
முடியாட்சிக் காலத்தில் ஆட்சியின் குறிக்கோள் செங்கோலில் பொறிக்கப்பட்டது. வாழ்க்கையில் வெற்றி தோல்வி எல்லாம் அவரவர் குறிக்கோளைப் பொறுத்தே அமைகிறது.
முகவரி இல்லாத கடிதம் குறிப்பிட்ட இடம் போய்ச்சேராது. அது போன்றே குறிக்கோள் இல்லாதவனது வாழ்வில் வெற்றி போய் சேர்வதில்லை.
குறிக்கோள் இல்லாத மனிதன் முகவரி இல்லாத கடிதம் போன்றவன். அவனால் வாழ்க்கையில் வெற்றியோ, முன்னேற்றவோ காணமுடியாது.
மனிதன் பட்டங்கள் பற்றியும், சிறப்புக்கள் பற்றியும், புதுமைகள் பற்றியும், புரட்சிகள் பற்றியும் கனவு காண்கின்றான்.
மனிதன் காணுகின்ற கனவுகளெல்லாம் நனவாவதில்லை. சிலரது கனவுகள் காலவெள்ளத்திலே கரைந்து மறைந்து விடுகின்றன. இளமைக்காலக் கனவுகள் நனவாக வேண்டுமானால், இளமையிலேயே குறிக்கோள் ஒன்றைத் தெரிந்துகொண்டு, அதை அடைவதற்கு அன்றாடம் முயற்சி எடுக்கவேண்டும்.
ஒருவன் வகுத்துக்கொள்ளும் குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
சிறுவன் விடும் பட்டம் எவ்வளவு சிறியது. ஆனாலும் அது பறக்கத் தெரிந்து கொள்ளும் இடம் எவ்வளவு பெரியது. அது போலவே, மனிதனுடைய இதயம் சிறியதானாலும், இதய வேட்கை எல்லையற்று விரிந்திருக்க வேண்டும்.
உயர்ந்த குறிக்கோள் ஒருவனை உயர உயரப் பறக்கவைக்கும். காலத்தின் சவாலை ஏற்க அழைக்கும். கதியைக் காட்டி விதியோடு போராடத் தூண்டும். அதனுடைய அழைப்பை ஏற்பவனுக்குக் காலம் கைகொடுக்கும்.
ஒருவனுக்கு உயர்ந்த குறிக்கோள் ஒன்றில் பிடிப்பு இருந்தால். அவனது சக்திகள் அனைத்தும் சிதறாமல் ஒன்றாகச் செயல்பட்டு, அவனது வளர்ச்சியில் முன்னேற்றத்தில் ஒருமுகப் போக்கு இருக்கும். அதுவே அவனுக்கு நிறைவான மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
உலகத்தின் கோடீஸ்வரான ராக்பெல்லர் என்பவர், இளம் வயதில் மிகவும் வறுமையில் வாழ்ந்தார். முதலில் குறைந்த கூலி தரும் ஒரு பண்ணையில் தினக்கூலி வேலைக்குச் சேர்ந்தார். தமது உணவுக்கே பற்றாத நிலையில், பிறகு வாரம் மூன்று டாலர் கூலி தரும் ஒரு ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அப்போது ராக்பெல்லர் தம்முன் ஒரு குறிக்கோளை உருவாக்கினார். நானும் உலகப் பெருஞ்செல்வந்தராக வேண்டும் என்று தம் உள்ளத்தில் தீர்மானித்தார். அடுத்த சில மாதங்களில் மாதம் இருபத்தைந்து டாலர் தரும் ஓர் ஆலைக்கு மாறினார்.
அவ்வாறு மாறிய ராக்பெல்லர், தமது குறிக்கோளை நிலைநிறுத்த அல்லும் பகலும் உழைத்தார். பின்னர் ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் டாலர் தரும் ஒரு கம்பெனிக்கு மாறினார். அப்போது அமெரிக்காவில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் தமது குறிக்கோள் நிறைவேறப் போவதாக எண்ணினார். தாம் பணிபுரிந்து கொண்டிருந்த கம்பெனி உரிமையாளரோடு கூட்டாளியாகச் சேர்ந்து, எண்ணெய் வாணிபம் புரிந்தார்.
கூட்டாளி விரைவில் விலகிக் கொண்டதால் ராக்பெல்லர் தனித்தே தொழில் நடத்தினார். கோடி கோடியாகப் பணம் சேரவே உலகத்தின் பெருஞ்செல்வரானார்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, துடுப்பில்லாத படகைப் போன்றது.
ஒரு இடத்திலும் நில்லாமல் உருண்டு கொண்டே இருக்கும் கல்லில் ஒரு விதமான மாசும் படியாது' என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி.
எனது குறிக்கோளில் வெற்றியடைய உண்மையாக உதவக்கூடிய முக்கியமான நண்பன் என் உழைப்புத்தான் என 'லிங்கன்' கூறுகிறார்.
வெற்றி பெற்று வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது வாழ்க்கையிலே ஒரு நிலையான குறிக்கோள் இருப்பதைக் காணமுடியும்.