
பொதுவாக நமது உணர்வுகளை மதிக்காத அல்லது கருத்தில் கொள்ளாத நபர்களைக் கையாள்வது சவாலான விஷயம். ஆனால் இந்த மனிதர்களை திறம்பட வழிநடத்த சில வழிகள் உள்ளன. அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. தெளிவான எல்லைகளை அமைத்தல்;
எப்போதுமே யாருடன் பழகினாலும் குறிப்பிட்ட எல்லைகளை நிர்ணயிப்பது மிகவும் அவசியமாகும். ஒரு மனிதன் எதற்காகவும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுத் தரக்கூடாது. அதுபோல தன்னுடைய உணர்வுகளை பிறர் காயப்படுத்தும்போது அதை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்பதை அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.
"நீங்கள் இப்படி பேசும்போது சங்கடமாக உணர்கிறேன். இனி இதுபோல் பேசவேண்டாம்" என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இது ஒருவரது உணர்ச்சி நல்வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
2. அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுதல்;
ஒரு எதிர்மறையான சூழலை எதிர்கொள்ளும்போது அங்கேயே நீடித்திருக்க வேண்டியது அவசியமில்லை. அது மனதிற்கு மிகவும் பாதிப்பை உண்டாக்கும். எனவே அவமரியாதைப்படுத்துவதுபோல அல்லது உணர்வுகளை மதிக்காமல் பிறர் நடந்து கொள்ளும்போது அந்த சூழ்நிலையில் இருந்து விலகி நகர்ந்து விடுதல் நல்லது. இதனால் காயப்படுத்தும் நபர்களுக்கு அவர்களின் செயல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தும்.
அந்த இடத்திலேயே தொடர்ந்து நீடித்திருக்கும்போது தேவையில்லாத மனக்கசப்புகள் ஏற்படலாம். அவரிடம் ஏதாவது வார்த்தைகளை கொட்டி கோபத்தை வெளிப்படுத்துவதை விட இப்படி நகர்ந்து விடுவது நல்லது.
3. நேர்மறையான தகவல் தொடர்பு;
அவமரியாதையாக உணரும்போது உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிரலாம். உங்களது பேச்சு என்னைக் காயப்படுத்துகிறது என்பதை எடுத்துச் சொல்லலாம். ஆனால் இதை உணர்ச்சிவசப்படாமல், ஆத்திரமோ கோபமோ படாமல் மிகவும் அமைதியாக சொல்லவேண்டும். அப்போதுதான் கேட்பவரின் மனதில் அது ஆழமாகப் பதியும். இது ஆக்கப்பூர்வமான உரையாடலை ஊக்குவிக்கும். மேலும் பிறர் வார்த்தைகள் உங்களைக் காயப்படுத்தினாலும் நீங்கள் அதனால் பாதிக்கப்படவில்லை என்பதையும் அவர்களுக்கு அது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதனால் அவர்கள் நிதானித்து வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.
4. சூழலைக் கவனித்தல்;
உங்களைக் காயப்படுத்தும் அல்லது உணர்வுகளை மதிக்காத அந்த நபரின் நடத்தை, தனிப்பட்ட பிரச்னை மற்றும் அவர்களது உணர்ச்சி நிலைகளை சற்று கவனிக்க வேண்டும். அந்த நபரை அனுதாபத்துடன் நோக்கலாம். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் மோதல் போக்கு தேவையில்லை.
அந்த நபர் போலவே சிந்திக்காமல் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே பொறுமையாக ஏன் அவர் தேவையில்லாமல் உங்கள் உணர்வுகளை மதிக்காமலோ அல்லது காயப்படுத்தும் விதத்திலோ நடந்து கொள்கிறார் என்று அந்த சூழலையும் நபரையும் உற்றுக் கவனிக்கலாம். அதற்கு விடை தெரிய வரும்போது அவரின் மேல் கோபமம் வராமல் பரிதாபமே ஏற்படலாம்.
5. உறுதியுடன் நடந்து கொள்ளுதல்;
சில நபர்கள் தேவையே இல்லாமல் பிறரைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவார்கள். எனவே அப்படிப்பட்ட நபர்களை லட்சியம் செய்ய வேண்டியதில்லை. அவர்களின் குணமும் போக்கும் இதுதான் என்பதைக் கண்டு கொண்ட பிறகு நீங்கள் உங்களது நல்வாழ்வைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
மனம் மற்றும் உணர்ச்சிகளை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது அல்லது பிடித்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மனமாற்றத்திற்கு உதவும்.
6. புரிந்து கொள்ளுதல்;
எல்லாரும் எல்லா நேரத்திலும் நமக்குப் பிடித்த மாதிரி பேசமாட்டார்கள், செயல்பட மாட்டார்கள் என்கிற உண்மையை முதலில் ஒருவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். பிறர் பேசும் அத்தனை வார்த்தைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.