அவர்கள் பார்வையில் உயர்ந்து நிற்பதற்காக நம் தனித்தன்மைகள் எல்லாம் உதறிவிட்டு அவர்கள் விரும்பிய மனிதர்களாக மாறி வாழ்வை வீணாக்கு கிறோம். தெரிந்தவர்கள்தான் நம்முடைய சமூகத்தை மாயாஜாலமாகக் கட்டமைக்கிறார்கள். எப்போது நாம் வாழ்க்கை நமக்காக மட்டுமே என திடமாக வாழத்தொடங்குகிறோமோ அப்போது புதியதோர் உலகம் புலப்படுகிறது. வானம், பூமி, நதி, கடல் எல்லாம் மாறுகிறபோது மனிதன் மட்டும் மாற மாட்டேன் என்கிறான்.
புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசன் பாடினான். அதற்கு மானுடம் முழுவதும் அன்பினால் நிரம்பி வழிய வேண்டும். மனிதர்களுள் ஏற்றத் தாழ்வு இல்லை. நான் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் என்றில்லாமல் நம்மையே உயர்ந்தவர்கள் என கருதி இல்லாமல் இருப்பதும் நம் உள்ளத்திலிருந்து புதிய உலகம் தொடங்க வேண்டும்.
ஒரு ஜென் கதை. ஜென் மாஸ்டர் ஏதாவது அற்பப் பொருளைத் திருடி சிறைக்குச் சென்று நீதிமன்றத்தில் தன் தவற்றை ஒப்புக் கொள்வார். சீடர்களுக்கு இது அவமானமாக இருந்தது. ஏன் அற்பப் பொருட்கள திருட சிறை செல்கிறீர்களே நாங்களே தருகிறோம் என்றனர். அதற்கு அவர் சிறைக்குச் செல்லும்போதெல்லாம் அங்கு இருப்பவர்களை சீர்திருத்தி வருகிறேன். சிறைக்குச் சென்றால்தான் அது முடியும். பலரும் மாறி மேன்மையானவர்கள் ஆகிறார்கள். அவர்கள் மாற நான் குற்றவாளியாக இருக்கிறேன் என பதிலளித்தார். எவ்வளவு உயர்ந்த குணம் அவருக்கு.
புதியதோர் உலகத்தை செய்வதற்கு நாம் இயற்கையை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மரங்களை கனிகளை காய்களை மலைகளை நதிகளை சிதைக்காமல் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். விதையில்லா பழங்களை தொடர்ந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் பல்லில்லாத குழந்தைகள் பிறக்க ஆரம்பித்துவிடும். மலர் இல்லாத உலகை, குயில் இல்லாத தோப்பை, தேனீக்கள் இல்லாத பூங்காக்களை, சிங்கங்கள் இல்லாத காடுகளை, புலிகள் இல்லாத சரணாலயங்களை. நம்மால் கற்பனை செய்யமுடியாது. வாழ்க்கை சரியாக நடப்பதற்கு நாம் இயற்கையேடு இயைந்து வாழ்வதுதான் முக்கியம்.
சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் தங்கள் உயிரைப் பயணம் வைத்து பணியாற்றுகிறார்கள். எல்லோரும் மேன்மையானவர்கள் என்பதையும் பணத்தை விட மனிதம் முக்கியம் என்பதை கற்றுத் தெளித்தால் புத்தம் புதிய உலகத்தை நித்தம் நித்தம் செய்ய முடியும்.
அனைவரையும் நேசிப்பதையும், இயற்கையை ஆராதிப்பதையும், தன்முனைப்பற்ற மனநிலையைக் தரித்துக் கொள்வதையும் நாம் செய்தால், ஞாயிறு ஒன்றாக இருந்தாலும் விடியல் வெவ்வேறாக இருக்கும். புதிய உலகம் கண்சிமிட்டி நம்மை வாழ்த்தும். அப்போது மனித வாழ்வின் ஒவ்வொரு நொடியும் உன்னதமான அனுபவமாக மாறும். பூமியே சொர்க்கமாக ஆனந்த நினைவுகளால் பூத்துக் குலுங்கும்.