நல்லா பேசுவோம். நல்லதை மட்டுமே பேசுவோம். அதுவும் நல்ல விதமாய் பேசுவோம். நல்ல விஷயங்களைப் பற்றியே பேசுவோம். இன்று பலரிடமும் மற்றவர்களைப் பற்றி தவறாக பேசும் பழக்கம் உள்ளது. இதனால் பேசப்படுபவரின் மனம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்தத் தவறாக பேசும் பழக்கம் உள்ளவர்களுடைய மனமும் பெரிதும் பாதிப்படைகிறது. எப்படி எனில் இவர்களது மனதில் யாருமே நல்லவர்கள் இல்லையோ என்ற எண்ணம் வளர ஆரம்பிக்கின்றது. இதனால் பிறர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குறைய ஆரம்பிக்கிறது. இதன் பலனாய் அவர்கள் மனம் சமநிலையை இழந்து நிம்மதியை இழந்து தவிக்கிறது. எனவே பிறரைப் பற்றி பேசும் பொழுது நல்லதே பேசுவோம். பிறர் செய்யும் காரியங்களில் நல்லதை குறித்து மட்டுமே பேசுவோம்!
நல்ல விஷயங்களை நல்லவிதமாய் நாளும் பேசுவோம். நம் பேச்சில் உண்மையும், அழகும் இருக்க வேண்டும். பேச்சு என்பது ஒரு கலை. பிறர் மனம் வருந்தும்படி பேசுவது தவறு. பிறருடைய நற்செயல்களையும் நல்ல எண்ணங்களையும் மனதார பாராட்ட வேண்டும். பிறரிடம் கனிவாக இருப்பது நம்மை நேர்மறையாக மாற்றுவதுடன் நம் நம்பிக்கையையும் வளர்க்கும்.
கெடுதல் பண்ண வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத் தான் அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் வேண்டும். நல்லதை செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு நல்ல மனம் இருந்தாலே போதும். நல்லதையே நினைத்து நல்லதையே செய்பவர்களுக்கு வாழ்வில் என்றும் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும்.
அழகாய் பேசுவோம். அழகானதையே பேசுவோம். உண்மையே பேசுவோம். நேர்மறையை விட எதிர்மறைக்கு ஆற்றலும் அதிகம், கவர்ச்சியும் அதிகம். நல்ல சொற்களை விட வசை சொற்களுக்கும், பாராட்டுகளை விட எதிர் விமர்சனத்துக்கும் பல மடங்கு வலு உள்ளது. இதனால் அவற்றின் தாக்கமும் அதிகம் இருப்பதைக் காணலாம்.
நாவினால் சுட்ட வடு காலத்துக்கு மாறாது அல்லவா? எனவே எதிர்மறைகளிலிருந்து விலகியே இருப்பது நல்லது. அப்படி இருந்தால் நம் செயல்களும், பேச்சும் நல்லதாகவே அமையும். நம் எண்ணங்களுக்கு ஏற்பவே நம் செயல்கள் அமைகிறது. எனவே பிறர் மனம் புண்படும்படி பேசாமல் இருக்க வேண்டும் என்றால் நல்லதையே பேசிப் பழக வேண்டும். நம் பேச்சு மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க வேண்டுமே தவிர துன்பங்களை கொடுக்கக் கூடாது.
யாரையும் எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும் குறைத்துப் பேசாமல், இகழாமல் அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளைப் பாராட்டி பேசுவது சிறந்தது. நல்லதையே பேசும் நற்பண்புகள் நிறைந்த மக்களை "மேன்மக்கள்" என்று கூறுவது வழக்கம். பிறரை நேசிக்கும் குணம் அவசியம் வேண்டும். "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" - வள்ளுவரின் குறளில் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் சிலர் வன் சொற்களை பேசுவது சுவையான கனிகள் இருக்கும் போது அவற்றை உண்ணாமல் இனிப்பு ஏறாத சுவை உள்ள காய்களை தின்பதற்கு ஒப்பாகும் என்று கூறுகிறார்.
எதை காக்கா விட்டாலும் நாவை காக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். நாம் பேசும் சொற்கள் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வர வேண்டும். சொற்களை சரியாக கையாளத் தெரிந்தவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியான மனிதர்களாக இருப்பதுடன் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி பார்ப்பார்கள். பேச்சு என்பது நம் எண்ணத்தின் வெளிப்பாடு. நம் எண்ணங்களை நல்லதாக வைத்துக் கொண்டால் நம் பேச்சும் நல்லதாகவே இருக்கும்.
நல்லதையே எண்ணுவோம்! நல்லதையே பேசுவோம்!