ஆணவம். மனிதர்களுக்கு இருக்கக் கூடாத ஒரு தீயகுணம். ஆணவம் பிறர் மனதில் வெறுப்பு உணர்வையே விளைவிகும். சகமனிதர்கள் ஆணவம் பிடித்தவர்களை வெறுத்து ஒதுக்குவார்கள். இத்தகைய குணம் உள்ளவர்களிடம் பழகுவதற்கும் தயங்குவார்கள். ஆணவம் பிடித்தவர்களுக்கு பிரச்னைகள் வரும்போது அனைவரும் ஒதுங்கிக் கொள்ளுவார்கள்.
ஆணவத்தால் அழிந்தவர்கள் ஏராளம். அன்பால் சகமனிதர்களின் மனங்களை வென்று உயர்ந்து நிலைத்து வாழ்பவர்கள் ஏராளம். எந்த நன்மையையும் செய்யாத ஆணவத்தை நாம் ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும். இக்கணமே ஆவணத்தை விட்டொழிப்போம். ஆணவத்தை விட்டொழிக்க வேண்டும் என்பதை உணர்த்து ஒரு மகாபாரத நிகழ்வை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
மகாபாராதப் போர் முடிவிற்கு வந்தது. போர்க்களத்தில் போரிட்டு வீரமரணம் அடைந்த இரண்டு தரப்பு வீரர்களின் உடல்கள் அப்பகுதியெங்கும் சிதறிக்கிடந்தன. குருதி நிறைந்த போர்க்கள பூமியில் ஆங்காங்கே மரண ஓலங்கள். அம்புகளால் மாண்டு போன யானைகள் குதிரைகள் என அந்த இடமே மிகவும் பரிதாபகரமாக காட்சி தந்தது. போரில் வெற்றி பெற்றதால் அர்ஜீனன் மிகவும் கர்வமான மனநிலையோடு காணப்பட்டான். தேரின் மீது நின்று நாலா திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி அத்தகைய காட்சிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
கிருஷ்ண பரமாத்மா அர்ஜீனனிடம் “அர்ஜீனா. போர் முடிவிற்கு வந்து விட்டது. தேரைவிட்டு உடனே இறங்கு” என்று கட்டளையிட்டார்.
வெற்றிக்களிப்பில் இருந்த அர்ஜீனன் இதைச் சொல்வது கிருஷ்ண பரமாத்மா என்பதை சற்று மறந்தே போனான். அவன் மனதில் ஆணவம் குடிகொண்டது. ஆணவம் அவன் கண்களை மறைத்தது.
“கிருஷ்ணா. தேரோட்டியானவன் வெற்றி பெற்ற வீரனின் கையைப் பிடித்து தேரிலிருந்து இறக்குவதுதான் மரபு. நீயோ மரபை மீறி என்னை முதலில் தேரிலிருந்து இறங்கு என்று சொல்கிறாயே. என்னை தேரிலிருந்து முதலில் இறங்கச் சொல்லிவிட்டு பின்னர் நீ தேரில் இருந்து இறங்கலாமா?”
“அர்ஜீனா ஆணவம் உன் கண்களை மறைக்கிறது. நான் சொல்வதைக் கேள். நான் சொல்வது உன் நன்மைக்கே”
கிருஷ்ண பரமாத்மா இவ்வாறு சொல்ல வேறு வழியின்றி அர்ஜீனன் தேரைவிட்டு இறங்கினான்.
கிருஷ்ணர் அர்ஜீனனிடம் ஒரு இடத்தைக் காட்டி “உடனே அங்கே சென்று நில்” என்று சொல்ல அர்ஜீனனும் அவ்வாறே செய்தான்.
கிருஷ்ணர் தேரின் மீது பறந்து கொண்டிருந்த கொடியை ஒரு முறை நோக்கினார். பின்னர் தேரிலிருந்து குதித்து இறங்கிச் சென்று அர்ஜீனனோடு நின்று கொண்டார். சற்று நேரத்தில் அந்த தேர் மளமளவென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிப் போனது.
கிருஷ்ணர் ஏன் தன்னை முதலில் தேரிலிருந்து இறங்கச் சொன்னார் என்பதற்கான காரணத்தை அர்ஜீனன் இப்போது புரிந்து கொண்டான். யோசிக்காமல் கர்வத்தால் கிருஷ்ணரிடம் தவறாகப் பேசி விட்டோமே என்று வருந்தினான்.
கிருஷ்ண பரமாத்மா இப்போது அர்ஜீனனிடம் பேசினார்.
“அர்ஜீனா. உன் எதிரிகள் உன்மீது ஏவிய மந்திரக் கணைகள் மற்றும் அம்புகள், வலிமை மிக்க அஸ்திரங்கள் யாவும் தேரில் நானும் தேர்க்கொடியாக அனுமனும் இருந்த காரணத்தினால் தங்கள் சக்தியை வெளிப்படுத்த முடியாமல் செயலற்றுக் கிடந்தன. அனுமன் கொடியை விட்டு நீங்கினான். நான் தேரிலிருந்து இறங்கிய பின்னர் அம்புகளும் அஸ்திரங்களும் சக்தி பெற்று வெடித்தன. இதனால் தேர் எரிந்து சாம்பலாயிற்று. நீ மட்டும் தேரிலிருந்து கடைசியாக இறங்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பார்.”
அர்ஜீனன் அதை நினைத்துப் பார்த்து நடுங்கினான். தன் ஆவணப் பேச்சிற்காக கிருஷ்ண பரமாத்மாவிடம் வருத்தம் தெரிவித்து அவர் காலடியில் விழுந்தான். கிருஷ்ணர் அர்ஜீனனை மன்னித்து போர்க்களத்தை விட்டு அழைத்துச் சென்றார்.
ஆணவ குணமானது நம்மை அழிக்கும். அன்பை ஆராதிக்கும் மனநிலை நம்மைக்காக்கும்.