
வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்பார்கள். பிடிவாதம் பிடிப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட குணத்தை வெளிப்படுத்துகிறது. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடிப்பது நடைமுறைக்கு ஒத்துவராத குணமாகும். வாழ்க்கையில் நெளிவு சுளிவு தெரிந்து, விட்டுக்கொடுத்து போவது தான் நல்லது. தான் சொல்வதுதான் சரி, தான் நினைப்பதுதான் சரி என்று அவர்களுடைய பிடியிலேயே நிற்பது என்பது தவறான செயலாகும். தன் இஷ்டப்படி மனம்போன போக்கில் நடந்து கொள்வது என்பது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராத குணமாகும்.
பிடிவாதம் பிடிப்பது பல நேரங்களில் நல்லதாகவும், சில நேரங்களில் கெட்டதாகவும் போகலாம். ஒரு நல்ல விஷயத்தை சாதிக்க பிடிவாதத்துடன் இருப்பது நேர்மறை தன்மையாக கருதப்படுகிறது. அதுவே மற்றவருடன் தகராறு ஏற்படுவதற்கு காரணமாகவும், தவறான செயல்களை செய்ய வழிவகுப்பதாகவும் இருந்தால் அது கண்டிக்கதக்கது.
பிடிவாதத்தை மாற்றுவதற்கு முதலில் ஏன் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது முதல் படியாகும். சிலருக்கு குழந்தைப் பருவ அனுபவங்களினாலோ அல்லது ஏதேனும் மன அழுத்தங்கள் காரணமாகவோ பிடிவாத குணம் இருக்கலாம். பிடிவாதத்தை நேர்மறையான குணங்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம். தன்னம்பிக்கையுடன் உறுதியாக இருப்பதும், தைரியம் கொண்டு செயலாற்றுவதும் என நேர்மறையான குணங்களை வளர்த்துக் கொள்ளலாம்.
பிடிவாதத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதும், பிடிவாதம் பிடிக்கும் பொழுது அதை ஏன் செய்கிறோம் என்பதைப் பற்றிய சுய மதிப்பீடு செய்வதும் பிடிவாதத்தை வெளிப்படுத்தாமல் இருக்க உதவும். வேண்டாத பிடிவாதத்தினால் வாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். பிடிவாதத்தைக் குறைக்க தன்னம்பிக்கை வார்த்தைகளும், நல்ல நண்பர்களின் உதவியும், பிடிவாதத்தை தளர்த்துவதற்கான திறன்களையும் உத்திகளையும் கற்றுக் கொள்வது நல்லது.
பிடிவாத குணத்தை மாற்றுவது என்பது ஒரு சில நாட்களில் நடக்கக்கூடிய காரியமல்ல. இது ஒரு நீண்ட செயல்முறையாகும். முதலில் பிடிவாதத்திற்கான காரணத்தை தெரிந்துகொண்டு, சரியான அணுகு முறையை கையாண்டு சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நேர்மறையான எண்ணங்களுடன், நல்ல நண்பர்களின் நட்பும், அவர்களுடைய தன்னம்பிக்கையான வார்த்தைகளும் மனநிலையை மாற்ற உதவும். அதற்கு பொறுமையாகவும், தொடர்ச்சியாகவும் முயற்சி செய்ய சிறந்த பலனைப்பெற முடியும்.