
எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதைப்பற்றி உடனே எந்த முடிவும் எடுக்கக்கூடாது. காரணம் அப்போது நாம் சம்பவம் நடந்த அந்த நிமிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்போம். அப்போது நம்மால் எந்த விஷயத்தைப் பற்றியும் பாரபட்சமில்லாமல் நிதானமாக மூன்றாவது மனிதரின் கண்ணோட்டதில் யோசிக்க முடியாது.
அந்த வினாடி நம் மீது எந்த ஒரு சின்னத் தவறு கூட இல்லை என்பது போலவும் எல்லா தவறுகளும் அடுத்தவர் மீதுதான் என்பது போலவும் சிந்திக்கத் தூண்டும். அதோடு நிர்வாகத்திலிருந்து உங்களுடைய வேலையைப் பற்றி மோசமான கணிப்பு வந்தால் அடுத்த வினாடியே உங்களுக்கும் உங்கள் மேலதிகாரிக்கும் என்றோ நிகழ்ந்த ஒரு சின்னக் கருத்து வேறுபாடுதான் நினைவுக்கு வரும்.
அதை மனத்தில் வைத்துக் உங்களை பழி வாங்கிவிட்டார் என்று நினைக்கத் தோன்றும் அதேபோல் உங்களுடன் பணியாற்றும் சக நண்பர் ஒருத்தருக்கும் உங்களுக்கும் என்றோ ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் உங்கள் நினைவிற்கு வந்து அவர்தான் உங்களைப் பற்றிதாறுமாறாகச் சொல்லி உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல முன்னேற்றத்தைத் தடுத்துவிட்டார் என்று நினைக்கத்தோன்றும்.
அலுவலகத்தில் இந்த மாதிரி அனைவரையும் எதிரிகளாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டால் உங்களால் அமைதியாக பணியாற்றவே முடியாது நீங்கள் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களின் பெரும்பகுதியை உங்கள் அலுவலகத்தில்தான் செலவிடுகிறீர்கள் . அங்கு உங்களுக்கு நண்பர்கள் இருந்தால்தான் உங்களால் அமைதியாக பணியாற்ற முடியும்.
நீங்கள் அனாவசியமாக மற்றவர்கள் மீது உங்கள் தற்காலிகப் பின்னடைவுக்குக் கோபித்துக் கொண்டால் நஷ்டம் அவர்களுக்கு அல்ல உங்களுக்குத்தான். எனவே அந்தத் தவறைச் செய்யாதீர்கள்.
மோசமான கணிப்பு உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி உங்கள் காதுகளுக்கு எட்டிய முதல் இரண்டு மணி நேரம் மிக மிக முக்கியமானது. ஒன்று அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள். அடுத்தது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைப் பார்க்க ஒரு கும்பலே தயாராக இருக்கிறது.
இங்குதான் நீங்கள் புத்திசாலித்தனம் முழுவதையும் காட்ட வேண்டும். வேலையில் மட்டும் புத்திசாலியாக இருந்தால் போதாது. சில நேரங்களில் ஏன் பல நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் சின்னச் சின்னச் சிக்கல்களின் போதும் அவற்றைப் புத்திசாலித்தனமாக சமாளிக்க வேண்டும். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் ஒரு நீண்ட பெருமுச்சு விடுங்கள். நிதானமாக சுவாசியுங்கள்.
ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுங்கள். இந்த இரண்டு செய்கைகளும் உங்களின் ஆத்திரத்தையும் படபடப்பையும் கண்டிப்பாகக் குறைக்கும். ஏதாவது உபயோகமற்ற வேலையைச் செய்வதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலிருந்து நீங்கள் நகர்ந்து நின்று யோசியுங்கள் கோபப்படாதீர்கள்.
உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று தற்காப்பிலும் இறங்காதீர்கள். இந்தக் கணிப்பிற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் நடந்து கொள்ளுங்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இப்படி விட்டேற்றியாக நடந்து கொள்வதுதான் நல்ல நபருக்கு அழகு. உங்கள் எண்ண ஓட்டங்களை நினைத்து அவர்கள் குழம்ப வேண்டும்.
அப்படியும் வேண்டுமென்றே யாராவது வந்து உங்களிடம் இதைப்பற்றி பச்சாதாபப்படுவதுபோல் கேட்டால் அதற்கு பலியாகி ஏதாவது சொல்லக்கூடாத விஷயத்தை ஆத்திரத்தில் சொல்லிவிடாதீர்கள். அவர் பேசப் பேசப் புன்னகையோடு கேட்டுக் கொள்ளுங்கள். அப்படியிருப்பது உங்களுக்கு சாத்தியமில்லை என்றால் அவரிடம் நாசுக்காக 'நாம் இதைப்பற்றி எதுவும் பேசமாலிருப்பது நல்லது என்று நினைக்கிறேன்" என்று சொல்லுங்கள். இதுவே பிரச்னையின் போதும் வெற்றிபெற சிறந்த வழியாகும்.