வாழ்வில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இரண்டு அல்லது மூன்று திறன்களை இழப்பினும் அவை உங்களை பலவீனப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு குறைபாடு உங்களுக்கு கலை, எழுத்து, இசை ஆகியவற்றில் கவனம் செலுத்த வாய்ப்பை ஏற்படுத்தும்.-- Jim Davis.
ஜிம் டேவிஸ் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க நடிகர். மேற்கத்திய தொலைக்காட்சிகளில் அவரது பாத்திரங்களுக்கு மிகவும் பிரபலமானவர். தன்னம்பிக்கை மொழிகளுக்கும் கவனம் பெற்றவர்.
அந்த தம்பதியர் காதல் மணம் புரிந்து ஆசைக்கு ஒரு பெண் குழந்தையுடன் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற வாக்கிற்கு ஏற்ப அதிகம் ஆசையின்றி வருவதை வைத்து சுகமாக வாழ்ந்து வந்தனர். திடீரென அந்த கணவருக்கு காய்ச்சல் வர மருத்துவரிடம் சென்றனர். சில நாட்கள் கழித்து காய்ச்சல் சரி ஆனது ஆனால் அவரின் கண் பார்வை பறிபோனது. ஆம் மருத்துவரின் கவன குறைவாலும் தவறான சிகிச்சையாலும் அந்தக் கணவரின் பார்வை முற்றிலும் பறிபோனது.
எதிர்பாராத இந்த அதிர்ச்சி அந்த குடும்பத்தை நிலைகுலைய வைத்தது. ஆனாலும் அந்த கணவர் மனம் தளரவில்லை. கண் போனால் என்னிடம் அறிவு இருக்கிறது என்று பிரெய்லி முறையை கற்றுக்கொண்டு பாடங்களை நடத்த தொடங்கி விட்டார். இதன் மூலம் வருமானமும் வந்தது.
அதேசமயம் தான் பட்ட இந்த உடல் வேதனையிலிருந்து மனிதர்களின் உடல் நலப்பிரச்னைகளை புரிந்து கொண்ட அவர் தன்னிடம் உள்ள ரத்தத்தை தானமாக தர ஆரம்பித்தார். இந்த ரத்த தான சேவையினால் பல உயிர்களை காப்பாற்றும் செயல் அவருக்கு முழு மன நிறைவை தந்தது. இவர் அவசரமாக ரத்தம் தேவைப் படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சென்று தரத் தயங்குவதே இல்லை. இவருக்கு கல்லூரி செல்லும் மகள் உதவியாக இருந்ததுடன் தந்தை வழியிலே அந்த இளம் பெண்ணும் அவருடைய மனைவியும் இவரைத் தொடர்ந்து ரத்த தானத்தை தர ஆரம்பிக்க இதை பார்த்த இவரின் உறவினர்களும் இவர்களை பின் தொடர்ந்து ரத்த தானத்துக்கு உதவ முன் வந்தனர்.
இவரைப்பற்றி கேள்விப்பட்ட அமைப்பு இவருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து இளையசமுதாயத்தின் தன்னம்பிக்கை நெறியாளர் என்று போற்றியது.
தனக்கு ஏற்பட்ட குறையை இவர் நினைத்து மனம் தளர்ந்து தன்னம்பிக்கை இழந்து இருந்தால் இத்தனை உயிர்களை காப்பாற்ற முடிந்து இருக்குமா? இவரால் உந்தப்பட்டு இவரை பின்பற்றுபவர்கள் நிறைய பேர் தற்போது இந்த மகத்தான சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இடையில் வந்த பலவீனத்தை பொருட்படுத்தாமல் இவருக்கு வந்த உடல் பாதிப்பினால் எழுந்த விழிப்புணர்வையே பலமாக்கி வாழ்வில் நிறைவான வெற்றி பெற்றுள்ளார் இந்த மனிதர். இவர் போன்ற பலர் உதாரண மனிதர்களாக நம்மிடையே அறியப்படாமல் வாழ்ந்துதான் வருகிறார்கள்.
நமக்குத் தெரிந்து இவர் ஒருவர். தெரியாமல் நிறைய பேர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே சின்ன சின்ன பலவீனங்களை ஒதுக்கி அதை சரிகட்டும் விதமாக நம்மிடம் உள்ள வேறு வளங்களை உபயோகித்து வாழ்வில் வெற்றி பெறுவதுதான் சிறந்த வழியாகும்.