
வாழ்வில் உயர் - முன்னேற்றமடைய விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்வில் வளைந்து கொடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதுவும் ஒரு செயல் திறன்தான். சமய சந்தர்ப்பம் அறிந்து அவ்வாறு வளைவதால் உயர்வும் மதிப்பும் அழகும் கூடும்.
புருவம் நேராக இருந்தால் அழகாக இராது. வில்லைப்போல வளைந்துள்ள புருவம் எத்தயை அழகாக இருக்கிறது! வளைந்த யாழில்தான் என்னென்ன மதுரகானங்கள் எழுந்து செவியில் புகுந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன!
நதிவளைந்து ஓடுகின்ற பொழுது எவ்வளவு அழகாக விளங்குகிறது! பூத்து வளைந்த கொடிகளைக் கண்டு மகிழாதவர்கள் யார்? இவையெல்லாம் உங்கள் வளைந்து கொடுக்கும் தன்மைக்கும் பொருந்தும்.
மனித உணர்வுகளை மதித்து மனித வாழ்க்கையை மேம்படுத்த முயலவேண்டும். அதிகாரத்தின் முன்னிலையிலோ, செல்வாக்கின் முன்னிலையிலோ, பணத்தின் பின்பலத்திலோ, ஒரு தலைவனின் செல்வாக்கு நிழலிலோ நீங்கள் ஒரு பதவியைப் பெறக்கூடும்.
ஆனால் பிறருடன் உங்களால் ஒத்துப்போக முடியவில்லை என்றால் - பிறருடன் சுமுகமாக அரவணைத்துப் பழக முடியவில்லை என்றால், உங்கள் பதவி நிலைக்காது.
உறவு இனிமையான உணர்வுகளை எழுப்பும் போது அதன் இனிய இசையில் நம்மை மறக்கிறோம். இந்த செயல் முறைகளெல்லாம் உங்கள் செயல் திறனிலிருந்து பிறப்பவைதாம்.
"வெற்றிக்கான நிபந்தனைகள் மிகவும் எளிதானவைதாம். கொஞ்ச நேரம் நாம் உழைக்க வேண்டும்; கொஞ்ச நேரம் பொறுத்திருக்க வேண்டும்; ஆனால் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஒருபோதும் முன்வைத்த காலை பின்வாங்கக் கூடாது " என்கிறார் சிம்ஸ் எனும் மனோதத்துவ அறிஞர்.
இயங்க வேண்டும்; செயல்பட வேண்டும் உழைக்க வேண்டும் வாழ்வில் உயரவேண்டும் என்பதை உணர்ந்து முயலும்போது. உங்களுக்குச் சிறு துன்பங்கள் ஏற்படலாம்; தோல்விகள் தொடரலாம்
அந்நிலையில் நீங்கள் பொறுமை இழக்காமல் மனஅமைதியோடு நிலை குலையாது சுறுசுறுப்போடும் கவனத்தோடும் முயன்றால்தான் நீங்கள் வெற்றியை அடையமுடியும்.
எது நேர்ந்தாலும் ஆய்ந்து, தேர்ந்ததை தீர்மானித்து தொடங்கியதை, மனம் தளராமல், மனம் மாறாமல், வெற்றி பெறும் வரை விடுவதில்லை என்னும் உறுதியுடன் உத்வேகத்துடன் உழைப்பதே விடாமுயற்சி எனப்படும்.
வாழ்க்கையில் முன்னேற விரும்பும் உங்களிடம் அவ்விடா முயற்சி அவசியம் இருக்க வேண்டும். அதுவும் செயல்திறனின் அங்கமே.
இவ்வரிய இயல்பை நீங்கள் பெற்றுவிட்டால் எதையும் ஆராயாமல் ஒன்றைத் தேர்ந்தெடுக்க மாட்டீர்கள்; அவசரத்தில் ஒரு காரியத்தில் இறங்கிவிட மாட்டீர்கள்; ஆய்ந்தே தேர்வீர்கள். எது வந்தாலும் பிடித்த பாதையை விட்டு நகரமாட்டீர்கள். உங்கள் கவனம். சிந்தனை அனைத்தும் ஒரே பக்கத்தில் திரும்பியிருக்கும். அந்த ஒரு பக்கம்தான் உங்களுக்கு வெற்றியளிக்கும்.
ஏற்படும் இடரோ, எதிர்ப்போ, தடையோ, தோல்வியோ, உங்கள் செயல்திறனைக் குறைப்பதற்குப் பதிலாகப் பெருக்கும். உங்கள் உறுதியை அழிப்பதற்குப் பதிலாக வேகப்படுத்தும்.
எவரோ அந்தக் காலத்தில் முயன்றதன் பலன்தான் இன்று நாம் நுகரும் அத்தனை வசதிகளும்.
ஹோமர் முயன்றிராவிட்டால் நமக்கு 'இலியட் காவியம் கிடைத்திருக்காது.
வள்ளுவர் முயன்றிராவிட்டால் நமக்குத் திருக்குறள்' கிடைத்திருக்காது.
மார்க்கோனி முயன்றிராவிட்டால் நமக்கு வானொலிப்பெட்டி கிடைத்திருக்காது. இவ்வண்ணம் எல்லாப் பொருள்களுமே எவரோ ஒருவர் முயன்றதன் பலன்தான்.
அவர்கள் மட்டும் முயலாது முழங்காலைக் கட்டிக் கொண்டு இருந்திருந்தால், நாகரிகமும் முன்னேற்றமும் முடமாகிக் கிடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
முயற்சிமட்டும் இல்லாதிருக்குமாயின் உலகில் மலர்ச்சி ஏற்பட்டிராது என்பது உண்மையே.