மற்றவர்கள் கூறுகின்ற தீர்வுகள் எல்லாம் பெரும்பாலும் அனுபவங்களின் அடிப்படையில்தான். கடந்த காலத்திற்குச் சொந்தமானவை. பிரச்னைகளோ நிகழ்காலத்திற்குரியவை. அவர்கள் வாழ்ந்த சூழலும் சந்தித்த பிரச்னைகளும் நம்முடையவற்றிலிருந்து வேறுபட்டவையாக இருக்கும்.
நேற்று அடித்ததுபோல இன்று காற்று வீசுவதில்லை. யாராவது ஒருவர் நமக்குப் பாதுகாவலாக இருப்பார்கள் என எண்ணி அவர்களுடைய அறிவுரையை முதலீடாகக் கொண்டு தன்னுடைய சுயசிந்தனையாக எதையுமே துணையாகக் கொள்ளாமல் நடத்தப்படுகின்ற வர்த்தகம் நட்டத்தில்தான் முடியும்
எந்தவொரு துன்பமும் காரணம் இல்லாமல் ஏற்படுவது இல்லை. அது குறித்து ஆழ்ந்து யோசித்தால் அதன் அடிப்படைக் காரணங்களை நாம் முழுமையாக உணர முடியும். தூரத்தில் இருக்கின்ற கொடிக் கம்பத்தைக் காட்டி 'கொடி அசைகிறதா? அல்லது காற்று வீசுகிறதா?' என்று கேள்வி கேட்டபோது, 'மனம்தான் அசைகிறது' என்கின்ற பதிலை புத்திசாலி சீடன் கூறியதாக ஜென் கதை உண்டு.
நம்முடைய மனம்தான் நம்முடைய பூதாகரமான பிரச்னைகள் உருவாகக் காரணமாக இருக்கிறது. நம் எதிர்பார்ப்பு ஆசைக்கும், ஆசை ஏக்கத்திற்கும், ஏக்கம் இயலாமைக்கும். இயலாமை கோபத்திற்கும் கோபம் நிதானமின்மைக்கும், நிதானமின்மை அழிவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஆடு தாண்டும் காவிரி, அகலக் காவிரியாக மாறுவதைப் போல விரிவடைந்துகொண்டே செல்ல வழிவகுத்து விடுகிறது.
ஒருவன் முதுகில் அரிப்பு ஏற்பட்டது. மகனை அழைத்து சொறியச் சொன்னான், மகன் மூன்று முறை முயன்றும் சரியான இடத்தில் சொறியவில்லை மனைவியை அழைத்தான், அவன் ஐந்து இடங்களை ஆராய்ந்தாள், அப்போதும் நமைச்சல் இருந்த இடத்தை அவள் அணுகவில்லை.
வெறுத்துப்போன் அவன்தானே நமைச்சல் எடுத்த இடத்தைச் சொறிந்துகொண்டான். நம்முடைய பிரச்னை என்கின்ற நமைச்சலுக்கு அடுத்தவர்கள் சொறிவார்கள் என்றுஇருந்தால் அவர்கள் தவறான இடத்தையே சொறிவார்கள். தழும்புகள்தான் ஏற்படும்.
மின்னலில் இருக்கும் மின்சாரம்போல, காற்றில் இருக்கும் 'நறுமணம் போல், ஓடும் நதியில் உள்ள ஆற்றல்போல், நம் சிந்தனையின் உள்ளிருக்கும் வெளிச்சத்தில், மலைபோல பிரச்னைகளையும் தாண்டிக் குதிப்போம்; கடல் போன்ற கவலைகளையும் நீந்திக் கடப்போம்.
நம்முடைய செருப்பு கூட வலது காலுடையதை இடது காலுக்கு பயன்படுத்த முடியாமல் கச்சிதமாக செய்யப்படுகிறது. இப்படி இருக்கும்போது நம்முடைய பிரச்னைகளுக்கு நம்முடைய சுய சிந்தனையிலேயே தீர்வு காண்பதே உலகிலேயே மிகச்சிறந்த வழிமுறை ஆகும்.