

உங்களை அவமானப்படுத்தும் எவருக்கும் கட்டாயம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில நேரங்களில், உங்களுடைய ஒரு சிறு புன்னகையை மட்டுமே நீங்கள் பதிலாகத் தரலாம். இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள ஒரு குட்டி கதையைப் பார்க்கலாம்.
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தார். அவர் அந்த நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். ஆனால், அதே நாட்டில் வாழும் ஒரு நபருக்கு அந்த அரசனைப் பிடிக்காது. அரசர் என்ன செய்தாலும் அவர் அதைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பார். அந்த ஊர் வீதிகளில் நின்று அரசரைப் பற்றி அவதூறு பேசுவதையே ஒரு வேலையாக வைத்திருந்தார்.
இப்படியிருக்கையில், ஒருநாள் இரவு அந்த நபருடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், அங்கே ஒரு காவலாளி நின்று கொண்டிருந்தான். இந்த நபருக்கோ மிகவும் பயம் ஏற்பட்டுவிட்டது. 'அரசரைப் பற்றி அவதூறாகப் பேசுவதால் நம்மை அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறானோ?' என்று நினைத்துக் கொண்டு போய் விசாரிக்க, அவனோ இவரிடம் ஒரு கூடையைக் கொடுத்துவிட்டுச் சென்றான்
இந்த நபருக்கோ ஒரே ஆர்வம்! அவசரமாக அந்தக் கூடையைத் திறந்து பார்த்தார். அதில் மூன்று பொட்டலங்கள் இருந்தன. ஒரு பொட்டலத்தில் மாவு, இன்னொரு பொட்டலத்தில் சோப்புக் கட்டிகள், கடைசிப் பொட்டலத்தில் சர்க்கரை இருந்தது. இதைப் பார்த்ததும் அந்த நபருக்கு ஒரே சந்தோஷம். அவருடைய அம்மாவிடம் அந்தப் பரிசைக் காட்டிப் பெருமிதப்பட்டார்.
அந்தப் பரிசைக் பார்த்த அம்மா விழுந்து விழுந்து சிரித்தார். "நீ அரசரை எந்நேரமும் அவதூறாகப் பேசிக்கொண்டிருக்கிறாய். அவரோ ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உன்னை அவமானப்படுத்திவிட்டார், பார்த்தாயா?" என்று கூறினார்.
அந்த நபருக்கோ அதைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது. எனவே, அவரே தன் அம்மாவிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்.
அதற்கு அம்மா கூறினார்:
"இந்த மாவு எதைக் குறிக்கிறது தெரியுமா? 'என்னைப் பற்றிக் குறை பேசுகிறாயே... நீ உன் குடும்பத்திற்கு ஒருநாளாவது உழைத்து உணவுக்கான சம்பாத்தியத்தைக் கொடுத்திருக்கிறாயா?' என்று கேட்டுத்தான்!
அடுத்து சோப்புக் கட்டி கொடுத்ததற்கான காரணம், 'என்னைப் பற்றி இவ்வளவு பேசுகிறாயே, நீ முதலில் சுத்தமாக (பண்பாக) இருக்கிறாயா?' என்பதை உணர்த்தத்தான்.
கடைசியாகச் சர்க்கரை கொடுத்ததற்கான காரணம், 'அடுத்தவர்களைப் பற்றி அவதூறாகப் பேசிப் பேசி உன் வாயில் கசப்புத்தன்மை அதிகரித்துவிட்டது. இந்தச் சர்க்கரையைச் சாப்பிட்டு விட்டாவது இனிமேல் இனிமையான வார்த்தைகளைப் பேசு' என்று கூறத்தான் அரசர் இதை அனுப்பியிருக்கிறார்."
அம்மா விளக்கியதைக் கேட்டதும், அந்த நபருக்குத் தான் செய்த தவறு புரிந்தது.
உண்மையிலேயே புத்திசாலிகள், தன்னை அவதூறாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுத்துக் கொண்டு தங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். ஒரு சிறு புன்னகையோடு அவர்களைக் கடந்து சென்று, தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதே அவர்கள் தரும் சிறந்த பதிலடியாகும்.