
"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்றுணறர் பாற்று" என்று கூறினார் வள்ளுவர். அப்படி மழையை அமிழ்தத்திற்கு இணையாக கூறியதன் பொருள் சாதாரணமானது அல்ல. நாம் காலையில் எழுகிறோம். எழுந்தவுடன் தண்ணீர் அருந்துகிறோம். காலை கடன்களை முடிக்க நீர் வேண்டும்.
இப்படி எல்லாவற்றுக்கும் நீர் அவசியம். அவை எப்பொழுதும் நிரம்பி இருந்தால்தான் எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக முடிக்க முடியும். நீர் இல்லாத ஒரு நாளை நினைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும்.
எந்த வேலையும் செய்ய முடியாது. சுகாதாரமாக இருக்க முடியாது. சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது. இப்படி பூமி செழிக்க ஒவ்வொன்றிற்கு பின்னாலும் நீர்தான் அமைந்துள்ளது. ஆதலால் தான் அதை அமிழ்தம் என்று கூறினார். அந்த நீர் நிலைகள் கற்றுத் தரும் பாடம் என்ன தெரியுமா?
மனிதன் சந்தோஷமாக இருந்தாலும் சரி. சலிப்பாக இருந்தாலும் சரி, கடல் அலைகளை பார்த்தாலே அவனுக்கு ஒரு உற்சாக பிறக்கும். அப்பொழுது துன்பம், துயரம், அச்சம் அனைத்தையும் அந்த அலைகள் போக்கிவிடும். மேலும் அங்கு மணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைகளை பார்த்தாலே எதையும் விடாமுயற்சியுடன் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதனால்தான் பணக்காரர் ஏழை என்ற எந்தவித வித்தியாசமும் இல்லாமல் கடலும் அலைகளும் மனிதனை ஆகர்ஷிக்கின்றன.
மனிதன் உழைப்பதிலும் சுறுசுறுப்பாக இருப்பதிலும் காட்டாறு போல இருக்க வேண்டும். காட்டாற்று வெள்ளம் எப்படி கரைபுரண்டு ஓடுகிறதோ அதுபோல் தங்கு தடை இன்றி உழைப்பதற்கும் இணங்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையில் முன்னேறலாம்.
சிறு துளி பெருவெள்ளம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சேமிப்பிலும் சிக்கனத்திலும் மழை நீரைப்போல் இருக்க வேண்டும். ஒரு ரூபாய் செலவு செய்ய எடுக்கும் பொழுது, அதில் பத்து பைசாவை சேமிப்பாக வைக்க வேண்டும். சில நாள் கழித்து பார்த்தால் அது நல்ல சேமிப்பாக பெருந்தொகையாக மாறி இருக்கும். இதுதான் மழைநீர் கற்றுத்தரும் பாடம்.
அருவி எந்த இடத்தில் இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆர்ப்பரித்து கொட்டும் பண்புடையது. மலை, வயல், மேடு, பள்ளம், பாறை, செங்குத்தான இடம் என்று இருக்கும். ஆரோக்கியம் பேணுவதில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீர் போல் இருக்க வேண்டும். இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவதற்கு அருவி நீரை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டியது அவசியம். இன்றும் அருவியில் குளித்து ஆரோக்கியம் பேணுபவர்கள் அதிகமானோர் உண்டு. சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு அருவிகளை நாடி செல்பவர்கள் உண்டு. அதிலிருந்து கலந்து வரும் மூலிகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதால் அருவிநீரை மறக்க வேண்டாம்.
அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போல் இருப்பது நீரூற்று. தானம், தர்மம் செய்வதிலும் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பதிலும், நமக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு போதிப்பதிலும் நீரூற்றுபோல் மனிதன் இருக்கவேண்டும்.
கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது என்பர். ஆனால் எல்லாவற்றுக்கும் பயன்படுவது கிணற்று நீர்தான். அதுபோல் மற்றவர்களுக்கு உதவுவதிலும், பொறுப்பு சுமந்து வாழ்வதிலும், உறவு நட்புகளிடம் இனிமையாக பழகுவதிலும், கிணற்று நீரைப் போல் மனிதன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொள்வது அவசியம்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்ற பாடலை நினைவில் கொள்வோம்! அந்த மழையினால் கிடைக்கும் பல்வேறு வகையான நீர் நிலைகள் கற்றுத்தரும் படத்தை நிகழ்வில் ஏற்போம்!