யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும்... இதோ சில உண்மைகள்...

life truth tamil motivation
life truthcredit AI Image
Updated on

வாழ்க்கை ஒரு சிலருக்குச் சில பாடங்களைக் கற்றுத்தருகிறது. சிலர் அதைப் புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தாற்போல நெளிவு சுளிவு அறிந்து பயணிக்கிறார்கள். சில சமயங்களில் நமது செயல்பாடுகளால் வாழ்க்கை (life truth) நம்மைப் புரட்டிப்போட்டு விடுவதும் உண்டு. "இதுதான் விதி" என்று சொன்னாலும், அதையும் மதியால் வெல்லலாம். அதற்கு நமக்குத் தேவையான துருப்புச்சீட்டு: நல்ல எண்ணமும், நல்லொழுக்கமும்தான். அதோடு இறைவனின் கருணையும் அவசியமானது!

வாழ்க்கையில் பிரச்னைகள் வரலாம்; ஆனால், அந்தப் பிரச்னைகளே வாழ்க்கையாகி விடக்கூடாது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் நமக்கான இரண்டு கண்கள். குடும்பத்தில் பலவிதமான பிரச்னைகள் வந்து போகும்; அவற்றை நமக்குள்ளாகவே பேசித் தீர்வு காண வேண்டும்.

நான்கு சுவர்களுக்குள் பாதுகாக்க வேண்டிய விஷயங்கள் நாலு வீதிக்கு வருவது தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால், இரு தரப்பிலும் கௌரவம் குறையவே வாய்ப்புகள் அதிகம் என்பதே நடைமுறை உண்மை.

நமது உடலில் தெம்பு, மனதில் வலிமை, கையில் நிறைய பணம் இருக்கும்போது, சொந்த-பந்தம் மற்றும் நட்பு வட்டங்களுக்கு நீங்களாகவே வலியச் சென்று பெருந்தன்மை அல்லது பகட்டு காட்டி உதவி செய்வதை 'வடிகட்டுங்கள்'; அதுதான் உங்களுக்கு நல்லது. அதேநேரம், நாம் சோர்ந்துபோன நிலையில் நமக்கு உதவி செய்ய யாரும் வரமாட்டார்கள்; அப்படியே வந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து விலகிவிடுவார்கள். அதுதான் உலகம்!

"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" எனப் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? அதேபோல, கூடுமான வரையில் அடுத்தவர்கள் விஷயத்தில் வலுவில் போய் மூக்கை நுழைக்காதீர்கள். எல்லோரும் ஒரே மாதிரியான மனோநிலை கொண்டவர்கள் கிடையாது. "எங்களுக்குத் தெரியும், உங்கள் வேலையைப் பாருங்கள்" என யாராவது சொல்லிவிட்டால், அதைவிடக் கேவலம் வேறு எதுவும் கிடையாது.

யாரிடம் பேசினாலும் உங்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியோ, நீங்கள் சாதித்தது பற்றியோ தற்பெருமையாகப் பேசாதீர்கள். அடுத்தவர்களின் அன்பைச் சம்பாதிக்க வேண்டுமே தவிர, அவர்களின் வெறுப்புக்கு ஆளாகக் கூடாது. பொதுவாக, "கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும்" சில நேரங்களில் நமக்கே கெடுதலாக அமைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
கவலைகள் பலவிதம்... ஆனால், தீர்வு மட்டும் ஒரே விதம்...
life truth tamil motivation

ஆக, நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது. எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளைச் சேர்த்து அமைதியாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அதுவே சிறப்பானது!

logo
Kalki Online
kalkionline.com