
நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் செய்ய நினைத்ததை செய்ய வேண்டிய சரியான நேரத்தில் செய்யாமல் தவறிவிடும் போது அதை நினைத்து அதிகமாக வருத்தப்படுவதுண்டு. இதை அப்போதே செய்திருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன் அதிகமல்லவா? என்று தோன்றும். முடிந்துப்போன நம்முடைய கடந்த காலத்தை நினைத்து இப்போது வருத்தப்படுவது சரியா?
இதற்கு சீனர்கள் ஒரு அழகான பழமொழியை சொல்கிறார்கள். 'The best time to plant a tree was 20 years ago.The second best time is now' என்று சொல்வார்கள். நீங்கள் ஒரு 20 வருடத்திற்கு முன் மரத்தை வைத்து வளர்த்திருந்தால், இந்நேரம் காய், கனி என்று அந்த மரத்தால் கிடைத்திருக்கும் நன்மைகள் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், நீங்கள் அப்போது மரத்தை வைக்கவில்லை. உங்களால் கடந்த காலத்தை மாற்ற முடியாது.
உங்களால் செய்ய முடிந்த இரண்டாவது சிறந்த விஷயம் என்னவென்றால், இப்போது அந்த மரத்தை வையுங்கள்.
நமக்கு அவ்வபோது இதுப்போன்ற யோசனைகள் தோன்றும். நாம் அதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதை செய்திருந்தால் நம் வாழ்க்கை இன்னும் சிறப்பாக மாறியிருக்கும் என்று கடந்த காலத்தில் செய்ய தவறிய விஷயங்களை நினைத்து வருத்தப்படுவதுண்டு. அதையே நினைத்து கவலைப்படுவதால் எதுவுமே மாறப்போவதில்லை.
அந்த நேரத்தில் நீங்கள் அந்த விஷயத்தை செய்ய பயந்திருக்கலாம், சோம்பேறித்தனமாக இருந்திருக்கலாம் இல்லை சரியான நேரத்திற்காக காத்திருந்திருக்கலாம் இப்படி பல காரணங்களை சொல்லலாம்.
அப்போது அதை செய்யாமல் போனது தவறு என்பதை இப்போது உணர்ந்துவிட்டீர்கள். ஆகவே, இப்போது அதை செய்யுங்கள். நாம் செய்ய தவறிய ஒன்றை நினைத்து வாழ்க்கை முழுவதும் கவலைப்படுவதை விட்டுவிட்டு இப்போது அதை செய்யுங்கள். உங்களால் நீங்கள் செய்ய முடியவில்லையே என்று கவலைப்படக்கூடிய விஷயத்தை இப்போது செய்ய முடியும், மாற்றத்தை உருவாக்க முடியும் என்றால், அதை இப்போதே செய்யத் தொடங்குங்கள்.
ஏனென்றால், இது தான் உங்களிடம் இருக்கும் இரண்டாவது சிறந்த தருணமாகும். கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாமல் இப்போது என்ன செய்வது என்பதை சிந்திப்பதே சிறந்ததாகும். ஏனெனில், தாமதம் என்பது நமக்கு கிடையாது.