
குழந்தைகள் தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு, கீழ்படிதல் போன்ற நற் குணங்களுடன் சிறந்த டீனேஜராக உருவெடுக்க பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கற்பிப்பது அவசியம். இது அவர்களுக்கு கீழ் படியும் குணம் மற்றும் நேர மேலாண்மையை கற்றுக்கொள்ள உதவும். அவர்கள் படிப்படியாக வளரும்போது இப்பழக்கம் அவர்களுக்கு நல்ல முறையில் உதவி புரியும்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் குழந்தைகள் தங்கள் படுக்கையை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு வரும்படி கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு பொறுப்புணர்வுடன் சிறு சிறு வேலைகளை செய்து முடிக்கும் திறனை வளர்க்க உதவும்.
ஒரு நாளை நன்றி உணர்வுடன் ஆரம்பிப்பது அவர்களுக்குள் நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும். அவர்களுக்கு கிடைத்திருக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் தெளிந்த மன நிலையோடு ஏற்றுக்கொண்டு நன்றி கூறக் கற்றுக்கொடுத்தல் நன்மை தரும்.
குழந்தைகளுக்காக ஆரோக்கியமான காலை உணவைத் தயாரித்து அவர்களை உட்கொள்ளச் செய்வது அவசியம். இது பள்ளியில் அவர்கள் பாடத்தையும் மற்ற செயல்பாடுகளையும் கூர்ந்து கவனிக்க சக்தி தரும். தினசரி சரிவிகித உணவை உண்ணக் கொடுப்பது பிற்காலத்தில் எப்பொழுதும் ஆரோக்கியம் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்பதற்கு அவர்களுக்கு வழி காட்டும்.
காலையில் சக்தி தரும் வகையில் குழந்தைகளுக்கு கையை காலை நீட்டி மடக்குவது போன்ற சிறு சிறு பயிற்சியளிப்பது அவர்களுக்குள் புத்துணர்ச்சி ஊட்ட உதவும். மனநிலை மகிழ்வுறவும் செய்யும். எதிர் காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்வியலை பின்பற்றவும் இது உதவி புரியும்.
பெற்றோர், தினமும் குழந்தைகளுக்காக சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்கு புத்தகத்தில் கதை போன்றவற்றை படித்துக்காட்டவும், புதுப் புது விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் உதவலாம். எதிர் காலத்தில் இது அவர்களுக்கு தொடர்ந்து புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டாகச் செய்யும்.
குழந்தைகளுக்கு ஒரு நாளில் செய்யவேண்டிய சிறு சிறு வேலைகளை திட்டமிட கற்றுத்தரலாம். வேலைகளை ஒருங்கிணைக்கவும் முன்னுரிமை கொடுக்கவேண்டிய வேலைகளை எப்படி தெரிந்து கொள்வது என்றும் விளக்கிச் சொல்லித்தரலாம்.
குழந்தைகளுக்கு அவர்கள் தம் உடல், பற்கள், உடை ஆகியவற்றை சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பேணிப் பராமரிப்பது எப்படி என்று கற்றுத் தருவது அவசியம். தலை முடியை வாரி ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ளவும் கற்றுத்தரணும். இதெல்லாம் அவர்களுக்கு சுய விழிப்புணர்வு பெறவும், டீனேஜில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் உதவும்.