யார் நிறைகுறைகளை சுட்டிக்காட்டினாலும் அதை எல்லோராலும் விரும்பி ஏற்றுக்கொள்ள முடியாது. பாசிட்டிவாக யார் எதை பேசினாலும் அகம் மகிழும். அதையே நெகட்டிவாக பேசும்பொழுது குமுறல் வெடிக்கும். நிறைய நியாயங்களைப் பேசத் தோன்றும். அவர்கள் கூறும் விமர்சனத்தை மறைப்பதற்காக நிறைய எடுத்துக்காட்டுகளை, நம் பக்க நியாயத்தை அடுக்கடுக்காக அடுக்கிக்கொண்டே போவோம். அவை எல்லாம் தேவையற்றது. அதற்குப் பதிலாக அந்த விமர்சனத்தை வெற்றியின் தொடராக எடுத்துக்கொண்டு முன்னேறலாம்.
ஒருமுறை வீட்டில் ஏதோ ஒரு விசேஷத்திற்கு சிலரை அழைக்கிறோம். பலரை அழைக்காமல் விட்டு விடுகிறோம் என்றால் மற்றவர்கள், நீங்கள் ஏன் அவரை அழைக்கவில்லை என்று கேட்டால், அதை ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்த முறை விட்டாலும் அடுத்த முறை ஏதாவது வீட்டில் ஒரு விசேஷம் நடந்தால் முதலில் அவரை அழைத்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது. அது ஒரு குறையாக இல்லாமல் நிறையாக மாறிவிடும். அதனால் இது போன்ற விமர்சனங்களை காது கொடுத்து கேட்பது அவசியம். யார் குறை கூறினாலும் இந்த விமர்சனம் நம்மை நல்வழிக்கு இட்டுச் செல்லும்.
அடுத்தபடியாக பெண்களை மிகவும் துன்பப்படுத்துவது சமையல் சரியாக இல்லை என்றால் வீட்டினர் கோபிப்பதுதான். அடுத்த முறை அதே ரெசிபியை மாற்றி செய்தால் கட்டாயமாக நல்ல ருசிக்கு கொண்டு வந்து விடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பொறுமை காப்பதுதான் அவசியமே தவிர குற்ற உணர்வினால் பாதிக்கப்படுவது நம்மை இப்படியெல்லாம் குறை கூறுகிறார்களே என்ற வருத்தப்படுவது சூழ்நிலையை அமைதியாக ஆக்காது. ஆக மொத்தம் இது போன்ற விமர்சனங்களை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமே. திருத்திக்கொள்ள வேண்டியதும் அதைவிட அவசியம்.
இன்னும் சொல்லப்போனால் உறவினர்கள், நண்பர்கள், வீட்டினர், விருந்தாளிகள் என்று யார் விமர்சனம் செய்தாலும் அதை மிகவும் உன்னிப்பாக காது கொடுத்துக் கேட்க வேண்டியது அவசியம். கேட்டால் மனதிற்கு சங்கடமாக இருக்கும் என்று அதை தவிர்த்தால் மீண்டும் மீண்டும் அதே தவறைத்தான் செய்து கொண்டே இருப்போம். செவி மடுங்கள்; சிந்தை தளராதீர்கள்; அடுத்தமுறை அழகாக நேர்த்தியாக நிறைவாக விமர்சித்தவர்களே பாராட்டும்படி செய்து முடியுங்கள். அதன் பிறகு அவர்கள் உங்களை விமர்சிக்கவே பயப்படுவார்கள். உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவரிடம் ஏதாவது சொன்னால் அடுத்தமுறை அதை சரியாக நிவர்த்தி செய்து விட்டுதான் உட்காருவார். ஆதலால் அவரிடம் நிதானமாக பேச வேண்டும் என்று வார்த்தைகளை அளந்து பேச ஆரம்பிப்பார்கள். அதுதான் விமர்சனத்திற்கு நாம் தரும் விலை.
இப்பொழுது சொல்லுங்கள் விமர்சனமும் வாழ்க்கைக்கு அவசியம் தான் இல்லையா? நம்மை நேர்வழியில் கொண்டு செல்வது விமர்சனம்தான். அது புகழுரையாகவும் இருக்கலாம். இகழுரையாகவும் இருக்கலாம். அதை சரியான முறைப்படி கையாள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்வோம். விழிப்புணர்வு கொள்வோம்.
விமர்சனங்களைப் பற்றி யோசித்தால்
வலிகள் மட்டுமே தோன்றும்!
தீர்வுகளை ஆராய்ந்து பார்த்தால்
நிச்சயம் நல்ல வழிகள் பிறக்கும்!
மாற்றி யோசிப்போம்
நிச்சயம் மாற்றம் வரும்!