
உதாசீனப்படுத்தும் பொழுது ஒருபோதும் கவலைப் படாதீர்கள். ஏனெனில் அடிவாங்கும் கற்கள்தான் அழகான சிற்பங்கள் ஆகின்றன. நாம் அன்பு வைக்கும் நபரெல்லாம் நம்மை உதாசீனப்படுத்தும்போது வேதனைதான் மிஞ்சும். எனவே உதாசீனப்படுத்துபவர்களை விட்டு விலகி விடுவதுதான் நல்லது. இல்லையெனில் அவர்களைப் பற்றிய சிந்தனையே நம்மை கரையான் புற்றுபோல் அரித்துவிடும்.
உதாசீனப்படுத்துவது என்பது ஒரு விஷயத்தை அலட்சியப்படுத்துவது அல்லது கண்டு கொள்ளாமல் இருப்பதாகும்.ஒருவரை புறக்கணிப்பதும், அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொள்வதும் தவறான செயல். ஒருவரை உதாசீனப்படுத்துவது அவர்களின் சுயமரியாதைக்கு கேட்டை விளைவிக்கும். ஒருவரின் மனம் புண்படும் வகையில் உதாசீனப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
அலட்சியப் போக்கு, ஒரு விஷயத்தைப் பற்றிய ஆர்வம் இல்லாமல் பாராமுகமாக இருப்பது போன்றவை ஒருவரை மிகவும் காயப்படுத்தும் விதமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதுதான் நமக்கு நல்லது.
இல்லையெனில் நம்முடைய வேலைத்திறன் குறைந்து விடுவதுடன் மனமும் வருத்தத்தில் தோய்ந்துவிடும். செயலால், சொல்லால் உதாசீனப்படுத்துபவர்களை தாங்கிக்கொள்ள முடியாமல் அலைக்கழிக்கப் படுவதைவிட நேரிடையாகவே அவர்களிடம் கோரிக்கை வைக்கலாம்.
அவர்கள் இப்படி நடந்து கொள்வது நம் மனதை மிகவும் புண்படுத்துகிறது என்று விளக்கிக் கூறலாம். அப்படியும் அவர்கள் கேட்கவில்லை என்றால் நமக்கு இவர்களுடன் ஒத்து வரவில்லை, ஈகோ ரொம்ப ஹர்ட் ஆகிறது என்று நொந்து மனதுக்குள் புழுங்கிப் போகாமல் நிதானமாக யோசித்து அவர்களை விட்டு தள்ளி வந்து விட வேண்டியது தான்.
இந்த மனப்பக்குவம் மிகவும் அவசியம். வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சமயத்தில், ஒரு விதத்தில் நம்மை உதாசீனப்படுத்துவது நடந்து கொண்டுதான் இருக்கும். இதற்கெல்லாம் கவலைப்பட்டு நம் மனநிம்மதியை இழக்கக்கூடாது.
பொறுமைக்கும் எல்லை உண்டு. எந்த நெருங்கிய உறவாக இருந்தாலும் நம்மை உதாசீனப்படுத்தும்போது நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்யலாம். பிறருக்கு முன்பாக நம்மை அவமதித்தால் அதை அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய தனிப்பட்ட உரிமையில் தலையீடு செய்வதோ, அவர்களின் எல்லைகளை மீறுவதையோ சிறிதும் அனுமதிக்க வேண்டியதில்லை.
நம்முடைய எண்ணங்கள் அல்லது உணர்வுகளை புறக்கணித்தால் அவர்களை விட்டு விலகுவது நல்லது. அவர்களுடைய செயல்களுக்காக நம்மை உதாசீனப் படுத்தினால் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் எதிர்ப்பை அவர்களின் முகத்திற்கு எதிராக தெரிவிக்கலாம். இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை. நம்மை உதாசீனப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
என்ன நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!