

வாழ்க்கை வாழ்வதற்குத்தான்..! அதில் நல்லதும், கெட்டதும் மாறி மாறி வரும்போது அதனால் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ளும் தன்னம்பிக்கையே நமக்கு துணை நிற்கும்.
நல்ல எண்ணமும் நல்ல சிந்தனையும் நம்மை விட்டு அகலவே கூடாது. இன்று நமக்கு துணையாய் இருப்பது போன்ற மாயையில் நாம் மதிமயங்கிவிடக்கூடாது.
நம்பிக்கை துரோகம் - அதுதான் நமக்கு முதலாவது விரோதி. நயவஞ்சகமாய் பழகி அடுத்தவர் முன்னேற்றத்திற்கு தடையாய் ஒருபோதும் வாழவேண்டாம். பிறரை கெடுத்து வாழும் மனப்பான்மையால் நமக்கு என்ன லாபம்.
லாப நஷ்ட கணக்கை பாா்க்க ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணருங்கள்.
குரலை உயர்த்திப் பேசவேண்டாம்:
அடுத்தவர்கள் முன்னால் எப்போதும் நாவடக்கத்தோடு, அன்பும், அறநெறியும் கொண்டுபேசுங்கள்.
அதிகார தோரணையோடு பேசுவதை ஓரளவு குறைத்து வருவது நல்லது. வாழ்வுதனில் உயர்வு வரும் போது மமதை, அகம்பாவம் எனும் பாவ மூட்டையை தலையில் வைத்துக்கொண்டு உங்களின் வீர பராக்கிரம செயலை காட்டாதீா்கள்.
காலம் ஒரு நாள் மாறும்; விதி வந்து சதி வேலையை பாா்த்துவிடும். வாழ்க்கை எனும் வண்டியில் மமதை எனும் சுமையை எப்போதமே ஏற்றுவதை தவிா்ப்பதே நல்லது.
அதுவே வளமான வாழ்க்கைக்கு உயிா்நாடி.
மனித நேயம் கடைபிடியுங்கள்:
மகிழ்வாக வாழ மனதில் கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கட்டும். அடுத்தவருக்கு உதவி செய்தல் போன்ற நல்ல பண்பாடான விதையை விதையுங்கள். அதற்கு அன்பு எனும் நீரை தினசரி ஊற்றுங்கள். மரத்தை வைத்தவன் தண்ணீா் ஊற்றுவான் என்பது போல பண்பான பயிரை செழிக்க விடுங்கள்.
நமக்கான நால்வர் நம்மோடே துணையாய் வருவாா்கள். அப்போது ஆண்டவனும் நமக்கு துணையாய் வருவது நிச்சயம். மனித நேயம் இருக்குமிடத்தில் மங்காத புகழ் நிலைத்திருக்கும்.
அடுத்தவர் இயலாமை கண்டு இகழ வேண்டாம்:
தற்பெருமை, வீண் படாடோபம், தற்புகழ்ச்சி இவை மூன்றும் நீங்கள் அன்பாய் வளா்த்த பண்பான பயிாில் முளைக்கும் தேவையில்லாத களைச்செடிபோல, அது பயிரை வளர விடாது; மாறாக பயிாின் வளர்ச்சியைக் கெடுத்துவிடும்.
அந்த களையை முதலில் வேறோடு களைந்திடுங்கள். அதுவே நமக்கு நல்லதாகும். பயிரை விட அதுதான் அதிகமாக வளரும் அதேபோலத்தான் நம்மனதிலும் தேவையில்லாத எதிா்மறை களைகளை உரம் போட்டு வளா்க்காதீா்கள்.
அடுத்தவர் ஏழ்மை நிலை கண்டு இகழாதீா்கள். அது நோ்மறை பயிாின் விளைச்சலை பாதித்து விடும்
நல்லதையே நினையுங்கள்:
குரோதம், மனமாச்சர்யம், பெறாமை இவற்றை உலையில் போட்டு உணவாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். அது நன்கு வெந்து போவதோடு, நமது பசி எனும் வளா்ச்சியைக் கெடுக்கும் ஆலகால விஷமாக மாறிவிடும்.
நாம் வைக்கும் எலிப்பொறியில் எலி விழாது; மாறாக நமது கைகளே மாட்டிக்கொள்ளும்.
ஆக, எங்கும் எப்போதும் நிதானம் தவறாமல் அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழக் கற்றுக்கொள்வதே வளமான வாழ்க்கைக்கான பாடமாகும்.