

முன்னொரு காலத்தில் மடம் ஒன்றிலிருந்த சீடர்கள் ஒரு யாத்திரைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சீடர்களின் குரு, "சில பாகற்காய்களை கொடுத்து நீங்கள் யாத்திரை செல்லும் வழியில் உள்ள புண்ணிய தலங்களிலும், ஓடுகின்ற புண்ணிய நதி நீரிலும் இந்த பாகற்காய்களை மூழ்கச் செய்து மடத்திற்கு எடுத்து வர வேண்டும்" எனக் கூறினார்.
சீடர்களும் சிறிது காலம் கழித்து யாத்திரை முடிந்து ஆசிரமத்திற்கு திரும்பினார்கள். மடத்திற்கு திரும்பிய சீடர்களிடம் வந்த குரு, அவர்களிடம் கொடுத்த பாகற்காய்கள் பற்றிக் கேட்டார். அதற்கு சீடர்கள், "குருவே தாங்கள் கூறியது போல நீங்கள் கொடுத்த பாகற்காய்களை நாங்கள் சென்ற அனைத்து புண்ணிய நதி நீரிலும், புண்ணிய தலங்களில் உள்ள தெப்பக்குளங்களிலும் மறக்காமல் மூழ்கச் செய்து கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்கள்.
உடனே குருநாதர் சீடர்களிடம் பாகற்காய்களை சமைக்க சொன்னார். சமைத்த பாகற்காய்களை சீடர்களும் குருவும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.
அப்போது குரு சீடர்களிடம் பாகற்காய்கள் கசக்கிறதா? இனிக்கிறதா? என்று கேட்டார். அதற்கு சீடர்கள் குருவே! சமைத்த பாகற்காய்கள் கசக்கிறது என்று கூறினார்கள்.
குருவும் எனக்கும் பாகற்காய் கசக்கிறது தான். புண்ணிய நதி நீரில் மூழ்கியும், தெப்பக்குளங்களில் புனித நீராடியும் கூட பாகற்காய்கள் அதனுடைய தன்மையை மாற்றிக் கொள்ளாமல் கசக்கத்தான் செய்கிறது. மேலும் எந்த புண்ணிய தலமும், கோவிலும் இந்த கசப்பான பாகற்காயின் தன்மையை மாற்றவில்லை என்று கூறினார்.
இவ்வுலகில் மாற்ற இயலாத பாகற்காய் போன்ற தன்மை கொண்ட செயல்களும், பொருட்களும் இருப்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே குருநாதர் சீடர்களுக்கு கூறிய அறிவுரையாக உள்ளது. மேலும் பாகற்காய் எவ்வளவுதான் கசப்பாக இருந்தாலும், அது நம் உடலுக்கு நன்மையை கொடுக்கும் என நினைத்து 'நல்ல உணவு 'என்ற மனநிலைக்கு மாறும் போது கசப்பு பெரிதாகத் தெரியாது.
மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் மனமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த புண்ணிய நதியோ, கோவிலோ பாகற்காயில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆகவே ஒருவருடைய பழக்கமும் பயிற்சியும் மூலமும் தான் மனமாற்றம் ஏற்பட வேண்டும். உலகில் நிரந்தரமான மாற்றத்தை உலகம் தொடர்ந்து படைத்து கொண்டிருப்பதை தெளிவாக சரியாக புரிந்து கொண்டால் மனமாற்றத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும்.