

எந்த ஒரு நிறுவனமோ அல்லது அரசாங்கமோ கூட சில விதிகள் வகுத்து வைத்திருக்கின்றன. அந்த விதிகளைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆனால், வாழ்க்கையில் சில விதிகள் (Life lesson) நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் அதைக் கடைப்பிடித்தால் சமூகத்தில் நீங்கள் மதிப்பு மிக்க நபராக மாறி விடுவீர்கள். அந்த விதிகள் பற்றி சற்று அலசித்தான் பார்ப்போமே!
1. இரண்டுக்கு மேல வேணாம்!?
என்னப்பா சொல்றே! இரண்டுக்கு மேல வேணாமா? அதான் நாம் இருவர் நமக்கு இருவர் என்றாகி இப்போது நாம் இருவர் நமக்கேன் இன்னொருவர் என்றாகி விட்டதே என்கிறீர்களா? இது அதுவல்ல.
முக்கியமற்ற காரணங்களுக்காக யாருக்கும் இரண்டு முறைகளுக்கு மேல் அலைபேசி அழைப்பு அனுப்பாதீர்கள். அந்த நேரத்தில் அவர்கள் உறங்கலாம், அல்லது ஈஸீ சேரில் சாய்ந்தவாறே ஓய்வில் இருக்கலாம் அல்லது ஏதாவது முக்கிய நிகழ்வில் பங்கேற்கலாம். ஆகவே, அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.
2. கடன் பெற்றார் நெஞ்சம் போல கலங்க வேண்டாம்.
நீங்கள் உங்கள் உறவினரிடமோ (உறவினர் உதவுவது அபூர்வமானது) நண்பர்களிடமோ பணத்தைக் கடன் பெற்றிருந்தால், அவற்றை அவர் திருப்பி கேட்கும்வரைக் காத்திருக்காதீர்கள். விரைவில் கடனை திருப்பி தந்து விடுவது 'உறவுக்கு நல்லது'.
3. மெனு கார்டை ஆராயாதே!
உங்களுக்கு உங்கள் நண்பர்கள் மதிய விருந்தோ அல்லது இரவு விருந்தோ தருவதற்கு உணவகத்திற்கு அழைத்தால், அங்கு மெனு கார்டை அலசி ஆராய்ந்து அதில் அதிகபட்ச விலையுள்ள உணவு பொருட்களைத் தேர்விடாதீர்கள். அவர்கள் விருந்து வைக்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுங்கள். அதிக விலைக்குரிய உணவை நீங்கள் தேர்விட்டால், அடுத்த முறை விருந்தில் நீங்கள் விடுபட்டு இருப்பீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
4. தம்மைப் போல பிறரை நினை
உங்களுக்காக சேவை புரிபவர், சுத்தம் செய்பவர், உணவு பறிமாறுபவர் உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் அல்லது எந்த வகையிலாவது உங்களுக்கு சேவை புரிய பணியமர்த்தப்பட்டால், அவர்களிடம் அன்பாகவும், மனிதநேயமிக்கவராக பழகுங்கள். அலுவலகத்தில் உங்கள் தலைமை அலுவலர் அல்லது மேலாளருக்கு எப்படி மரியாதைத் தருகிறீர்களோ அப்படி நடந்து கொள்ளுங்கள்.
5. பாகுபாடு பார்க்காதீர்கள்.
உங்கள் வீட்டிற்கு படியேறி எவர் வந்தாலும், அவர் ஆணா? பெண்ணா? சீனியரா? ஜூனியரா என பேதம் பார்க்காதீர்கள்.
6. இன்று அவர் நாளை நீ
நீங்கள் உங்கள் நண்பருடன் வாடகை வாகனத்தில் பயணித்தால், அந்த பயணத்திற்கான கட்டணத்தை நண்பர் தந்து விட்டால், 'நன்றி' என கூறுங்கள். நன்றியோடு விட்டு விடாதீர்கள். அடுத்த முறை பயணத்திற்கு நீங்களே முந்தி கொண்டு பயணக்கட்டணத்தை தாருங்கள்.
