
மருந்துகள் இல்லாமல், அறுவைச் சிகிச்சை இல்லாமல் அவ்வப்போது கூட்டம் கூட்டி நம்பிக்கை சிகிச்சைகள் சிலர் அளிக்கிறார்களே. அவர்களால் குணப்படுத்த முடியுமா?. நோய்களைக் குணப்படுத்துவது உண்மையான நோக்கமாக இருந்தால் அவர்கள் எங்கே போக வேண்டும்? ஆரோக்கியமானவர்கள் நடைபயிலும் கடற்கரையில் கூட்டம் போட்டு விளம்பரங்கள் செய்வதை விட்டு விட்டு நோயாளிகள் நிறைந்திருக்கும் மருத்துவமனைகளில் அல்லவா அவர்கள் கூடாரம் அடிக்க வேண்டும்.
அங்கிருந்தவர்களை குணப்படுத்திவிட்டு அப்புறம் வீடு வீடாக வலம் வந்து மற்றவர்களின் நோயைத் தீர்க்கலாம். ஏன் செய்வதில்லை?. அவர்கள் அடிப்படை நோக்கம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பலத்த போட்டிக்குப் பிறகு ஒருவருக்கு திரைப்பட இயக்குனரிடம் உதவியாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. சில வாரங்கள் கழித்து அந்த இயக்குனர் அவரிடம் "நீ பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் கூறி அவர்களிடம் பணியாற்றியதாகச் சொன்னது பொய். ஏன் அப்படிச் சொன்னாய்" என்று கேட்டார்.
"சார். பொய் என்பது தப்பான வார்த்தை. விளம்பரத்தில் கற்பனை ஆற்றல் மிக்கவர்கள் தேவை என்று நீங்கள்தானே கேட்டிருந்தீர்கள்" என்றார் உதவியாளர். இதுபோல் நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக சொல்வது கற்பனையாக இருக்கலாம். ஒருவருடைய சக்தி நிலைகளை சற்றே மாற்றியமைத்து உடல் வேதனையிலிருந்து விடுதலை பெற முடியும் என்பது உண்மைதான். ஆனால் அப்படிச் செய்வது ஆரோக்கியமானதல்ல.
இயற்கை சில நியதிகளை வகுத்திருக்கிறது. எந்தச் செயலுக்கும் விளைவு உண்டு. விளக்கமில்லாத ஒரு விளைவை நீங்கள் கண்டால் அதற்கான காரணத்தைத் தேடுவது தான் புத்திசாலித்தனம். திடீரென்று வீடுநிறையப் புகை சூழ்ந்ததால் எங்காவது நெருப்பு பிடித்திருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர புகையைத் தவிர்க்க முகமூடி அணிவது அறிவாற்றல் செயல் அல்லவா?.
முந்தின சில வினைப் பயன்களை நினைவூட்டும் எச்சரிக்கைகள் ஆகத்தான் நோய்கள் உடலைத் தாக்குகின்றன. ஒவ்வொருவரும் அவரவர் சக்தி நிலைகளைப் புரிந்துகொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, வெளியே இருந்து கொண்டு மற்றவர்கள் நிலையை கொஞ்சம் திரித்து மாற்றி அமைப்பது புகையைப் சமாளிக்க முகமூடி அணியும் நிலையைப் போலத்தான்.
முந்தின வினைப்பயன்கள் எல்லாம் இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி. ஒருவர் நல்லவராக இருப்பார். பெரிய வீடு நல்ல மனைவி, புத்திசாலி குழந்தைகள் என்று எல்லா வசதிகள் இருந்தும் ஏதோ ஒரு புயல் வீசி அவரைச் சாய்த்திருக்கும். இதுதான் முன்வினைப் பயன். இதை நீங்கள் புத்திசாலித்தனத்துடன் பார்த்தீர்களானால் எந்த விளைவுக்கும் ஒரு அடிப்படை காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
எல்லாம் நீங்கள் எதிர்பார்த்தபடியே நடந்துவிட்டால் உங்களிடம் ஒரு அலட்சியம் வந்து விடும். வாழ்க்கையை கவனிக்காமல் விட்டு விடுவீர்கள். உங்களையே கடவுள் என்று நினைத்து விடுவீர்கள். அதற்காகத்தான் இயற்கை உங்கள் தலையை அவ்வப்போது தட்டிக்கொண்டே இருக்கிறது.
ஒரு கட்டத்தில் சுவரில் விரிசல் வந்துவிட்டால் அடிப்படையில் தவறு எங்கே இருக்கிறது என்று கவனிக்க வேண்டுமே தவிர அவ்வப்போது சிமெண்ட் பூசுவது போலத்தான் இந்த நம்பிக்கை சிகிச்சைகளும். கர்ம நலன்களைக் கலைப்பதற்கு யோகா ஆழ்நிலைத் தியானம் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தினால் அவரவர் சக்திக்கேற்ப தாங்களே தங்களைக் கையாளும் திறமை பெறமுடியும். அதற்கு வழி செய்வதே உன்னதமானது. மற்றதெல்லாம் வீண் வியாபார விளம்பரம்.