வாழ்க்கை கணக்கு வழக்கு அல்ல; கொடுக்கல் வாங்கலும் அல்ல!

Lifestyle articles
Satyajit Ray
Published on

ல்லாவற்றையும் கணக்குப் பார்த்துக்கொண்டு வாழ நேர்ந்தால் நம் வாழ்க்கை சுவையற்றுப் போய்விடும்; சப்பிப் போட்ட மாங்கொட்டையைப்போல.

இதனால் என்ன பயன்?' என்று கேட்டால் பல இனிய நிகழ்வுகள் நம்மை விட்டு விலகிப்போய்விடும்.

 இசையால் என்ன பயன்?'

 இலக்கியத்தால் என்ன பயன்?'

 தென்றலால் என்ன பயன்?'

 நடனத்தால் என்ன பயன்?'

என்றெல்லாம் நாம் கையில் உணரும்படியான பயன்களை மட்டுமே கருத்தில்கொண்டு கேள்விகள் கேட்டால் எலும்புக் கூடாகச் சதைப்பிடிப்பற்று நாம் ஜீவித்திருப்போம்.

இசையோ, இலக்கியமோ நேரடியாகப் பயன் தராவிட்டாலும், மறைமுகமாக நம்மை மென்மையாக்கி நம் வாழ்வின் ஆழத்தை அதிகரிக்கின்றன. அழகியலற்ற வாழ்வு முடிவற்ற பாதாளம்போல நாளடைவில் நம்மைப் பயமுறுத்திவிடும்.

உணவு மட்டுமே மனிதனுக்குப் போதுமானதல்ல மனிதன் ரொட்டித் துண்டுகளால் மட்டுமே ஜீவித்திருப்பதில்லை - என்று பைபிள் கூறுவது அவனுக்கு ஆத்மார்த்தமானவை அநேகம் என்பதால்தான்.

இசையிலும் விஞ்ஞானம் இருக்கிறது; விஞ்ஞானத்திலும் இசை இருக்கிறது.

கலைப்படங்களையே எடுத்த சத்யஜித்ரே 'ஷோலே' திரைப்படத்தை ஐந்து முறை பார்த்து ரசித்தாராம். எப்போதும் கலைப்படங்களையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நம்மைத் தளர்த்திக்கொள்ள, சில நேரங்களில் பொழுதுபோக்குகளும் அவசியம் ஆனால் அவை மனத்தை நஞ்சாக்காத வகையிலும், நம் நேரத்தின் மீது எச்சில் துப்பாமலும் இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவதே சரி!
Lifestyle articles

24 மணி நேரமும் புகைவண்டி ஓடிக்கொண்டிருக்கும் தண்டவாளத்தில் பூத்திருந்த செடியைப் பற்றி, அல்லும் பகலும் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஓசையையும், புகையையும் மீறி வெளிச்சத்திற்காகத் தலை நீட்டி, எப்படியோ தண்ணீரைத் தன் இலைக்கைகளால் ஏந்தி, பூமிக்குத் தாரைவார்த்து வேர்களைக் குளிப்பாட்டி, பூக்கிற செடியைக் காட்டிலுமா மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டுகிற செயல் வேறொன்று இருக்க முடியும் என புகைவண்டி ஓட்டுநர் கூறியிருக்கிறார்.

நமக்கு ஏற்பட்டிருக்கும் நெரிசல்களுக்கு நடுவே நாம்தான் அப்படி அபூர்வமாகப் பூக்கிற பூவையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நாம் யாருக்காவது எப்போதாவது ஒரு தேநீர் வாங்கிக்கொடுத்தால் அவரிடம் எப்போதாவது தேநீர் வாங்கிக் குடித்து, சரி செய்துதான் தீர வேண்டுமென்பதல்ல.

வாழ்க்கை, கணக்கு வழக்கு அல்ல; கொடுக்கல் வாங்கலும் அல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com