7. மௌனமாக விலகு
ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தே முக்கியமானதாக இருக்கும். அதை நீங்கள் மறுக்காதீர்கள். உங்களுக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லைபெயன்றால், வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். மௌமான விலகுங்கள்.
8. குறுக்கு சால் ஓட்டாதே
ஒருவர் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இடைமறித்து நீங்கள் பேசாதீர்கள். அவர் என்ன சொல்ல வருகிறார் என கூர்ந்து கவனியுங்கள். அவர் பேசி முடித்த பின் தங்களுக்கு கருத்தை எடுத்து வையுங்கள்.
9. அதீத கிண்டல் நட்புக்கு இழப்பு
உங்கள் நண்பர்களை அல்லது உடன் பணிபுரிபவர்களைக் கலாய்க்கிறேன் என்ற பெயரில் அதிகமாக கிண்டல் செய்யாதீர்கள். அந்த கிண்டலை ரசித்தால் சரி, ரசிக்கவில்லை என்றால் நிறுத்தி விடுங்கள். மீண்டும் மீண்டும் அதே போல கிண்டல் கேலி செய்வதை ஒரு போதும் மேற்கொள்ளாதீர்கள்.
10. பொன்னான வார்த்தை ”நன்றி”
யாராவது உங்களுக்கு உதவி செய்தால், அவர்களுக்கு நன்றி என்று மனதார கூறுங்கள். நன்றி கூறுவது மிகச்சிறந்த பண்பாடு. மேற்கத்திய நாடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மகராஷ்டிர மாநிலத்தில் கடையில் பொருட்கள் வாங்கினால், வாடிக்கையாளர்களுக்கு கடை உரிமையாளர்கள் மறக்காமல் நன்றி சொல்கிறார்கள். அதைக் கடைப்பிடிக்கலாம்தானே!
11. ரகசியம் காத்தல்
நண்பர்கள் தங்களிடம் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்தால், அதை உங்களோடு மட்டும் வைத்து கொள்ளுங்கள். அதை வலைதளங்களிலோ, மற்றவரிடமோ பகீராதீர்கள். முக்கியமாக நண்பரின் பகைவரிடம் பகிர்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லதே!
12. தனியுரிமைக் கொள்கைக்கு தலை வணங்குங்கள்.
நண்பர் ஒருவர், அவரின் அலைபேசியில் உள்ள ஒரு புகைப்படத்தை உங்களுக்கு காண்பித்தால்.. அந்த படத்தை மட்டும் பாருங்கள். அதை விடுத்து அலைபேசியை ஸ்கிரினை வலப்புறமோ அல்லது இடப்புறமோ கைகளால் நீங்களே நகர்த்தாதீர்கள். அந்த இடங்களில் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களோ அல்லது தகவல்களோ இருக்கக்கூடும். எனவே, அவற்றினை தவிர்க்கலாம்.
13. வாக்கு சுத்தம் வாழ்க்கைக்கு நல்லது
ஒருவருக்கு நீங்கள் வாக்குறுதி அளித்தால் மறக்காமல் நிறைவேற்றுங்கள். அரசியல்வாதிகள் போல நிறைவேற்ற இயலாத பாலாறு ஓட வைப்பேன், தேனாற்றில் குளிக்க வைப்பேன் என அள்ளி விடாதீர்கள். அரசியல்வாதிகளின் வாழ்க்கையே வாக்கு சுத்தம் இல்லாதது தானே. அவர்களை பின்பற்றாதீர்கள்.
இந்த விதிகளெல்லாம் கடைப்பிடித்தால் மனிதர்களாக சமுதாயத்தில் மதிக்கப்படுவோம் என்பதை மறவாதீர்கள்.