அவர் மிகவும் நல்லவர். ஆனால் முன் கோபி என்று சிலரைக் கூறுகிறோம். பொறுத்தார் பூமியாள்வார். பொங்கினவர் காடாள்வார் என்பது பொன்மொழி.
பொறுமைக்கும் தருமனையும், கோபத்துக்கு துரியோதனனையும் கூறுவார்கள். தர்மர் எல்லா துன்பங்களை வென்று ஆண்டார். நாடாண்ட துரியோதனன் எல்லாவற்றையும் இழந்து மாண்டான். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என செயல்பட்டால் வெற்றி விலகும். தோல்விதான் மிஞ்சும்.
அரவிந்தர் ஒரு கோபமுள்ள இளைஞனிடம் கேட்கிறார், "உன்னை மாதிரி பலசாலியான, அறிவுள்ள பையனுக்கும் கடினமான செயல் எது. அடிக்கு அடியா அல்லது அந்த நேரத்தில் கையை கெட்டியாக மூடி சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்வதா." என்று கேட்டார்.
"என்னைப் பொறுத்தவரை அவன் முகத்தில் குத்து விடுவதே சுலபம் அமைதியாக இருப்பது கஷ்டம்." என்றான்.
சரி நீ என்னிடம் இன்னொரு சந்தர்ப்பத்தில் வரும்போது சொல்கிறேன் என்றார்.
பல நாட்கள் கழித்து அவன் அரவிந்தரிடம் வந்து," ஐயா, என்னோடு வேலை செய்பவன் முன் கோபி. என்னை அடித்துவிட்டான். அந்த சமயம் நீங்கள் சொன்னது ஞாபகம் வந்தது. அவன் நான் திருப்பி அடித்து விடுவேன் என எச்சரிக்கையாக இருந்தான். நான் கொஞ்ச நேரம் கழித்து அவன் கையை குலுக்க கை நீட்டினேன். அப்படியே என்னை கட்டிப் பிடித்துக் கொண்டான். இனி நீ எனக்கு நண்பன் என்று சரணடைந்து விட்டான்." என்று கூறினான் மனதை பக்குவப்படுத்தினால் அறிவுப் பயிர் வளரும். அதற்கு கல்வி தேவை இது வன்முறையை தடுத்து நன்முறையை வளர்க்கிறது.
கோபமே கூடாதென்பது அல்ல. ரௌத்திரம் பழகு என்றான் பாரதி. இந்த சமுதாயத்தில் காணப்படும் கொடுமைகளைக் களைய கோபப்பட வேண்டும். "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்று குறள் கூறுகிறது. சினம் கொண்டவரை மட்டுமல்ல அவரைச் சேர்ந்தவர்களையும் அழித்து விடுகிறது.
ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு என்கிறார்கள். சினம் பாம்பு போன்றது. இந்த சினம் இறந்து போய்விட்டால் நாம் நினைப்பதெல்லாம் நிறைவேறும் என்கிறார் இடைக்காட்டு சித்தர். முன்னேற விரும்பும் இளைஞர்கள் உணர்ச்சி வசப்படுதல் கூடாது. அறிவு வசப்பட வேண்டும். நீரில் மூழ்கியவர்கள் எது கிடைத்தாலும் பற்றிக் கொள்வதைப்போல் வாழ்க்கையில் முன்னேற எது கிடைத்தாலும் பிடித்துக் கொள்ள வேண்டும். அதற்கு கோபம் குறுக்கே வரக்கூடாது. கூடுமான வரை கோபத்தைக் குறைத்துக் கொண்டால் அதுவே உன்னை அடுத்தபடிக்கு அழைத்துக் கொண்டு போகும் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது பழமொழி. எவ்வளவு சிறிய செயலையும் புறக்கணிக்காமல் மேற்கொண்டால் தான் மிக உயர்ந்த செயலை முடிக்க முடியும். இதற்கு பொறுமை மிக மிக அவசியம்!