

சிலர் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்கிறார்கள்; அதேநேரம், சிலரோ புரியாமல் ஏனோதானோ என்று அங்கலாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். சிலர் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், யாராவது ஒருவரைச் சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். "நாள் ஒன்று போனால் பொழுதொன்று போகும்" என்பதை அனைவரும் தெரிந்து வாழ வேண்டும்.
பொதுவாகக் குறையில்லாத மனிதன் இல்லை என்றாலும், தன் குறைகளைத் திருத்திக்கொள்பவனே சிறந்த மனிதனாவான். அடுத்தவர்களின் குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் வியாக்கியானம் செய்யும்போது, "நாம் சரியான பாதையில் பயணிக்கிறோமா?" என்பதைச் சிந்தித்து, பலமுறை யோசனை செய்ய வேண்டும்.
மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில்தான் உள்ளது; அந்த மகிழ்ச்சியானது நமது கையில்தான் உள்ளது. அது நாம் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனத்தின் 'ஸ்டியரிங்' (Steering) போன்றது; நாம்தான் அதைச் சரிவர இயக்க வேண்டும். நமது கவனத்தில் சிதறல் ஏற்பட்டால், விபத்து நேரிடுவது போல ஆகிவிடுமல்லவா!
நினைவில் கொள்க: நல்ல எண்ணமும், நல்ல ஒழுக்கமும் நமது இரு கண்களைப் போன்றது. அவற்றை நாம் சரிவரக் கடைப்பிடித்து வந்தாலே, நமக்கான மதிப்பும் மரியாதையும் நம்மைத் தேடி வரும்!
எப்போதுமே அனைவரையும் அன்பால் வயப்படுத்துங்கள்; மரியாதை தவறாமல், நல்ல பண்பாடுகளுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். பொதுவாக உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு காட்டாமல், கருணை மனதோடு சகோதரத்துவத்துடன் வாழ்வதே நல்லது.
இறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை. தன்னை வேண்டுகிறவன், வேண்டாதவன் என்ற பாகுபாட்டை அவன் பார்ப்பதே இல்லை; தன் கடமையைப் பாகுபாடில்லாமல் செய்து வருகிறான்.
கடமை தவறாமல் இருக்கும் இந்த விஷயத்தைக் காலைக் கதிரவனிடமும், மாலை வரும் நிலாவிடமும் கற்றுக்கொள்ளுங்கள். அந்த இரு கோள்களும் (கிரகங்களும்) தங்களின் கடமையைச் செவ்வனே செய்கின்றன. அதேபோல, மனிதனும் தன் கடமை தவறாமல் வாழ வேண்டும்.
எந்த நேரத்திலும் இயலாதவர்களுக்கு நன்கொடையோ, தர்மமோ, அன்னதானமோ செய்வதை நிறுத்தாதீர்கள்.
அதே சமயம், அது தங்கள் சக்திக்கு மிகாத வகையில் (தங்கள் சக்திக்கு உட்பட்டு) இருப்பது நல்லது.
மனிதனுடைய வலிமையை அழிக்கவல்ல விஷயங்கள் மூன்று வகைப்படும்:
அச்சம்
கவலை
நோய்
ஆகவே, எந்த விஷயத்தைக் கையில் எடுத்தாலும் அச்சம்கொள்ளாமல் வாழ வேண்டும். அதேபோல, ஒன்றுமில்லாத விஷயத்திற்காகக் கவலைப்படாமல் இருக்க வேண்டும். மேலும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதே ஆரோக்கியமான வாழ்க்கையாகும்.
எனவே, நல்ல மனதோடு 'அன்பு' என்னும் விதையை விதையுங்கள்; அது ஆலவிருட்சமாய் தழைத்து வளரட்டும்!
அடுத்தவர்களின் பலவீனத்தை நமக்குரிய பலமாக எடுத்துக்கொள்ளாமல், இயல்பான வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அனைவருக்கும் பொதுவான வகையில், மனசாட்சிக்குப் பயந்து, அடுத்தவர்களை வாழவிடாமல் தடுக்கும் நயவஞ்சகக் குணம் படைத்தவர்களாக இல்லாமல், நேர்மறைச் சிந்தனையோடு (life-lessons-and-positive-thinking) வாழ்வதே சிறப்பான ஒன்றாகும்!