
உலகில் பெரும்பாலானோர் அறிவு என்பது பரம்பரை பரம்பரையாக வரும் ஒரு விஷயம். என்றும், மிடில் கிளாஸ் மக்களால் அது முடியாது என்றும் கருதி ஒதுங்கி நின்று வருகின்றனர். உண்மை என்ன? ஒருவனது அறிவுக்கும் அவனது பரம்பரைக்கும் சம்பந்தம் உண்டா? இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டி புரூயர்ஸ் என்பவர் "மேதைகளுக்கு முன்னோர்களோ, பின்னோர்களோ காரணமில்லை. அது அவர்களாகத் தேடிக்கொண்டது" என்கிறார்.
வாழ்க்கை வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் கடினமான உழைப்பால் வெற்றியை பரிசாகப் பெற்றுக் கொண்டவர்கள்.து ளசிதாசர், காளிதாசர், ஷேக்ஸ்பியர், நியூட்டன், கலிலியோ, ஆபிரகாம் லிங்கன் போன்ற பல அறிஞர்கள் தனி மனிதர்களே ,அவர்களது மேதைத்தனம் அவர்களது முன்னோர்களுக்கும் இல்லை, அவர்களின் பின் வழி சாந்தியினருக்கும் இல்லை.
ஷேக்ஸ்பியர் ஒரு கசாப்புக்காரரின் மகன், நியூட்டன் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி மகன், இவர்கள் இருவருக்கும் பின்னே அவர்களது வழியில் யாரும் புகழ் பெறவில்லை.
உயர்ந்த அரிஸ்டோகிரேடிக் குடும்பங்களில் பிறந்த சிலர் மட்டுமே புகழ்பெற்றனர். இந்த வரிசையில் தத்துவமேதை பேகன், வரலாற்று ஆசிரிய மேதை கிப்பன் போன்றோரைக் குறிப்பிடலாம். மற்றபடி உலகப் புகழ் பெற்றவர்கள் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கம் என்ற தாழ்ந்த வகுப்பு குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்தான்.
புகழ்பெற்ற கவிஞர் கீட்ஸ் குதிரை லாய காவல் காப்பாளரின் மகன், மார்லோ ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி மகன், எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு ஏழை குமாஸ்தாவின் மகன், லிங்கன் ஒரு விவசாயி மகன், விஞ்ஞான புதினங்கள் எழுதிய ஹெச்.ஜி.வெல்ஸ் ஒரு துணிக்கடை சிப்பந்தியின் மகன், பிராங்க்ளின் ஒரு அச்சு தொழிலாளியின் மகன்.
இதில் ஆச்சரியமான விஷயம் பல மேதைகள் தகாத வழியில் பிறந்தவர்கள். பிறப்பு வழி எவ்வாறாயினும், வளர்ப்பு வழியே ஒருவன் அறிஞனாக உதவுகிறது. குழந்தைகள் களிமண் போன்றவர்கள், அதை ஒரு நல்ல வடிவத்திற்கு கொண்டு வருபவர்கள் பெற்றோர்களே. குழந்தைகளை அறிவாளி ஆக்குவதில் தந்தையை விட தாயே பெரிதும் காரணமாக இருக்கிறார்.
ஆபிரகாம் லிங்கன் ஒரு சமயம் "அம்மா எனது இத்தனை ஆற்றலுக்கும் நீ தான் காரணம், அறிவு புகட்டியவளே நீதான், உனக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது என்றே தெரியவில்லை", என்று எழுதினார்.
"ஒரு குழந்தை நல்லதாகவோ கெட்டதாகவோ ஆவதற்கு முழுப் பொறுப்பு அதன் தாயே ஆகும்" என்றார் நெப்போலியன். கவிஞர் கதே தனக்கு கவி ஞானம் வந்ததே தன் தாயாரால் தான் என்கிறார். இதே கூற்றை கூப்பர், ஸ்விட், தாம்சன், சிஸரோ,ஸ்காட் போன்றோரும் கூறுகின்றனர்.
பல புகழ்பெற்ற மேதைகளின் வாரிசுகள் தருதலைகளாக மாறிய வரலாறும் உண்டு. தத்துவ ஞானி மார்க்ஸ் அரிலியேஸ் மகன் ரவுடி, அறிஞர் சிஸரோவின் மகன் பெரும் குடிகாரன். மார்ட்டீன் லூதர் மகனோ பெரும் ரவுடி.
"மேதைத்தனம் ஒரு காற்று அது விரும்பிய இடத்தில் வீசுகிறது.அதற்கு சுற்றும் சுழலும் உறுதுணை புரிகின்றன" என்கிறார் அறிஞர் சாமுவேல் ஸ்மித். அதுதான் உண்மை.
முக்கியத்துவமில்லாத விசயங்களை மூளைக்குள்ளே கொண்டு செல்லாதீர்கள். இதனால் உங்கள் முன்னேற்றங்கள் முடங்கிப்போகலாம். எது தேவையில்லை என்பதை பலமுறை யோசியுங்கள். தேவையில்லை என்றான பிறகு அதைப்பற்றி எப்போதும் யோசிக்காதீர்கள்.
வாழ்க்கையில் எந்த திசையில் செல்லவேண்டும் என்பதை தீர்மானித்து விட்டால், அந்த வானத்தையும் எட்டலாம், அதை யாராலும் தடுக்க முடியாது, ஆகையால் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள். மனதை சமநிலையில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு ஞானியின் தவநிலை தேவை இல்லை. குழந்தையின் மனநிலை இருந்தாலே போதும். பலவற்றை சிந்தியுங்கள். ஆனால் ஒன்றில் நிலைப்படுத்துங்கள். சாதிக்க வேண்டும் என்ற வெறியும், எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியமும் உங்களுக்குள் இருக்கும் வரை நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம்.