நாம் மற்றவர்களுடன் பழக நம் கருத்துகளை பரிமாற, நம் உள்ளத்தின் எண்ணங்களை வெளிப்படுத்த சொற்களைப் பயன்படுத்துகிறோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சொற்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நாளொன்றிற்கு சுமார் 16,000 சொற்கள் பேசினால் அது வருடத்திற்கு சுமார் 60 லட்சம் சொற்கள் பேசுவதாக மாறுகிறது. அதிகம் ஆக ஆக சொற்களின் முக்கியத்துவம் குறைகிறது. சொற்களின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதும் குறைப்பதும் நம் கையில் உள்ளது.
மனிதரால் நிமிடத்திற்கு 1300 முதல் 1800 சொற்களை சிந்திக்க முடியும். மனதின் எண்ணங்கள் எல்லாம் வார்த்தை வடிவம் பெற்று வெளிப் பேச்சாக வருவதில்லை. எல்லோருடைய வாழ்விலும் ரகசியங்கள் பல உள் மனதில் புதைந்து மற்றவர் பார்வையில் இருந்து மறைந்திருக்கும். அந்த ரகசியங்களும் சொற்கள் வடிவில் சிந்தனைகளில் எங்கிருந்தோ வந்து செல்லும். எல்லா மனிதர்களும் தங்கள் எண்ணங்கள் வாயிலாக தங்களுக்குள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றனர். இந்த உரையாடல்களுக்கும் சொற்களை உதவுகின்றன.
சொற்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை சில நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம் .பேசும் சொற்களுக்கும், எழுதும் சொற்களுக்கும், கேட்கும் சொற்களுக்கும் தேவையான முக்கியத்துவம் தரத் தயக்கம் காட்டுகிறோம். சொற்கள் அழகானதும், ஆபத்தானதும் கூட. எளிதாக வரும் சில வார்த்தைகள் நம் வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும் வல்லமையை கொண்டிருக்கும். நம் வார்த்தைகள் இன்னொருவரின் வாழ்க்கையையும் மாற்றிவிடும் சக்தி பெற்றது. சொற்களின் பொருள் அச்சொற்களை பேசும் முறையைப் பொருத்தும் உச்சரிக்கும் தொனியைப் பொறுத்தும் பேசும் சூழலை பொறுத்தும் வேறுபடுவதால் நாம் உரைக்கும் சொற்கள் குறித்தும் மிக கவனமாக இருந்தாக வேண்டும். சரியாக கேட்க தவறினால் சொற்களுக்கு தவறான அர்த்தங்களும் தரத்துவங்குகிறோம்.
நாம் பயன்படுத்தும் சொற்கள் நம்முடைய மனதையும், எண்ணத்தையும், குணத்தையும், பழக்கத்தையும் வெளிப்படுத்தும். நாம் பேசும் வார்த்தைகளால் மற்றவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியடைய செய்து அவர்களை அறிய செயல்களை செய்ய வைக்க முடியும். அதைப்போன்றே வார்த்தைகளால் மற்றவர்களை சோகப்படுத்தி, உற்சாகம் இழக்க வைத்து, காயப்படுத்தி அவர்களை எதிர்மறை செயல்களை செய்ய வைக்க முடியும். எந்த சொற்களை எப்படி, எங்கே பயன்படுத்த வேண்டும் என தீர்மானம் செய்வது நம்முடைய கையில் உள்ளது. திடீரென பயன்படுத்தும் விரும்பத்தகாத சொற்கள் காரணமாக பெரும் குற்றங்கள் நடைபெறுவதை பத்திரிகையை செய்திகள் தினமும் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
நாம் பேசும் சொற்களும் எழுதும் வார்த்தைகளும் மற்றவர்கள் மீதும் ஏன் நம்மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் நம்முடைய சொற்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்தல் மிக்க நலம் பயக்கும். உண்மையான, நேர்மையான காலத்திற்கு உகந்த நேர்மறையான சொற்களை பேசுவதையே மற்றவர்கள் விரும்புவர். அத்தகைய சொற்களை தகுந்த அளவு பேசுபவர்கள் சமுதாயத்தால் பாராட்டப்படுகின்றனர் உலகிற்கு நம் வலுவான, நேர்மறையான சொற்கள் தேவை.
அரிய கல்வியை கற்றவர்கள் தங்களின் கல்வித் திறனை சரியான சொற்கள் வாயிலாக வெளிப்படுத்த முடியாத போது அவர்களின் கல்வித் திறன் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. தவறான சொற்களை பயன்படுத்தினால் மேதைகளும் பேதைகளாகக் காட்சித் தருவர். சொற்களே ஈர்க்கும் சக்தியாக, இணைக்கும் சக்தியாக, கட்டுப் படுத்தும் சக்தியாக மாறி அச்சொற்களை பயன்படுத்துபவருக்கு வல்லமை தருகிறது எனவே சொற்களின் மீதான திறமையினை வளர்த்துக் கொள்ள வேண்டும். வரம்புகளுக்கு உள்ளேயே சொற்களை பயன்படுத்தி பெருமை பெறவும் முயற்சி செய்ய வேண்டும்.