
இன்றைய பரபரப்பான சூழ்நிலை மற்றும் வாழ்க்கை முறைகளில் பலருக்கு மன அழுத்தம் ஏற்படுவது சகஜமாகி வருகின்றது. மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எதிர்பார்ப்பது நடைபெறாமல் போவது. கவலை கொள்வது. இயலாமை பற்றி நினைத்து வேதனை கொள்வது. தாமதம் ஏற்படுவதால் படபடப்பாகி தவிப்பது.
சரியான நேரங்களில் சரிவர உணவு உட்கொள்ளாமல் போவது. உடல் நலம் சரியில்லாமல் போய் அதை பற்றி எண்ணி வருத்தப்படுவது. குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் பற்றி விடாமல் சிந்தனை செய்வது. திட்டமிட்டப்படி நடைபெறாமல் போவது.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தள்ளிப்போடுவது. எதிர் பார்த்தவை எதிர்பார்த்த அளவில் கைக்கு கிடைக்காமல் போவது.
அலுவலகங்களில், வியாபாரங்களில், வாழ்க்கையில் சந்திக்கும் தடங்கல்கள், தோல்விகள், சங்கடங்கள் போன்றவை. எதிர்பாரத ஷாக்குகள், பணம் மற்றும் நேர விரையம். வீண் அலைச்சல், எதிர்கொள்ளும் நஷ்டங்கள்.
சந்திக்கும் பலதரப்பட்ட எதிர் மறை நிகழ்வுகள். மன அழுத்தம், சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டால் பூதாகாரமாக அதிகரித்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
எனவே சரியான நேரத்தில் மன அழுத்த மேலாண்மை அமல்படுத்துவது முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாறு செய்ய தவறினால் பதற்றம் அல்லது மனக்கவலை, சோர்வு, தளர்ச்சி அழுத்தம் போன்றவை அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகம். இவற்றால் குறிப்பிட்ட நபர் தனது தன்னம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்குகிறார்.
எதிர்மறை எண்ணங்கள் ஆன என்னால் முடியாது என்ற சிந்தனை அதிகரித்து, ஆக்கிரமித்துக்கொண்டு செயல்படும் திறமை வலுவிழக்க துவங்கி இழப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்.
தனித்தன்மை மீது நம்பிக்கை போய் பிறரின் தயவின்றி தனியாக செயல்பட தயக்கம் குடிகொண்டு பயம் தொற்றிக் கொண்டு செயல்படும் திறனை மெதுவாக பயணிக்க வைத்து சங்கடங்கள், நஷ்டங்களை சந்திக்க வைக்கின்றது.
சிறந்த மன அழுத்த மேலாண்மை இவைகளுக்கு தீர்வு கண்டு சரி செய்ய முடியும். குறிப்பிட்ட நபருடன் மனம்விட்டு உரையாடுவது. அவரின் குறைகள், இயலாமைகள் போன்ற முக்கியமான விவரங்களை பொறுமையுடன் கேட்டு அறிந்துக்கொள்வது.
அந்த நபருக்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள், பின் பற்ற வேண்டிய சத்தான உணவு முறைகள் ஆகியவற்றை அனுபவம் மிக்க மருத்துவர் ஆலோசனைபடி சரி வர அளிப்பது.
கவுன்சிலிங் முறைபடி தேவையான மற்றும் பொறுத்தமான ஆலோசனைகள் வழங்குவது.
இவற்றுடன் உரிய தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ளும் வழி முறைகளை கற்றுத்தருவது.
நேர்மறை எண்ணங்களை மனதில் கொள்ளவும், பின்பற்றவும் வழி முறைகளை வகுத்துக்கொடுத்து சரிவர செய்கிறாரா என்பது குறித்து தொடர்ந்து கண்கானிப்பது, தேவைப்பட்டால் திருத்துவது.
இவற்றுடன் மனதிற்கு சோர்வு ஏற்படாமல் இருக்க உத்திகளை அறிமுகபடுத்துதல்.
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள தோதான இசை கேட்கவும், நடைப்பயிற்சியில் ஈடுபடவும், புத்தகங்கள் படிக்கவும், ஹாபிகளில் லயிக்கவும் வைப்பது.
இவைகளால் குறிப்பிட்ட நபர் முழுமையாக நேர்மறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பங்குகொண்டு மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்விக்க கூடிய செயல்பாடுகளால் உரிய பலன்களை பெற்று பயன்பெறலாம்.